உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சண்டை கோழிகள் வளர்க்கலாம் என்ற திட்டமும் இருக்கு! அழைத்தால் வருவேன் அனைத்தும் தருவேன் என்றார் என் அம்மா!

சண்டை கோழிகள் வளர்க்கலாம் என்ற திட்டமும் இருக்கு! அழைத்தால் வருவேன் அனைத்தும் தருவேன் என்றார் என் அம்மா!

குறைந்த முதலீட்டில், எளிமையான முறையில், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு கணிசமான வருமானம் பார்த்து வரும், தஞ்சாவூர் மாவட்டம், வடகால் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்:கடந்த ஏழு ஆண்டு களாக, நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுட்டு இருக்கேன். என் வீடு, கோழிக் கொட்டகை, தோட்டம், மீன் குளம் எல்லாமே ஒருங்கிணைந்து இருக்குற மாதிரி அமைத்திருக்கிறேன். மொத்த பரப்பு, 15,000 சதுர அடி. 750 சதுர அடியில் வீடு, 2,500 சதுர அடியில், மீன் குளம் அமைத்திருக்கிறேன்.மீதி பரப்பில் கோழிகளுக்கு சிறு சிறு கொட்டகைகளும், கோழிகள் மேயுறதுக்கான பகுதியும் அமைத்திருக்கிறேன்.நாட்டுக் கோழிகள் வளர்ப்புக்கு இந்த இடம், மிகவும் உகந்ததாக இருக்கு. 5 பூவரசு, 2 வேம்பு, 2 முருங்கை மரங்களும் இங்கு இருப்பதால், கோழிகளுக்கு தேவையான நிழலும், குளிர்ச்சியான சூழலும் கிடைக்கிறது. இந்த மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய இலைதழைகள் கோழிகளுக்கு பசுந்தீவனமாக பயன்படுகிறது.நான் வளர்ப்பது சிறுவிடை ரக நாட்டுக் கோழிகள். எப்பவும், 50 தாய்க்கோழிகளும் 10 சேவல்களும் நிரந்தமா இருக்குற மாதிரி பராமரிக்குறேன். முட்டைகளை பொரிக்க வைக்க, 'இன்குபேட்டர்' பயன்படுத்துவதில்லை. தாய்க்கோழிகள் வாயிலாக முட்டைகளை அடைகாக்க வைத்து குஞ்சுகள் பொரிக்கிறதால, பொரிப்பு திறன் நல்லா இருக்கு. குஞ்சுகள் ஒரு மாசம் வரைக்கும் தாய்க்கோழியோடு சேர்ந்திருக்க அனுமதிக்கிறேன்.காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரைக்கும் தோட்டத்தில் கோழிகள் மேயும். இரவு நேரத்தில் மரக்கிளைகளில் தங்கிக்கும். அதிகமாக மழை பெய்தாலும் பாதுகாப்பாக இருந்துக்கும். பனிப்பொழிவு அதிகமாக இருந்தாலும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.இப்படி இயற்கை முறையில் வளர்ப்பதாலும், குறைந்த செலவில் நல்ல ஊட்டமான தீவனம் கொடுப்பதாலும், என் நாட்டுக்கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தியோடு நல்லா திடகாத்திரமாக வளர்கின்றன.முட்டைகள், கோழிகள் விற்பனை வாயிலாக, மாசத்துக்கு 27,400 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் தீவனம், பராமரிப்பு செலவு போக, 25,000 ரூபாய் லாபமாக கிடைக்கும். இந்த லாபம் குறைவாக இருப்பது போல் தோன்றலாம்; ஆனால், மாதம், 25,000 ரூபாய் என்ற கணக்கில், ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.இப்ப செஞ்சுட்டு இருக்குற சிறுவிடை ரக நாட்டுக்கோழி வளர்ப்பு தொழிலை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், வான்கோழி, கருங்கோழி, சண்டைக் கோழிகள் வளர்க்கலாம் என்ற யோசனையிலும் இருக்கேன். தொடர்புக்கு:81488 09226.

'அழைத்தால் வருவேன் அனைத்தும் தருவேன்' என்றார் என் அம்மா!

தாய்க்கு, 85 அடி உயரத்தில் கோவில் எழுப்பியுள்ள, கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் மருத்துவராக பணிபுரியும் ஜெகந்த்:உலகத்தில் பிறந்த மனுஷங்க மட்டுமல்லாமல், எந்த ஜீவராசிக்கும் அம்மா தான் முதல் தெய்வம். எங்கம்மா ஜெயமீனா, தேனி, பண்ணைபுரத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்தவங்க. எங்கப்பா, குடிநீர் வடிகால் வாரியத்தில் இன்ஜினியரா இருந்தாரு. அவரை திருமணம் செய்து கொண்டு சுருளிப்பட்டியில் குடியிருந்தாங்க.அம்மாவுக்கு கேன்சர் இருந்தாலும் தன்னம்பிக்கையோடும், தைரியத்துடனும் இருந்தாங்க. 2013ல் அவங்களோட 63வது வயதில் இறைநிலை அடைந்தாங்க. கடந்த 10 ஆண்டுகளாக நாங்களும், உறவினர்களும் அம்மாவை தான் தெய்வமாக வணங்குறோம்.அவர் எங்களுடன் இல்லாவிட்டாலும், தெய்வமாக இருந்து எங்களை ஆசிர்வதித்து கொண்டிருக்கிறார். அதை நாங்கள் ஆத்மார்த்தமாக உணர்கிறோம். இது முழுக்க முழுக்க கோவில் மட்டுமே. நினைவுச்சின்னம் இல்லை.வழிபாடுகளுடன், நோயால் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவி செய்வது தான் முதல் நோக்கம். புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தாலே எளிதாக குணப்படுத்தி விடலாம். அதனால், அதன் பாதிப்புடன் இருக்கிற குழந்தைகளுக்கான சிகிச்சை தொகையை கொடுத்து உதவி செய்ய இருக்கிறோம்.குணமாகி சந்தோஷப்படும் குழந்தைகளின் முகத்தில் நிச்சயம் என்னோட அம்மா தெரிவாங்க. அந்த சந்தோஷமே போதும். கேரள சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை செலவுக்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தோம். இதுபோல பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய போகிறோம்.கம்பம் அருகே சுருளி தீர்த்தம் பகுதியில் என் அம்மாவிற்கு, 85 அடி உயரத்தில் கோவில் எழுப்பியுள்ளேன். அம்மாவின் சிலையை தரைதளத்திலும், முதல் நிலையில் ஏழுமலையானும், இரண்டாம் நிலையில் பழனி முருகனும், அடுத்து சிவபெருமானை தரிசிக்கும்படி கோவிலை அமைத்திருக்கிறோம்.எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அன்னையே நாம் வணங்கும் பிரதான தெய்வமாக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் வைத்திருக்கிறேன்.அம்மா என்றால் பரிசுத்தமான அன்பு. களங்கமில்லாதது வாய்மை, துாய்மை, தாய்மை என்பர். அதன் அடையாளமாகவும், மத அடையாளங்கள் கூடாது என்பதற்காகவும் வெண்ணிற கொடியை மேலே பறக்க விட்டிருக்கிறேன். ஜாதி, மத அடையாளங்களின்றி எல்லாரும் இக்கோவிலுக்கு வரலாம்.சக்திமிகு அன்னை ஸ்ரீஜெயமீனா திருக்கோவில் என்றே பெயர் வைத்திருக்கிறேன். 'ஏதேனும் சொல்லுங்கள்' என, எங்கள் அம்மாவிடம் கேட்டபோது, 'அழைத்தால் வருவேன்; அனைத்தும் தருவேன்' என்றார். அதுவே இக்கோவிலின் வேதவாக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை