உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஓய்வு அதிகாரிகள்!

அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஓய்வு அதிகாரிகள்!

''என்னதான் மகா கலைஞனா இருந்தாலும், இப்படி கஞ்சத்தனமா இருக்கப்டாதுன்னு நொந்துக்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''நகைச்சுவை நடிப்பில், தனக்குன்னு தனியிடம் பிடிச்ச வடிவேலுவை தான் சொல்றேன்... கிராமத்துல ஏழ்மையான குடும்பத்துல பிறந்து, ரொம்பவே கஷ்டப்பட்டு, சினிமாவுக்கு வந்தார் ஓய்...''தன் திறமையாலும், கடின உழைப்பாலும் சினிமாவுல நிலையான இடத்தை பிடிச்சாரு... தன் கூட, பெரிய பட்டாளத்தையே வச்சுக்கிட்டு, நகைச்சுவையில கலக்குனாரு வே...''அவருடன் பல படங்கள்ல நடிச்ச போண்டா மணி உடம்பு சரியில்லாம கஷ்டப்பட்டப்ப, எந்த உதவியும் செய்யல... அதுவும் இல்லாம, அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்த கூட வடிவேலு போகல ஓய்...''அதே மாதிரி, கொரோனா நேரத்துல கஷ்டப்பட்ட தங்களுக்கு வடிவேலு எந்த உதவியும் செய்யலன்னு முத்துக்காளை, பெஞ்சமின் போன்ற சில நடிகர்கள், இன்னைக்கு வரை அவரை விமர்சனம் பண்றா...''வடிவேலுவுடன் பல படங்கள்ல நடிச்ச வெங்கல்ராவ், கிட்னி பாதித்து, தன் சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை எடுத்துண்டு இருக்கார்... இவர், சிகிச்சைக்கு உதவி கேட்டும் வடிவேலு கண்டுக்கல... இதனால, வடிவேலுவை சமூக வலைதளங்கள்ல பலரும் வறுத்து எடுத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ரமணா படம் பாணியில கணக்கு எடுக்குறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகாவுல, எந்தெந்த துறை அதிகாரிகள், மக்களை கசக்கி பிழிஞ்சு லஞ்சம் வாங்குறாங்கன்னு ஒரு கணக்கெடுப்பு நடக்குது... பொதுமக்களிடமும், அரசு அலுவலக கீழ்நிலை ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமா விசாரணை நடத்திட்டு இருக்காங்க பா...''இது போக, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துற விதமா லஞ்சம் வாங்குற அதிகாரிகள் யார், யார்னும் உளவுத்துறை போலீசாரும் ஒருபக்கம் விசாரிக்கிறாங்க... இதுல, இடைப்பாடி நகராட்சியில் ஒரு கட்டட ஆய்வாளரும், தாலுகா ஆபீசில் தலைமை சர்வேயர் மேலயும் தான் நிறைய புகார்கள் வந்திருக்குது... 'சீக்கிரமே, இவங்க மேல அதிரடி நடவடிக்கை பாயும் பா...'' என்றார், அன்வர்பாய்.''ஓய்வு பெற்றும், ஆபீஸ் நிர்வாகத்துல தலையிடுதாங்கல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''பெரம்பலுார் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துல, டெபுடி பி.டி.ஓ.,வா இருந்தவர், போன மாசம், 'ரிட்டயர்' ஆகிட்டாரு... ஆனாலும், தினமும் தவறாம ஆபீசுக்கு வந்து, நிர்வாகத்துல தலையிடுதாரு வே...''மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், சீக்கிரமே பி.டி.ஓ., மற்றும்டெபுடி பி.டி.ஓ., நிலையிலான அலுவலர்கள் இடமாறுதல் நடக்க இருக்கு... யார், யாருக்கு எந்த பதவி, எந்த இடம்கிறதை, ரிட்டயர் டெபுடி தான் முடிவு பண்ணுதாரு வே...''இதே மாதிரி, பல மாசத்துக்கு முன்னாடி ஓய்வுல போன இன்னொரு டெபுடி பி.டி.ஓ., ஆலத்துார் யூனியன் ஆபீஸ் நிர்வாகத்துல தலையிடுதாரு... இவங்களை எல்லாம் அதிகாரிகள் ஏன் கண்டுக்காம இருக்காவன்னு தெரியல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''நந்தகுமார், ராஜேந்திரன் வரா பாருங்கோ... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 30, 2024 16:47

பெயரோடு சொல்லிவிட்டால், அப்படியே பிடித்து 'உள்ளே' தள்ளிவிடுவார்களாக்கும் அவர்களே 'தள்ள ' வேண்டியதை தள்ளி தங்கள் தலைக்கு எதுவும் வராமல் செய்துகொண்டிருப்பார்கள் '


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை