உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மறுதாம்பு வாழையில் ஓராண்டு லாபம் ரூ.5.85 லட்சம்!

மறுதாம்பு வாழையில் ஓராண்டு லாபம் ரூ.5.85 லட்சம்!

மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம்:இதுதான் என்னோட பூர்வீக கிராமம். நாங்க விவசாய குடும்பம். தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் தான் என் தாத்தாவும், அப்பாவும் விவசாயம் செய்தனர். நான் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, கனரக வாகன ஓட்டுனராக பல ஆண்டுகள் வேலை பார்த்தேன். சிறு சிறு விபத்துகள் நேர்ந்ததால், உடன்பிறந்தோர் மிகவும் பயந்து விட்டனர். அவர்களின் வற்புறுத்தலால், அந்த வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தில் இறங்க முடிவு செய்தேன்.இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு, 11 ஏக்கர். இங்கு சின்னதாக வீடு கட்டி, மனைவி, குழந்தைகளோடு வசிக்கிறேன். 2 ஏக்கர் பரப்பில், வீடு, மாட்டுக் கொட்டகை, மீன் குளம், மரச்செக்கு அமைச்சிருக்கேன். 3 ஏக்கரில், ஆறு வருஷத்துக்கு முன்னாடி நட்ட மறுதாம்பு வாழைகள் இருக்கு. இன்னொரு 3 ஏக்கரில், நாலு மாதங்களுக்கு முன்னாடி நடவு செய்த வாழைக் கன்றுகள் வளர்ந்துட்டு இருக்கு. மீதி 3 ஏக்கரில் ஆத்துார் கிச்சலிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுனி, பூங்கார் உள்ளிட்ட நெல் ரகங்களை பயிர் பண்ணிட்டு இருக்கேன்.இயற்கை இடுபொருட்கள் தேவைக்காக, 20 நாட்டு மாடுகள் வளர்க்குறேன். மாடுகளின் கழிவுகளை பயன்படுத்தி ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மூலிகை பூச்சி விரட்டி உள்ளிட்ட இடுபொருட்கள் தயார் செய்து பயிர்களுக்கு கொடுக்கிறேன். இதனால், பயிர்கள் நன்கு ஊட்டமாக வளர்ந்து நல்ல விளைச்சல் கொடுக்குது. இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யும் வாழைத்தார்களை, பழக்கடைகளிலோ, வியாபாரிகளிடமோ விற்பனை செய்தால், ரசாயனம் பயன்படுத்தி தான் பழுக்க வைப்பர். அது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கும். இயற்கை முறையில் பழுக்க வைத்து, என்னோட வீட்டுக்கு முன்னாடி கடை போட்டு, ஒரு சீப்பு, 50 - 60 ரூபாய்னு விற்பனை செய்கிறேன்.இதில், தாருக்கு சராசரியாக 400 ரூபாய் வீதம் கிடைக்கிறது. 1 ஏக்கரில் கிடைக்கும், 550 தார்கள் வாயிலாக, 2.20 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. 3 ஏக்கரில் உள்ள மறுதாம்பு வாழைகள் வாயிலாக, 6.60 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஒரு ஆண்டிற்கு, 1,500 பக்கக் கன்றுகள் விற்பனை செய்வதன் வாயிலாக, 45,000 ரூபாய் வருமானம்.ஆக மொத்தம், 3 ஏக்கர் மறுதாம்பு வாழை வாயிலாக, ஓராண்டிற்கு, 7.05 லட்சம் கிடைக்கிறது. இதில் பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள், 1.20 லட்சம் போக, 5.85 லட்சம் ரூபாய் லாபம். மறுதாம்பு வாழை வாயிலாக, இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே மாதிரி லாபம் பார்க்க முடியும்னு உறுதியாக நம்புகிறேன்.தொடர்புக்கு: 80989 26888.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ