உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / முட்டைக்கோஸ் சாகுபடியில் ரூ.3.55 லட்சம் லாபம்!

முட்டைக்கோஸ் சாகுபடியில் ரூ.3.55 லட்சம் லாபம்!

மொத்தம், 1.5 ஏக்கரில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்து, நிறைவான லாபம் பார்த்து வரும், கிருஷ்ணகிரி மாவட்டம், பீர்ஜேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபி: இதுதான் எங்களோட பூர்வீக கிராமம். விவசாயம் தான் வாழ்வாதாரம். நான், 10வது முடிச்சுட்டு, லேப் டெக்னீஷியன் கோர்ஸ் படிச்சேன். படிப்புக்கேற்ற வேலைக்கு போகணும்கிறதுல ரொம்ப உறுதியாக இருந்தேன்.அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுட்டு இருந்தேன். விவசாயியா மாறுவோம்னு நினைச்சதில்லை.ஆனால் எதிர்பாராத விதமாக அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரால் விவசாயத்தை கவனிக்க முடியவில்லை. அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிடுச்சு. விவசாயத்தில் இறங்கிய பின் தான் இதில் கிடைக்குற நிம்மதியை உணர முடிந்தது.கடந்த சில ஆண்டுகளாக ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏகப்பட்ட நர்சரிகள் வந்து விட்டன. தேவையான நாற்றுகளை வாங்கி வந்து பயிர் செய்கிறோம். கத்தரிக்காய், தக்காளி, காலிபிளவர், கேரட், முட்டைக்கோஸ் உட்பட பல வகையான நாற்றுகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.ஒரு நாற்று, 60 காசு என்ற விலையில் தேன்கனிக்கோட்டையில் இருந்து, 50,000 முட்டைக்கோஸ் நாற்றுகளை வாங்கி 1.5 ஏக்கரில் நட்டேன். நான் பயிர் செய்த முட்டைக்கோஸ் ஹரிராணி ரகம். பொதுவாக 1 கிலோவில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள முட்டைக்கோசை தான் வியாபாரிகள் அதிகம் விரும்புகின்றனர்.இயற்கை இடுபொருட்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கேன். அதற்கான பலனை கண்கூடா உணர முடிந்தது. நல்ல விளைச்சல். என் தோட்டத்தில் விளைந்த முட்டைக்கோசை, வியாபாரி ஒருவர் நேரடியாக அறுவடை செய்து, எடுத்து செல்வார். கடந்த காலங்களில் ஒரு மூட்டைக்கு, 500 ரூபாய்க்குள் தான் விலை கிடைத்தது; இந்த முறை மூட்டைக்கு குறைந்தபட்சம், 800 ரூபாய் விலை கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம்.மொத்தம் 1.5 ஏக்கரில் உற்பத்தி செய்த கோஸ், 707 மூட்டை அளவுக்கு இருந்தது. இதன் விற்பனை வாயிலாக, மொத்தம் 5 லட்சத்து 65,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. எரு, உழவு, நாற்றுகள், நடவுக்கூலி, இடுபொருட்கள் உள்ளிட்ட செலவுகள் 2 லட்சத்து 10,000 ரூபாய் போக மீதி, 3 லட்சத்து 55,000 ரூபாய் நிகர லாபமாக கிடைச்சிருக்கு.காய்கறிகள் சாகுபடியை பொறுத்தவரை, அந்தந்த பகுதி விவசாயிகள் எதை அதிகமாக பயிர் செய்கின்றனரோ, அதை தவிர்த்து, வேறு காய்கறிகளை நாம் சாகுபடி செய்தோம் எனில் கூடுதல் வருமானம் பார்க்கலாம்.இதற்கு என் அனுபவமே ஒரு சிறந்த உதாரணம். எங்கள் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, தக்காளி, காலிபிளவர் அதிகப் பரப்பில் சாகுபடி செய்தனர். நான் அந்தப் பயிர்களை தவிர்த்து, முட்டைக்கோஸ் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன்.தொடர்புக்கு: 96881 84994


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !