உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சிங்கப்பூரில் தமிழுக்கு மிகுந்த அங்கீகாரம் உண்டு!

சிங்கப்பூரில் தமிழுக்கு மிகுந்த அங்கீகாரம் உண்டு!

சிங்கப்பூரில் வாழும் தமிழ் பத்திரிகையாளர் சவுந்தரநாயகி: காரைக்குடி தான் சொந்த ஊர். இளங்கலை கல்லுாரிப் படிப்பை சென்னையில் முடித்து, திருமணத்துக்குப் பின், கணவருடன் சிங்கப்பூர் சென்றேன்.சிங்கப்பூருக்கு வந்த புதிதில், கணவர் எனக்கு பிடித்தமான விஷயங்களை செய்யச் சொல்லி ஆதரவாக இருந்தார்; குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் பகிர்ந்து கொண்டார். என் களம், தமிழ் தான் என்று உணர்ந்தேன். சிங்கப்பூரில் தமிழ், நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று; அதனால் தமிழுக்கு இங்கு மிகுந்த அங்கீகாரம் உண்டு. நிறைய எழுத துவங்கினேன். கடந்த, 2001 முதல், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், 'ஆன்லைன் வாய்ஸ்' மின்னிதழின் எடிட்டராக உள்ளேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், சசி தரூர், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட இந்திய அரசியல் ஆளுமைகளையும், சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் உட்பட பல சிங்கப்பூர் அரசியல் தலைவர்களையும் பேட்டி கண்ட அனுபவங்கள் சிறப்பானவை. தமிழில் ஐந்து புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியுள்ளேன்.பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் மட்டுமல்ல, முறைப்படி சங்கீதம் கற்றிருந்ததால், இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் 100க்கும் மேற்பட்ட கச்சேரிகளும் நடத்தியுள்ளேன். 'கலாமஞ்சரி' என்ற அமைப்பை துவங்கி, தமிழிசை, இலக்கியம், நடனம் என்று பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறேன்.குறிப்பாக, தமிழ் பாரம்பரியத்தில் ஆர்வம் கொண்டு பலர் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அவர்களது திறமையை அவர்களுக்கே அடையாளம் காட்டுவதில் நாங்கள் கருவியாக இருக்கிறோம். மேலும், கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கிடைக்கும் தொகையில சமூகத்துக்கு எங்களாலான உதவிகளை செய்கிறோம். சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர் கழகம், மாதவி இலக்கிய மன்றம், அப்துல் கலாம் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகளில் என்னை இணைத்துக் கொண்டதன் வாயிலாக, நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். நிகழ்ச்சி வடிவமைப்பு, சிறப்பு விருந்தினர்களை அழைப்பது, எந்த கோணத்தில் போட்டிகளுக்கான தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பது என, பலவற்றை கற்றுக் கொண்டேன். இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக, சாத்தியப்படும் வழிகளில் எல்லாம் மக்களிடம் தமிழை கொண்டு சேர்ப்பது, தமிழிடம் மக்களைக் கொண்டு வருவது மற்றும் சிங்கப்பூர் பற்றியும், அந்நாட்டு நடப்பு பற்றியும் பல நாட்டு மக்கள் அறிந்து கொள்ளச் செய்வது என, என் பயணத்தை தொடர்வதில் மகிழ்ச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ