உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / நகராட்சி சந்தை வசூலில் வாரம் ரூ.20,000 மோசடி!

நகராட்சி சந்தை வசூலில் வாரம் ரூ.20,000 மோசடி!

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''அதிகாரிகளால படாதபாடு படுறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. ''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''நீலகிரி மாவட்டத்தின் எல்லையோர பகுதிகள்ல, எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தான் அதிகம் வசிக்கிறாங்க... இவங்க பெரும்பாலும், சாதாரண பட்டன் மொபைல் போன் தான் பயன் படுத்துறாங்க... ''இங்க இருக்கிற, 'டாஸ்மாக்' கடைகள்ல, 'ஆன்லைன்' பண பரிவர்த்தனையான யு.பி.ஐ., மூலமா பணம் வசூலிக்கும்படி, அதிகாரிகள் சொல்றாங்க... ஆனா, 'ஸ்மார்ட் போன்' இல்லாதவங்க பணம் குடுத்து, 'சரக்கு' வாங்குறாங்க... ''டாஸ்மாக் அதிகாரிகளோ, 'மொத்த விற்பனையில், 30 சதவீதம் ஆன்லைன் வசூலா இருக்கணும்'னு நிபந்தனை விதிக்கிறாங்க... அப்படி இல்லேன்னா பறக்கும் படை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி, விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு அபராதம் விதிக்கிறாங்க... இதனால, டாஸ்மாக் ஊழியர்கள் நொந்து போயிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''கட்டிங் அதிகாரி கலக்கத்துல இருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனரா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்த பனோத் ம்ருகேந்தர் லால் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, சமீபத்துல சென்னையில் கூட்டுறவு துறைக்கு அதிரடியா மாத்திட்டாங்க பா... ''இவர் கமிஷனரா இருந்தப்ப, 22 பணிகளுக்கு டெண்டர் விட்டாங்க... இதுல, 13 பணிகளுக்கு கடும் போட்டி இருக்கவே, விதிகளுக்கு மாறா, 22 டெண்டர்களையும் ரத்து பண்ணிட்டாரு பா... ''இதனால, அதிகாரியை அதிரடியா மாத்திட்டாங்க... அதே நேரம், அந்த கமிஷனருக்கு உறுதுணையா இருந்த, 'கட்டிங்' வசூல் அதிகாரி கலக்கத்துல இருக்காரு பா... ''இவர் கிட்டத்தட்ட, 20 வருஷத்துக்கும் மேலா ஒரே இடத்துல இருக்காரு... கமிஷனரை தவறா வழி நடத்தி, முடியாத பணிகளுக்கு பில் தொகை வழங்கிய விவகாரம் இப்ப விஸ்வரூபம் எடுத்திருக்கு... இதனால, யாரை பிடிச்சு, எப்படி தப்பிக்கிறதுன்னு அதிகாரி அலைமோதிட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய். ''சரவணன் வாரும்...'' என, நண்பரை வரவேற்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''வாரத்துக்கு, 20,000 ரூபாய் முறைகேடு நடக்கு வே...'' என்றார். ''எங்க ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி சார்பில், காய்கறி சந்தைக்காக, 240 கடைகள் கட்டியிருக்காவ... இது போக, 25 சாலையோர கடைகளுக்கும் அனுமதி தந்திருக்காவ வே... ''சந்தை கட்டண வசூல் டெண்டரை இன்னும் யாருக்கும் தரல... இதனால நகராட்சி சார்பில், வாரந்தோறும் புதன் கிழமை ஒரு கடைக்கு, 100 ரூபாய் வீதம்னு, 265 கடைகளிட மும், 26,500 ரூபாயை வசூலிக்காவ வே... ''ஆனா, நகராட்சியில், 9,000 முதல் 9,500 ரூபாய் வரை மட்டுமே கட்டுதாவ... கிட்டத்தட்ட, 20,000 ரூபாய் வரை எங்க போகுது, யாருக்கு போகுதுன்னு தெரியல வே... ''வாரத்துக்கு, 20,000 வீதம் மாசத்துக்கு, 80,000 ரூபாய் வரை மோசடி நடக்கு... 'நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவுக்கு இதெல்லாம் தெரியுமா'ன்னு உள்ளூர் ஆளுங்கட்சியினரே புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 10, 2025 18:58

இவ்வளவு துணிச்சலாக வாராவாரம் வசூல் செய்ப்பவர்கள் அமைச்சரின் ஆசியுடன், காணிக்கை கொடுத்துதான் செய்வார்கள்!!!


Raghavan
செப் 10, 2025 12:53

அமைச்சருக்கு கட்டிங் போகிறதோ என்னமோ யார்கண்டது அதனால்தான் கண்டும் காணாததுபோல் இருக்கிறாற்போல. அவருக்கு தெரியாமலா இவைகள் நடக்கும்.


gopalasamy N
செப் 10, 2025 18:45

தமிழ்நாடு அனைத்து உள்ளாட்சி மார்க்கெட் வசூலில் நாற்பது சதவிகிதம் மட்டுமே கணக்கிற்கு வரவு வரும் மீதம் பல கோடி ஏப்பம் விட படுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை