சொந்த காலில் நின்று வாழ்ந்து காட்டும், விருதுநகர், லட்சுமி காலனியில் வசித்து வரும் தங்கமாரியம்மாள்: சாத்துார் பக்கத்தில், கோட்டூர் அடுத்த சின்னையாபுரம் கிராமம் தான் சொந்த ஊர். நான் மூத்தவள், எனக்கு இரண்டு தம்பிகள். வறுமையான குடும்பம், 14 வயதில் என்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. பெண் குழந்தை பிறந்துச்சு. ஆனால், புகுந்த வீட்டில் ஏகப்பட்ட சண்டை, சச்சரவுகள். ஒரு கட்டத்தில், என்னை விவாகரத்து செய்துட்டு, பிள்ளையையும் வாங்கிட்டு போய், இன்னொரு திருமணம் செய்து கொண்டார்.எனக்கு, வயதில் ரொம்ப மூத்தவரோட இரண்டாவது திருமணம் முடிச்சு வெச்சாங்க. மறுபடியும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த நேரம், என் வீட்டுக்காரர் மேல் ஒரு போலீஸ் கேஸாச்சு. இவரையும் பிரிஞ்சிட்டேன்.சமைக்க கொஞ்சம் பாத்திரமும், சின்ன அடுப்பையும் எடுத்துக்கிட்டு, கைக்குழந்தையோடு, ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னைக்கு போனேன்; பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்கவில்லை. அப்போது தான், ஒருத்தர் தள்ளுவண்டியில் சுடச்சுட சுண்டல், வேர்க்கடலை, பட்டாணி விற்பனை செய்றதை பார்த்தேன்.அதை நாம ரயிலில் விற்கலாம்னு, 300 ரூபாயில் கொஞ்சம் பணத்துக்கு சுண்டலும், பொட்டலம் மடிக்க பழைய புத்தகமும் வாங்கினேன். ரயிலில் சுண்டல் விற்றதில், 180 ரூபாய் லாபம் கிடைச்சது. மகளை, கொடைக்கானலில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஹாஸ்டலில் விட்டேன். அவளை பார்க்க போகும்போது, கொடைக்கானல் எஸ்டேட்டில் பட்டை, கிராம்பு எடுக்கவும், தேங்காய் சுமக்கவும் கூலி வேலைக்கு போவேன்.எப்படியெல்லாம் உழைக்க, சம்பாதிக்க முடியுமோ அதையெல்லாம் செய்தேன். அடுத்து, காளான், புரொக்கோலி, தேன், பூன்னு வியாபாரத்தை மாத்திடுவேன். ஒருவேளை அன்னிக்கு வியாபாரத்துக்கு ஒண்ணுமே இல்லைன்னா, 150 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி பருத்திப்பால் செய்து விற்றால், இரண்டு மணி நேரத்தில் ஊருக்குள்ள சுற்றி, 500 ரூபாய்க்கு விற்றுவிடுவேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, என் மகளை பேஷன் டிசைனிங் டிப்ளமா படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணத்தையும் முடிச்சுட்டேன். இப்போது, எல்.ஐ.சி., முகவராகவும் இருக்கேன். பிளாட்பாரத்தில் கைக்குழந்தையோட கிடந்த நான், யார்கிட்டயும் கையேந்தாம இவ்ளோ தாண்டி வந்திருக்கேன். இது சின்ன வெற்றியாக இருந்தாலும், என் கடந்த காலத்தில் இருந்து நான் இங்க வந்து சேர்ந்திருக்கிறதே பெரிய சாதனை தான்.என் நிலைமையிலோ, அதைவிட மோசமான நிலைமையிலோ இருக்கிற தோழியருக்கு சொல்லிக்கிறேன்... அதிக மனவலிமை, முயற்சி, திறமை, தன்னம்பிக்கையோட எழுந்திருங்க; ஓடி ஜெயிச்சிடலாம்!