உள்ளூர் செய்திகள்

புதிய துவக்கம்!

நவராத்திரி திருவிழா தனித்துவமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கொலுவில் வசதிக்கேற்ப படிகள் அமைத்து தெய்வம், மகான், மரப்பாச்சி, விலங்கு, மரம், செடி பொம்மைகள் அலங்கரித்து, ஒன்பது நாளும் சுண்டல், பலகாரங்களுடன் வண்ணமயமாக கொண்டாடுகின்றனர்.விழாவின் முதல் மூன்று நாட்கள், துர்கை அருளைப் பெறவும், அடுத்த மூன்று நாட்கள் லக் ஷ்மியிடம் செழிப்பைப் பெறவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியிடம் கலை, கல்வி, ஞானத்தைப் பெறவும் கொண்டாடுவது ஐதீகமாக உள்ளது. கலை, கல்வி, ஞானம் போன்றவை வேண்டி பிரார்த்திக்கும் திருநாளாக கடைபிடிக்கப் படுகிறது.மகிஷாசுரனை அழிக்க, துர்க்கை வடிவம் எடுத்தாள் தேவி. ஒன்பது நாட்கள் நீடித்தது போர். அது விஜயதசமியன்று முடிவுக்கு வருகிறது. அன்று, மகிஷாசுரனை வதம் செய்வாள் தேவி. நல்ல சக்தியின் வெற்றி திருநாளாக கருதப்படுகிறது. அதனால், வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கலை, தொழில்களை துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இந்தியர்கள். கலைகள்!கல்வி, கலைகள் என இந்த நாளில் எது துவங்கினாலும், வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள், நடனம் போன்ற பயிற்சிகள் துவங்கவும் இந்த நாளை தேர்வு செய்கின்றனர். இந்த பண்டிகையில், சரஸ்வதிதேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என பூரண நம்பிக்கை நிலவுகிறது. குழந்தைகளின் கரம் பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்மணிகளில், 'அ' என பிசகாமல் அட்சரம் எழுத கற்றுக் கொடுப்பது, 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. அதுவும், இந்த நாளில் துவங்கப்படுகிறது. இந்த வழக்கம் தமிழகம், கேரளாவில் அதிகம் கடைபிடிக்கப்படுகிறது.ஆயுதபூஜை!பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கணினி, அலுவலக கணக்கு புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூ மாலைகள் போட்டு பூஜைகள் நடத்துவர். தொழிலையும், தொழிலாளர் களையும் போற்றி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொரி, கடலை, தேங்காய், பழம், சுண்டல் படைப்பதும் வழக்கமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !