நாளிதழை மடித்தபடியே, ''தண்டனையா, வெகுமதியான்னு தெரியலைங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாருக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் மேற்கு மண்டலத்துல, ஒரு அதிகாரி இருந்தாரு... இந்த மண்டலத்துல கோவை, ஈரோடு, சேலம் ஆகிய சரகங்கள் இருக்குதுங்க...''ஒவ்வொரு சரகத்திற்கும் தனி டி.எஸ்.பி.,க்கள் இருக்காங்க... இவங்க கட்டுப்பாட்டுலதலா மூணு மாவட்டங்கள் வரும்... இந்த டி.எஸ்.பி.,க்கள், உயர் அதிகாரிக்கு மாசம் தலா 10 லட்சம் ரூபாய் தரணும்... இன்ஸ்பெக்டர்கள் 5 லட்சம், எஸ்.ஐ.,க்கள் 2 லட்சம், சிறப்பு படை எஸ்.ஐ.,க்கள் தலா 2 லட்சமும் தரணுமுங்க...''இந்த வகையில், மாதம் அரை கோடி ரூபாய் வரைக்கும் அள்ளியிருக்காருங்க... யாராவது தர மறுத்தா, அவங்க மேல துறை ரீதியில நடவடிக்கை எடுத்துடுவாருங்க...''இவர் மேல நிறைய புகார்கள் மேலிடத்துக்கு போகவே, அவரை, 'சஸ்பெண்ட்' பண்ணிடுவாங்கன்னு நினைச்சாங்க... ஆனா, சமீபத்துல அவரை தென்மாவட்ட நகரின் மதுவிலக்கு பிரிவுக்கு மாத்திட்டாங்க... 'இது, தண்டனை மாதிரி தெரியலையே'ன்னு பாதிக்கப்பட்ட அதிகாரிகள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கூட்டுறவு வங்கியில ஏகப்பட்ட, 'கோல்மால்' நடந்திருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''திருவள்ளூர் மாவட்டம், வரதராஜபுரத்தில் இருக்கிற காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், கடன் வழங்குறதுல நிறைய தில்லுமுல்லு பண்ணியிருக்காவ... போலி ஆவணங்களை தாக்கல் பண்ணி, நிறைய கடன்கள் குடுத்திருக்காவ வே...''இதனால, 14 கோடி ரூபாய்கிட்ட வாராக்கடனா பாக்கி இருக்கு... இது போக, 'பெட்டி டிரேஸ்' எனப்படும் கடன்களில், 100 கடன்கள் வசூலாகாம கிடக்கு வே... இதன் மதிப்பு மட்டும் 24 லட்சம் ரூபாய்...''தனி நபர் சம்பள கடன்ல, 8 லட்சம் ரூபாய் பாக்கி கிடக்கு... சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள தினக்கூலிகளை, நிரந்தர பணியாளர்கள்னு போலி ஆவணங்கள் தயார் செய்து, இந்த கடன்களை குடுத்திருக்காவ வே...''கடன்கள் குடுத்தப்ப மேனேஜராஇருந்தவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, முன்னாள்உதவி பொது மேலாளர் அறிக்கை குடுத்தும், அதிகாரிகள் கண்டுக்கல... மத்திய வங்கி மேலாண்மை இயக்குனர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளரிடம் புகார் குடுத்தும் நடவடிக்கை இல்ல வே...'' என்றார், அண்ணாச்சி.''புலியை வச்சு நன்னாவே சம்பாதிச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''கோவை மாவட்டம், வால்பாறையில், 2021ல் முள்ளம்பன்றியை சாப்பிட்டு, நடக்க முடியாம தவித்த புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டு, 'ட்ரீட்மென்ட' குடுத்து தேத்தினா... அப்பறமா, புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி தர்றதா சொல்லி, மானாம்பள்ளி மந்திரிமட்டம் பகுதியில், 75 லட்சம் ரூபாய் செலவுல வேலி போட்டு, புலியை கண்காணிச்சுண்டு இருந்தா ஓய்...''ஆனா, வேட்டையாடும் பயிற்சி தரல... இப்படியே காலத்தை கடத்திட்டு, போன மாசம் புலியை சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவுல கொண்டு போய் விட்டுட்டா... ஆனா, 'புலியை பராமரிச்சோம்'னு பொய் கணக்கு எழுதி, பல லட்சம் ரூபாயை வனத்துறை அதிகாரிகள் சுருட்டிண்டுட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை கச்சேரி முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.