''பிரதமர் பெயர்ல அறக்கட்டளை வச்சு, உதவிட்டு இருக்காருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''தமிழக பா.ஜ.,வின் மாநில செயலரான எஸ்.ஜி.சூர்யா, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுருக்கி, 'நமோ பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை நடத்திட்டு இருக்காருங்க... இதன் வாயிலா, கல்வி மற்றும் விளையாட்டுகள்ல சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவி பண்ணிட்டு இருக்காருங்க...''சமீபத்துல, தன் பிறந்த நாளை ஒட்டி, சென்னை, வேளச்சேரி தொகுதியில் வசிக்கும் 85 ஏழை, எளிய மாணவர்களின் கல்வி செலவையும், சிவகங்கை மாவட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவ - மாணவியரை தனியார் கல்லுாரியில படிக்க வைக்கிற செலவுகளையும் ஏத்துக்கிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சட்டசபை தேர்தலுக்கு, வேளச்சேரி தொகுதியை குறி வச்சு செயல்படறார்னு சொல்லும்...'' என்ற குப்பண்ணாவே,''ஏக்கருக்கு 5 லட்சம்ரூபாய் கேக்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.''ரியல் எஸ்டேட் விவகாரமா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ஆமா... பொதுவா, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கறச்சே, சில இடங்கள்ல விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும், 'கமர்ஷியல்' நிலமா மாத்துவா... ஆனா, திருப்பூர்உள்ளூர் திட்டக்குழுமம் சார்புல மாஸ்டர் பிளான் தயாரிச்சப்ப, விவசாய நிலம்னு அதிகமான நிலங்களை ஒதுக்கியிருக்கா ஓய்...''இதுவரை, 'கமர்ஷியல்' நிலமா இருந்த சில இடங்களையும் விவசாய நிலமா மாத்திட்டா... தொழில் நகரான திருப்பூர்ல நிலங்கள் மதிப்பு மிகவும் அதிகமா இருக்குமோன்னோ...''இதனால, விவசாய நிலங்களை மீண்டும் கமர்ஷியல் கணக்குக்கு மாத்த, ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் தரணுமாம்... 'மாஸ்டர் பிளான் அதிகாரிகளின் இந்த அதிரடி வசூலால, எங்களுக்கு செலவு ரெட்டிப்பாயிடுத்து'ன்னு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''மாவட்டம், ஒன்றியங்களின் மோதல் உச்சகட்டத்துக்கு போயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரா இருக்கிறவர் தடங்கம் சுப்ரமணி... இவருக்கும், சில ஒன்றிய செயலர்களுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு வே...''சமீபத்துல கட்சி தலைமைக்கும், உதயநிதிக்கும், 'மாவட்டம்' அனுப்பியிருந்த புகார்ல, 'தர்மபுரி லோக்சபா தேர்தல்ல, தர்மபுரி மற்றும் பென்னாகரம் சட்டசபை தொகுதியில நம்ம கட்சிக்கு ஓட்டுகள் குறைய ஒன்றியசெயலர்கள் தான் காரணம்'னு குறை சொல்லியிருந்தாரு வே...''இதுக்கு பதிலடியா,ஒன்றிய செயலர்கள் சிலர் சேர்ந்து, 'நம்ம ஆட்சியில, மூணு வருஷமா எங்களுக்கு 'டெண்டர்' பணி, வேலை வாய்ப்பு, பணியிட மாறுதல்னு மாவட்ட செயலர் எதுவுமே செஞ்சு தரல'ன்னு தலைமைக்கு புகார்களை தட்டி விட்டாவ வே...''இந்த சூழல்ல, சமீபத்துல சுப்பிரமணி தலைமையில நடந்த கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை, பல ஒன்றிய செயலர்கள் புறக்கணிச்சுட்டாவ... 'இவங்க மோதலை தலைமை தட்டி வைக்கணும்'னு தொண்டர்கள் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.