''யாரையும் மதிக்காம செயல்படுறாங்க...'' என, இஞ்சி டீயை உறிஞ்சியபடியே அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சாவூர் மண்டலத்துக்கு, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு பெண் அதிகாரி பொறுப்புக்கு வந்தாங்க... இவங்க, பணியாளர்களை ஒருமையில் திட்டுறாங்க...''வாணிப கழகத்தின் விதிகள் எதையும் கண்டுக்கிறது இல்லை... மேலாளர், துணை மேலாளர் போன்ற அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்காம, தன்னிச்சையா பணியிடம் ஒதுக்குறது, இடமாறுதல் போடுறதுன்னு இருக்காங்க...''இது சம்பந்தமா, அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், முதல்வர், வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் வரைக்கும் புகார்கள் போயிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''நேத்து டிவியில, தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்தேன் ஓய்... என்ன அருமையான படம் தெரியுமோ... இப்பல்லாம் என்ன ஓய் படம் எடுக்கறா...'' என, சலித்துக் கொண்ட குப்பண்ணாவே, ''தி.மு.க.,வை எதிர்க்கறவாளுக்கு பதவி வழங்க போறார் ஓய்...'' என்றார்.''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''பா.ஜ.,வுல தேசியம் முதல் மாவட்டம் வரை, மூணு வருஷத்துக்கு ஒரு முறை நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்... இதன்படி, தேசிய நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்துல வரும்கறா ஓய்...''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிஞ்சதும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநில, மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க மாநில தலைமை முடிவு பண்ணியிருக்கு...''இதுக்காக, மெஜாரிட்டி ஜாதி எல்லாம் பார்க்காம, துடிப்பான, 24 மணி நேரமும் கட்சிப் பணியில் ஈடுபடும் ஆர்வம் உள்ள இளைஞர்களை நியமிக்க போறா ஓய்...''பா.ஜ.,வின் தற்போதைய நிர்வாகிகள் பலர் தி.மு.க.,வுடன், 'அட்ஜஸ்ட்' பண்ணி போறதா மாநில தலைமைக்கு புகார்கள் வந்திருக்கு... லோக்சபா தேர்தல்லயே சிலர் இப்படி செயல்பட்டிருக்கா ஓய்...''இதனால, தி.மு.க.,வை கடுமையா எதிர்க்கற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க அண்ணாமலை முடிவு பண்ணியிருக்கார்... நிர்வாகிகள் நியமனத்துல எந்த பரிந்துரையையும் ஏத்துக்கப்டாதுன்னும் உறுதியா இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வாழ்த்து சொல்லவே இல்ல வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு, சமீபத்துல 50வது பிறந்த நாள் வந்துச்சுல்லா... அரசியல் தலைவர்கள் பழனிசாமி, அண்ணாமலை, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், சீமான், தினகரன், கமல்னு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிச்சாவ வே...''ஆனா, முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் மட்டும் வாழ்த்து தெரிவிக்கல... உதயநிதியும், விஜய்யும் ஒருகாலத்துல நண்பர்களா இருந்தவங்க தான்... இத்தனைக்கும், சென்னை நீலாங்கரையில் விஜய்யும், உதயநிதியும் பக்கத்துல, பக்கத்துல தான் குடியிருக்காவ வே...''ஆனாலும், 'தங்களுக்கு போட்டியா தான் விஜய் கட்சி துவங்கியிருக்கார்னு தி.மு.க., தரப்பு நினைக்கிறதால தான், வாழ்த்து தெரிவிக்கல'ன்னு விஜய் கட்சியினர் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''அது சரி... அப்ப, விஜய்யின் புது படத்துக்கு சிக்கல் காத்துண்டு இருக்குன்னு சொல்லும்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.