சமூகத்திற்கான குரல்...! தலித் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சங்க, எப்.எம்.,ன் தொகுப்பாளர் ஜெனரல் நர்சம்மா: ஆசியாவிலேயே முதல்முறையாக, தலித்களுக்காக ஆந்திர மாநிலம், 'மேதக்' மாவட்டத்தில் மச்சனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டது, 'சங்கம் எப்.எம்., 90.4' இதில் தொகுப்பாளினியாக பணிபுரிகிறேன்.தலித் சமூக மக்களுக்காக, அரசு சொல்லிக் கொள்ளும்படி எவ்வித நலத்திட்டத்தையும் செய்யவில்லை. இதை எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஏன் நம் மக்களின் நலத்திட்டங்களுக்கு ஒரு மீடியா துவங்கக்கூடாது என்று எண்ணினேன்.சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விவசாயம் பற்றியும், உடல் நலம் பற்றியும் பயனுள்ள தகவல்களை இந்த சேனலில் கொடுக்கிறோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட, பெண்களின் ஒட்டு மொத்த குரலாக, தற்போது இந்த எப்.எம்., ஒலிக்கிறது. வேளாண் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம். இந்த எப்.எம்.,ல் முதலாளியாகவும், தொழிலாளியாகவும் மக்களே செயல்படுகின்றனர். எங்கள் குரலால், ஒட்டுமொத்தமாக, 75 கிராமத்திலிருக்கும், 50 ஆயிரம் மக்கள் கட்டுப்பட்டுள்ளனர். இந்த எப்.எம்.,ல் ஐந்தாயிரம் பெண் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் இரண்டாயிரம் பேர், நிதியாக, மாதந்தோரும் தரும் ஐந்து ரூபாய் தொகை தான், எங்கள், எப்.எம்., தொகுப் பாளினிகளுக்கு சம்பளம்; விளம்பரம் கிடையாது; சமூக சேவைக்காகவே ரேடியோவை நடத்துகிறோம்.நிகழ்ச்சியைக் கேட்கும் நேயர்களும், மறுநாள் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களாக மாறுவது தான், எங்கள், எப்.எம்.,ன் சிறப்பு. இரவு 7 மணி முதல், 9 மணி வரை, பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத கிராமப்புற தலித் பெண்கள் நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர். நாங்கள் படிக்கவில்லை என்றாலும், எப்.எம்., சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களில் கில்லாடிகள்!