உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மாற்றம் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்!

மாற்றம் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்!

நடிகை வத்சலா ராஜகோபால்: நான் வளர்ந்தது, கேரளாவின் திருவனந்தபுரம். ஸ்கூல் படிக்கிறப்போ டான்ஸ், நாடகங்களில், ஆர்வத்தை வளர்த்துக்கிட்டேன். அத்தை மகனை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். 1953ல் சென்னையில் குடியேறி, தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்தில், 'கிளர்க்'காக சேர்ந்தேன். அங்கு எனக்கு உயரதிகாரியாக இருந்தார், இயக்குனர் கே.பாலசந்தர் சார். கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதரன் சார், 'ரசிக ரங்கா' என்ற பெயரில் நாடகக்குழு நடத்தி வந்தார். அவர் குழுவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை என் நடிப்பை பார்த்த இயக்குனர் மணிரத்னம், அவரின், ரோஜா படத்தில் நடிக்க கேட்டார். அது தான் முதல் சினிமா வாய்ப்பு. 'நான் உங்கள் ரசிகன்' என்று பார்க்கும் போதெல்லாம், இயக்குனர் பாலுமகேந்திரா சொல்வார்; 'கதை நேரம்' சீரியலில் என்னை நடிக்க வைத்தார். நான் வியந்து பார்த்த கலைஞரான நாகேஷுக்கு ஜோடியாக நடிக்கிற வாய்ப்பு வந்த போது, இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தயங்கி தயங்கி நடித்த என்னை, 'என்கரேஜ்' செய்து நடிக்க வைத்தார் நாகேஷ். கடந்த, 2003ல் நிகழ்ந்த ஒரு விபத்தில், என் கால்கள் இரண்டும் மோசமாக பாதிக்கப்பட்டன. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தும், கால்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.ரொம்ப நேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. செருப்பு போட்டும் நடக்க முடியாது. 'ஸ்டிக்' பிடித்து நடப்பேன். கணவர், 1996ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் மூத்த மகனையும் பறிகொடுத்து விட்டேன். எவ்வளவு பெரிய காயத்துக்கும், மருந்து உண்டு. வருத்தப்படுறதால மட்டுமே தீர்வும், அமைதியும் கிடைச்சுடாது.நமக்குப் பிடித்த வேலைகளை தொடர்ந்து செய்தால் மட்டும் தான், நம்மை ஆக்டிவா வெச்சுக்க முடியும். தினமும் நியூஸ் பேப்பர், புத்தகங்கள் படித்து விடுவேன். 'டிவி' பார்ப்பேன். சுடோகு விளையாடுவேன். எனக்கான தேவைகளை, என்னால் முடிந்த அளவு நானே செய்வேன். மருமகள்கள் தான் என் சினிமா ஷூட்டிங் பயணங்கள், எனக்கான கவனிப்பு என்று எல்லா தேவைக்கும் அதிகமாக மெனக்கெடுவர்.'இந்தக் காலத்தில மாமியார் - மருமகள்களுக்குள் இவ்ளோ ஒற்றுமையா?' என்று சிலர் ஆச்சரியமாக கேட்கின்றனர். எந்த ஒரு மாற்றமும் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும் என்று சொல்வரே... அப்படி தான் நாங்கள் நடந்து கொள்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை