ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேச்சு: ஓட்டுப்பதிவு
இயந்திரத்தை, 'ஹேக்' செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், லோக்சபா
தேர்தலில், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என, கனவு
காண்கின்றனர்; அது நடக்காது. தி.மு.க., கூட்டணியில், கூடுதலாக ஒரு லோக்சபா
தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டுள்ளோம். இவங்களுக்கு அப்புறம் கட்சி துவங்கியவங்க எல்லாம், 10 - 15 கேட்குறாங்க... இவரோ ரெண்டு, பிளஸ் ஒண்ணு கிடைச்சா போதும்கிறாரே! பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேச்சு: சென்னை மாநகருக்கு மழையால் தேவையான தண்ணீர் கிடைத்தாலும், முறையான சேமிப்பு இல்லாததால் வீணாக கடலில் கலக்கிறது. சென்னையில் பல்லுயிர் பூங்கா இல்லை. கோயம்பேடு பஸ் நிலையம் இருந்த இடத்தில் பல்லுயிர் பூங்கா அமைக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க பசுமை தாயகம் போராடி வருகிறது. அரசு தான் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.சென்னையின் சுற்றுச்சூழலுக்கு தேவையான விஷயம் தான்... ஆனால், ஆட்சியாளர்களுக்கு தேவை வேறாக இருந்தால், என்ன செய்வது?த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறு திகளை தி.மு.க., அரசு நிறைவேற்றாமல் உள்ளது. குறிப்பாக, பனை தொழிலை மேம்படுத்த பனை வெல்லத்தை கொள்முதல் செய்து, நியாய விலை கடைகளில் அரசு வழங்க வேண்டும். விவசாயம் சம்பந்தமாக தெரிவித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.ஒண்ணு, ரெண்டுன்னா பரவாயில்ல... 500க்கும் மேற்பட்ட வாக்குறுதியை ொடுத்திருக்கிறதால, ஐந்தாண்டு அவகாசத்துக்குள்ள செய்வாங்க, பொறுங்க!தமிழக பாடநுால் நிறுவன வாரிய முன்னாள் தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை: தேசிய அளவில், 'இண்டியா' கூட்டணி அமோக வெற்றி பெற, தேர்தல் பத்திரம் செல்லாது என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெள்ளோட்டமாக அமைந்துள்ளது. ஊழலுக்கு எதிரான பா.ஜ.,வின் கொள்கைக்கு, தேர்தல் பத்திரம் விவகாரம் கேலிகூத்தாகியுள்ளது. அரசியல் ஊழலுக்கு தேர்தல் பத்திரம் திட்டம் வழிவகுக்கும் என்பதால், அதை ரத்து செய்திருப்பது வரலாற்றில் மகத்தான தீர்ப்பாக மாறியிருக்கிறது.இந்த ஒரு தீர்ப்பை வச்சே, 'இண்டியா' கூட்டணி அமோக வெற்றி பெறும்னு சொல்றாரு... அதையும் பார்க்கலாம்!