உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தகவல் தந்தே சம்பாதிக்கும் ஐ.ஜி., ஆபீஸ் ஊழியர்!

தகவல் தந்தே சம்பாதிக்கும் ஐ.ஜி., ஆபீஸ் ஊழியர்!

''போலி டோக்கன் வியாபாரம் களை கட்டறது போங்கோ...'' என, மெது வடையை மென்றபடியே, மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எங்க வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''சென்னை, திருவேற்காடு அயனம்பாக்கம், அம்பத்துார் மற்றும் கொரட்டூர் நீர்நிலைகள்ல குடியிருந்த 3,000 குடும்பத்தினருக்கு, 2009ல, ஆவடி அடுத்த மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகர்ல, அரசு மாற்று இடம் வழங்கியது... இதுக்காக, பயனாளிகளுக்கு டோக்கன் குடுத்தா ஓய்...''அங்க வீடு கட்டி குடியேறிய சிலர், பிள்ளைகளின் கல்வி, திருமணம், மருத்துவ செலவுன்னு தங்களது வீடுகளை வித்துட்டு போயிட்டா... இலவச பட்டாங்கறதால, வீடுகளை வாங்கியவாளால, மின் இணைப்புல பெயரை மாத்த முடியல ஓய்...''இதனால, அந்த பகுதி ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலர் மூலமா, தங்களது பெயர்ல போலி டோக்கன்கள் வாங்கி, அதை வச்சு, ஆவடி வீராபுரம் மின் வாரிய அலுவலகத்துல, தங்களது பெயருக்கு மின் இணைப்பை மாத்திக்கறா...''இப்படி, போலி டோக்கன் வழங்கற கவுன்சிலர்கள், டோக்கனுக்கு தலா 1 லட்சம் ரூபாயை கறந்துடறா... போலி டோக்கன் விற்பனை, அந்த ஏரியாவுல ஜோரா நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.''லோக்சபா தேர்தல்ல, நிறைய புதுமுகங்களுக்கு சீட் தர, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி முடிவு செஞ்சிருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''அந்த வகையில, சேலத்துல விக்னேஷ், நாமக்கல்ல அசோக், சிவகங்கையில சேவியர்ராஜ்னு பல பேரை குறிச்சு வச்சிருக்காருங்க... அதே மாதிரி, சில முன்னாள் அமைச்சர்களிடமும் போட்டியிடுறீங்களான்னு கேட்டிருக்காருங்க...''அதுல சிலர், 'செலவு செய்றதுக்கு பணம் இல்ல'ன்னு வெளிப்படையா சொல்லிட்டாங்களாம்... அதனால, அவங்களை கழிச்சிட்டு, செலவு செய்ய தகுதியானவங்களை பட்டியல்ல சேர்த்திருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தகவல் கொடுத்தே, சம்பாதிக்காரு வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., கேம்ப் ஆபீஸ்ல, ஏழு வருஷமாகிளர்க்கா ஒருத்தர் இருக்காரு... ஐ.ஜி.,க்கள் மாறினாலும், இவர் மட்டும் மாறவே மாட்டாரு வே...''ஐ.ஜி.,யிடம் டிரான்ஸ்பர் கேட்டு யார், யார் வர்றாங்கன்னு நோட் பண்ணிக்கிடுதாரு... ஐ.ஜி.,யிடம் அவங்களை பத்தி, 'குட் சர்டிபிகேட்' கொடுக்க ஒரு ரேட் வச்சிருக்காரு... அவரை சரியா கவனிக்காதவங்களுக்கு, 'பேடு சர்டிபிகேட்' குடுத்துடுவாரு வே...''அதே மாதிரி, டிரான்ஸ்பர் உத்தரவுகள் இவர் வழியா தான், டி.ஐ.ஜி., ஆபீசுக்கு போகும்... அதுல, எந்த அதிகாரிக்காவது பிடிக்காத ஊருக்கு டிரான்ஸ்பர் போட்டிருந்தா, அதை உடனே அவங்களிடம் தெரிவிச்சிடுதாரு வே...''அவங்களும் உடனே, யாரையாவது சிபாரிசு பிடிச்சு, அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிடுதாவ அல்லது விரும்பிய இடத்துக்கு மாறுதல் வாங்கிடுதாவ... தகவல் தந்தவருக்கு கணிசமான தொகையும் வந்துடுது வே...''இவரை மாதிரியே, கோவை டி.ஐ.ஜி., ஆபீஸ்ல, நாலரை வருஷமா ஒருத்தர் புகுந்து விளையாடுதாரு... இவங்களை பார்த்தாலே, டி.எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளே சல்யூட் அடிக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''முத்துவேல், சுந்தர் சிங் வர்றாங்க... சுக்கு காபி போடுங்க நாயரே...'' என்றபடி அந்தோணிசாமி எழ, நண்பர்கள் நகர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை