| ADDED : மார் 12, 2024 10:52 PM
நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்துார் பகுதியில், இரண்டாக பிரியும் பாலாறு, இரும்புலிச்சேரியில் மீண்டும் கூடுகிறது. இரும்புலிச்சேரியை திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுடன், நெரும்பூர் - புதுப்பட்டினம் சாலை வழியே இணைக்க, பாலாற்றில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தரைப்பாலம் பயன்பட்டது. கடந்த 2015ல், ஆற்று வெள்ளப்பெருக்கில் பாலம் இடிந்து, அப்பகுதி துண்டிக்கப்பட்டது.இப்பாலம், ஆண்டுதோறும் கனமழை வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சீரழியும். பாலம் சீரமைக்கப்படும் வரை, அப்பகுதி மக்கள் எடையாத்துார் - பாண்டூர் பாலம் வழியே, 5 கி.மீ., சுற்றிச்சென்று அவதிப்படுவர். கடந்த டிசம்பர் மாத வெள்ளப்பெருக்கிலும், தற்காலிக பாலம் சீரழிந்தது. மூன்று மாதங்களாக பாலம் சீரமைக்கப்படாததால், இரும்புலிச்சேரி கிராமவாசிகள் பரிதவித்து வருகின்றனர்.கடந்த மாதம், புதிய பாலம் கட்டுமான அடிக்கல் நிகழ்ச்சிக்கு சென்ற, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர், பாலம் சீரமைக்கப்படாததால், பாண்டூர் பாலம் வழியே சுற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.புதிய பாலம் கட்டும் வரை, தற்காலிக பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என, இரும்புலிச்சேரி கிராமவாசிகள் வலியுறுத்துகின்றனர்.