''தேர்தலை புறக்கணிக்க முடிவு செஞ்சிருக்காங்க பா...'' என்ற படியே, நாளிதழை மடித்து வைத்தார் அன்வர்பாய்.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை, அம்பத்துார் எஸ்டேட் அருகில் பட்டரைவாக்கம் பெரியகுளம் பகுதியில், பழைய இரும்பான, 'ஸ்கிராப்' தொழில்ல, நேரடியாகவும், மறைமுகமாகவும், 3,500 பேர் ஈடுபட்டிருக்காங்க... இவங்களது வாழ்வாதாரம் பாதிக்கிற மாதிரி, தனி நபர் ஒருத்தர், ஒட்டுமொத்த ஸ்கிராப்களையும் அள்ளிடுறாரு பா...''ஆளுங்கட்சி மேலிடத்தின் குடும்ப உறுப்பினரான அவர் தான், இப்ப ஸ்கிராப் தொழில்ல கொடி கட்டி பறக்கிறாராம்... 'எங்களது வயித்துல அடிக்கிற அவர், இந்த தொழிலை கைவிட்டால் தான் ஓட்டு போடுவோம்... இல்லன்னா, தேர்தலை புறக்கணிப்போம்'னு தேர்தல் கமிஷனுக்கு, 'இ - மெயில்' அனுப்ப 3,500 பேரும் முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''குவாரிகளை மூடிட்டு, 'கட்டிங்' கேட்டா எப்படின்னு புலம்பறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''கல் குவாரிகள் எடுத்து நடத்தறவா, அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை, சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையத்திடம் பர்மிஷன் வாங்கணும்... ஆனா, சேலம் மாவட்டத்துல இந்த பர்மிஷன் இல்லாம நிறைய குவாரிகள் செயல்பட்டது ஓய்...''முன்னாள் முதல்வரின் பெயர் கொண்ட கனிமவள துறை அதிகாரி, இப்படி பர்மிஷன் வாங்காத 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகளை மூடிட்டார்... இப்ப இதே அதிகாரி, 'தேர்தல் செலவுக்கு மேலிடத்துல கேட்டிருக்கா... அதனால, நிதி குடுங்கோ'ன்னு குவாரி உரிமையாளர்களிடம் வசூல் பண்றார் ஓய்...''எம்.சாண்ட் குவாரிக்கு, 2 லட்சம், பெரிய கல் குவாரிக்கு, 1 லட்சம்,சின்ன குவாரிக்கு, 50,000 ரூபாய் வீதம் வசூலிக்கறார்... 'குவாரிகளை மூடிட்டு, கப்பம் கேட்டா எப்படி'ன்னு உரிமையாளர்கள் புலம்பினாலும், கேட்ட தொகையை குடுத்துட்டா... தேர்தல் முடிஞ்சதும், குவாரிகளை திறக்க அனுமதிப்பாங்கற நம்பிக்கையில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''இளநீர், டீன்னு எதுவும் குடிக்க மாட்டேங்காருல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''வீட்டுவசதி வாரிய தலைவரான பூச்சி முருகன், தி.மு.க., தலைமை நிலைய செயலராகவும் இருக்காருல்லா... இவர், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளரா இருக்காரு வே...''இவர் அங்கனயே முகாமிட்டு, எந்தெந்த சட்டசபை தொகுதியில, கட்சியினர் சரியா வேலை பார்க்கலைன்னு கண்டுபிடிச்சு, பொறுப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்களை விட்டு கண்டிச்சு, அவங்களை முடுக்கி விட்டிருக்காரு... முருகனின் கண்டிப்பு, சில நிர்வாகிகளுக்கு அதிருப்தியை குடுத்திருக்கு வே...''அதே நேரம், அமைச்சர் சக்கரபாணியும், முருகனும் சேர்ந்து கலந்துக்கிற கூட்டங்கள்ல நிர்வாகிகள் இளநீர், டீ, காபின்னு குடுத்து உபசரிக்காவ... முருகன் மட்டும் அதை வேண்டாம்னு நாசுக்கா மறுத்துடுதாரு வே...''அமைச்சர் சக்கரபாணி கேட்டப்ப, 'அதில்லண்ணே... சிலரை நான் விரட்டி வேலை வாங்குறதால, கடுப்புல இருக்கிறவங்க ஏதாவது பேதி மாத்திரை கலந்து, என்னை படுக்க வச்சுடகூடாதுல்லா'ன்னு முருகன் சொல்லியிருக்காரு... அமைச்சரும், நிர்வாகிகளும், 'நீங்க ரொம்ப உஷார் தான்'னு சிரிச்சிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.