பெயர், ஊர் வெளியிட விரும்பாத ஒரு ஏழைத்தாய்: பில்டிங் மேஸ்திரி ஒருவரிடம் தினக்கூலி வேலை பார்த்து வந்தார் என் கணவர். சொற்ப வருமானத்திலும் கூட என்னை சொகுசாக பார்த்துக் கொண்டார். மகன் பிறந்த பின் நானும் வேலைக்கு வருவதாகக் கூறியும் கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. 'ஏன்டா... நீ தான் அஞ்சாம் வகுப்பு கூட தாண்டலை... உன் மகனை 12ம் கிளாஸ் வரையாவது படிக்க போட வேண்டாமா... அவதான் வேலைக்கு வர்றேன்னு சொல்றாளே... கூட்டிட்டு போய் பழக்கிக் கொடுடா' என்று சொந்தங்கள் கூறினர்.'அண்ணே... 12ம் வகுப்பு என்ன பெரிய படிப்பு... என் மகனை, உயிரை கொடுத்தாவது இன்ஜினியருக்கு படிக்க வைக்காமல் விட மாட்டேன்...' என்றார். ஆனால் எதிர்பாராமல் நடந்த விபத்தில், கணவர் என்னை தவிக்க விட்டு போன போது, என் மகனுக்கு, 4 வயது. வேறு வழியின்றி, நாத்தனாருடன் சித்தாள் வேலைக்கு புறப்பட்டேன். சுமை துாக்கி பழக்கமில்லை என்பதால் தலை கனத்துப் போனது. கைகள் சிவந்தன. ஆனாலும், 'மகனை பில்டிங் இன்ஜினியரா ஆக்குவேன்'னு கணவர் கூறியதை நான் மறக்கவில்லை. அதனால் ஞாயிறன்றும் வேலைக்கு செல்வேன். 'இன்ஜினியருக்கு படிக்க எம்புட்டு பணம் செலவு ஆவும்னு தெரியுமா இவளுக்கு?' என்று என்னுடன் வேலை பார்த்தோர் சொன்னதை கேட்டு, 'நம்மால் முடியுமா' என லேசா சந்தேகமும், பயமும் வந்தது.'உன்னால் முடியும் தாயி. இப்ப கூலி 200 வாங்குற. நீ வாங்குற கூலியில் தினமும் 50 ரூபாய் ஒதுக்கு. உன் புள்ளையோட படிப்புக்கு பணம் சேர்த்து விடலாம்...' என்று மேஸ்திரியின் மனைவி தான் நம்பிக்கை தந்தார். அவர் கூறியபடி செய்தேன். ஒரு மாதம் முடிந்ததும், 'எம்புட்டு சேர்த்துருக்க...' என்று அவர் கேட்க, 2,000 ரூபாயை அவரிடம் தந்தேன்.'தினம், 50 ரூபாய் சேர்க்க சொன்னீங்க; சில நாள், 80 ரூபாய் வரை சேர்த்தேன். மொத்தமாக 2,000 சேர்த்துட்டேன்...' என்றேன். 'உன்னால் எல்லா மாதமும் 2,000 ரூபாய் சேர்க்க முடியுமா?' என்று கேட்க, 'கூலி கூடுச்சுன்னா, 3,000 கூட சேர்த்துடுவேன்' என்றேன். பின், பான் கார்டு முதல் பேங்க் அக்கவுன்ட் வரை நிறைய விஷயங்களை செய்ய உதவினார். அடுத்த இரு மாதத்தில், என் பேங்க் அக்கவுன்டில் இருந்து தானாகவே பணம் பிடித்தனர். இது தான் மியூச்சுவல் பண்டில் மாதா மாதம் பணம் சேர்ப்பது என்று விளக்கி சொன்னார், மேஸ்திரியின் மனைவி. கூலி அதிகமான போதெல்லாம் கூடுதலாக சேர்க்க ஆரம்பித்தேன். 12 ஆண்டுகள் ஓடி விட்டன. 10 லட்சத்துக்கும் மேல் சேர்த்து விட்டேன். இதோ என் மகனும் இன்ஜினியர் படிப்பில் சேர்ந்து விட்டான். இன்னும் சில ஆண்டுகள் தான்... கல்லுாரியில் இருக்கும் கட்டடங்களை விட, உயரமான கட்டடங்களை கட்டுவான் என் மகன்!