உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அ.தி.மு.க., வேட்பாளராகும் தி.மு.க., மாஜியின் மகன்!

அ.தி.மு.க., வேட்பாளராகும் தி.மு.க., மாஜியின் மகன்!

படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''தனிப்பிரிவு போலீசாரை நியமிக்க, வசூல் வேட்டை நடக்கு வே...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''செங்கல்பட்டு எஸ்.பி., ஆபீஸ் கட்டுப்பாட்டுல, 20 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இதுல, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ்காரரை நியமிப்பாங்க வே...''இவங்க, தங்களது எல்லைக்குள்ள நடக்கும் தப்பு, தண்டாக்கள் பத்தி எஸ்.பி.,க்கு, 'ரிப்போர்ட்' அனுப்பணும்... அந்தந்த ஏரியாவுல சட்டவிரோத தொழில் பண்ற கும்பல், இவங்களை தாராளமா, 'கவனிக்கும்' என்பதால, ஸ்டேஷன் போலீசாரை விட, இவங்களுக்கு மாமூல் மழை கொட்டுமுல்லா...''அதனால, இந்த பணியிடங்களுக்கு எப்பவும் கடும் போட்டி இருக்கும்... இந்த தனிப்பிரிவு போலீசாரை நியமிக்கவும், இடமாறுதல் செய்யவும், எஸ்.பி., ஆபீஸ்ல இருக்கிற அதிகாரி, 20,000 ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணுதாரு வே...''இந்த வசூல் விவகாரத்தை, மதுராந்தகம் தனிப்பிரிவு போலீஸ்காரர் ஒருத்தர் தான் கவனிக்காரு... ''இப்படி பணம் கொடுத்து இந்த இடத்துக்கு வர்ற போலீசார், சட்டவிரோத மது விற்பனை, கள்ள லாட்டரி பத்தி எல்லாம் எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்காம, அந்த கும்பலிடம் மாமூல் வாங்கிட்டு கம்முன்னு இருந்துடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''முன்னாள் தலைவர் படத்தை பெருசா போடணும்னு ஆர்டர் போட்டிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழக காங்., புதிய தலைவரா செல்வப்பெருந்தகையை போட்டிருக்காளே... இவர் பொறுப்பு ஏற்ற தும், கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு போட்டார் ஓய்...''அதாவது, 'தமிழகம் முழுக்க காங்கிரசார் அடிக்கற போஸ்டர்கள், பேனர்கள்ல, நம்ம முன்னாள் தலைவர் ராகுல் படம், 80 பர்சன்ட் அளவுக்கு பெருசா இருக்கணும்... மற்ற நிர்வாகிகள் படங்கள், 20 பர்சன்ட் அளவுக்கு தான் இருக்கணும்'னு கண்டிப்பா சொல்லிட்டாராம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பொழைக்க தெரிஞ்சவர் தான்...'' என்ற அந்தோணிசாமி, ''மாஜி அமைச்சரின் தம்பி மகனை களம் இறக்க போறாங்க...'' என்றார்.''எந்த தொகுதியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''பெரம்பலுார் லோக்சபா தொகுதியில, அமைச்சர் நேருவின் மகன் களம் இறங்குவார்னு தகவல்கள் உலா வருதுங்க... 2006 - 2011 தி.மு.க., ஆட்சியில, வனத்துறை அமைச்சரா இருந்தவர் செல்வராஜ்...''ஆட்சி மாறியதும், அ.தி.மு.க.,வுல சேர்ந்தவர், சில வருஷங்கள்ல காலமாகிட்டார்... இப்ப, அவரது தம்பி மகன் சந்திரமோகனை, பெரம்பலுார் லோக்சபா தொகுதியில களம் இறக்க, அ.தி.மு.க.,வுல முடிவு பண்ணியிருக்காங்க...''இந்த தொகுதியில, முத்தரையர்கள் ஓட்டுகள் அதிகமா இருக்கிறதால, அந்த சமூகத்தின் சந்திரமோகன் சரியா இருப்பார்னு அ.தி.மு.க., தலைமை கணக்கு போடுதுங்க...''இதுக்கு ஏற்றபடி, சந்திரமோகனும் தொகுதியில வலம் வர ஆரம்பிச்சிட்டாருங்க... முத்தரையர் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களை பார்த்து, ஆதரவும் திரட்டிட்டு இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை