பா.ம.க., ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாலு அறிக்கை: அரியலுார்
மாவட்டத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 10 இடங்களில் எண்ணெய் மற்றும்
எரிவாயு கிணறுகளை அமைக்க முடிவு செய்து, அதற்காக, மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளது. அந்த மாவட்டத்தில், 70 சதவீதம்
மக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இந்த
திட்டத்தால் மாவட்டமே பாலைவனமாகும்.முதல்வர் ஸ்டாலினை, உங்க டாக்டர் சந்திச்சி பேசினப்போ இதை பற்றி எல்லாம் சொல்லி இருக்க மாட்டாரா என்ன?தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் பேட்டி: தமிழகத்தில், 388 ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதனால், ஊராட்சிகளின் எண்ணிக்கை குறையும். எனவே, தமிழகத்தில், பெரு ஊராட்சிகளை பிரிக்கவும், புதிய ஒன்றியங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுக்கு பதிலா இணைக்கிற ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களை, அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு மாற்ற கோரிக்கை வைக்கலாமே!கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் பேட்டி: தமிழகத்தில், சாலை வரி உயர்வால், லாரி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், உயர்த்தப் பட்ட காலாண்டு வரியை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல, தி.மு.க., அரசின் குறைகளை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம்.கூட்டணி, 'சீட்' ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்காக, தேர்தல் நேரத்துல மட்டும் சிலர் ஆளுங்கட்சிக்கு எதிரா வாய் திறப்பாங்க... நாங்க அவங்க இல்லை என்கிறீர்களா?தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் கந்தவேல் முதல்வருக்கு அனுப்பிய மனு: பொங்கல் பரிசு தொகுப்பு, 1,000 ரூபாயை ரொக்கமாக வழங்குவதற்கு பதிலாக, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணி எடுக்க வசதியாகவும், சிந்தாமணி போன்ற அரசின் கூட்டுறவு பண்டக சாலைகளில் மளிகை உள்ளிட்ட தேவையான பொருட்களை கொள்முதல் செய்யவும், 'டோக்கன்' வழங்கலாம். இதன் மூலம், கோ - ஆப்டெக்ஸ், சிந்தாமணி போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இதுபற்றி முதல்வர் பரிசீலித்து, திட்டத்தை மாற்றி அறிவிக்க வேண்டும்.நீங்க வேற... பொங்கல் பரிசு தொகுப்பு, 1,000 ரூபாயில் பாதிக்கும் மேல, 'டாஸ்மாக்' வியாபாரம் மூலமா அரசுக்கே திரும்ப வந்துடும் பாருங்க!