உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / நேர்மை எங்களை காக்கிறது!

நேர்மை எங்களை காக்கிறது!

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே, 58 பெண்கள் ஒன்றிணைந்து, தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வழிவகை செய்துள்ளனர். அது பற்றி கூறும் புவனேஸ்வரி:எங்கள் கிராமமான, குடியாத்தம் தாலுகா கதிர் குளர் கிராமத்தைச் சேர்ந்த, 58 பெண்களுக்கு, தலா, 3 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு கறவை மாடுகள் வாங்குவதற்கு, தேசிய வங்கி கடன் கொடுத்துள்ளது. இந்த தகவலறிந்து, வியந்துபோன கலெக்டர் குமரவேல் பாண்டியன், எங்கள் கிராமத்துக்கு வந்து, பெண்களின் தன்னம்பிக்கையை பாராட்டினார்.எங்கள் மலை கிராமமானது, குடியாத்தத்திலிருந்து பரதராமி செல்லும் சாலையிலிருந்து பிரிந்து, உள்ளே செல்கிறது. பேருந்து வசதி இல்லாத குக்கிராமம். விவசாயம், கூலி வேலையைத் தவிர, வேறெதையும் அறியாதவர்கள், இங்குள்ள மக்கள்.ஜாதி, மதம் பார்க்காமல் உழைக்கும் பெண்கள், 58 பேர் கைகோர்த்தோம். 'என்ன வியாபாரம் செய்யலாம்' என்று கலந்து, ஆலோசனை செய்தோம். நாம் இருப்பது, மலையும், வயலும் சார்ந்த பசுமையான புல்வெளி நிறைந்த பகுதி. இங்கு மேய்ச்சலுக்கு பஞ்சமில்லை என்பதால், கறவை மாடுகள் வளர்த்து, கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கலாம் என முடிவு செய்தோம். வங்கியில் கடன் பெற்றோம்; மகிழ்ச்சியாக தொழில் துவங்கினோம்.ஏழை பெண்களான எங்களின் கஷ்டத்தை உணர்ந்த கலெக்டர், மறுநாள் எங்கள் கிராமத்திற்கு வந்து, 'வங்கிக்கடன் தவணையை சரியாகக் கட்ட வேண்டும். நீங்கள் தவணை செலுத்தும் முறை தான், உங்களுக்கு மறுகடன் வழங்க சிபாரிசு செய்யும்' என்று அறிவுறுத்தினார்.ஆனால், அதிகாரிகளோ, 'இந்தக் கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. எனவே, கடனை வசூலிக்க இங்கு வருவது கஷ்டம்' என்றனர். அப்போது, கலெக்டர், 'இந்தப் பெண்கள், வங்கிக்கடன் செலுத்தவில்லை என்றால் தானே, நீங்கள் இந்தக் கிராமத்திற்கு வர வேண்டும்; கடனை சரியாக செலுத்திவிட்டால், வர வேண்டாமே...' என்றார்.'சார்... ஒரு தவணை கூட தாமதிக்காமல் செலுத்தி, உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம்' என்று ஒருமித்த குரலில் நாங்கள் வாக்குறுதி அளித்தோம்.முதலில், எங்களுக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கியது, வங்கி. பால் கறந்து, கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கினோம். பணம் வந்ததும், முதலில், தவணையை செலுத்தி விட்டுத் தான் அடுத்த வேலை செய்வோம். அதன் விளைவாக, வங்கி, நாங்கள் பணம் செலுத்தும் விதத்தை வைத்து, இப்போது மீண்டும் 1 லட்சம் ரூபாய் கடன் வழங்க முன்வந்துள்ளது. தலா, 5 லட்சம் ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்கி, எங்கள் தொழிலை விரிவுசெய்ய வாய்ப்பு கொடுத்துள்ளது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை