வலையில் ஒரு இதயம்! (9)
முன்கதை: மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ருதி, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வந்தாள். கல்லுாரியில் சீனியர் விக்ரமை, கேண்டினில் சந்தித்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. இனி - தயக்கத்துடன் அமர்ந்தாள் ஸ்ருதி.'இது, சுலைமானி டீ... குடிச்சு பாரு... நல்லா இருக்கும்; மூலிகையும், எலுமிச்சை சாறும் கலந்தது...' என்றான். ஆர்வமாக பருகினாள் ஸ்ருதி. 'நான், இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்; தமிழகத்தில் இருந்து இங்கே நிறைய பேர் படிக்கிறாங்க; தமிழ் மாணவர்களை உனக்கு அறிமுகப்படுத்துறேன்...' என்றான் விக்ரம்.புன்னகையுடன் நன்றி தெரிவித்தாள். 'பூர்ணாவோட நம்பர் சொல்லேன்...' என்று கேட்டான். 'என்னை தானே டீ குடிக்க கூப்பிட்ட; அப்புறம் எதுக்கு அவளை பற்றி பேசுற...' கடுப்பை மறைத்து கேட்டாள் ஸ்ருதி. 'பழகுறதுக்கு தான்...' 'அவளுக்கே இஷ்டம் இல்லாம தானே, என் நம்பரை கொடுத்தா...' என கிண்டலாய் சிரித்து எழுந்தாள். அவன் ஆர்வம், பூர்ணா மேலேயே இருந்ததை ஜீரணிக்க முடியவில்லை. எங்கும், எதிலும் முதலிடம் என்று வளர்க்கப்பட்டிருந்த ஸ்ருதிக்கு, இது மன உளைச்சலை தந்தது. அறைக்கு வந்தாள் ஸ்ருதி. விக்ரமை சந்தித்ததை மறைத்தாள். மறுநாளே அந்த விஷயம் பூர்ணாவுக்கு தெரிந்து விட்டது.மதிய உணவின் போது அதுபற்றி கேட்டாள். இதை எதிர்பாராததால் அதிர்ந்த ஸ்ருதி தயக்கியபடி, 'ஆம்...' என்றாள்.'முகநுாலிற்கு வந்து, வழிஞ்சுகிட்டு இருந்தான்; போன் நம்பர் கேட்டான்; உன்னோட நம்பர் கொடுத்துட்டேன்; அது சரி... ஆள் எப்படி...' என்றாள் பூர்ணா.'உன்னை பற்றியே பேசிகிட்டிருந்தான்...' பேசி கொண்டிருந்த போதே போன் அழைப்பு வர நகர்ந்தாள் பூர்ணா. அத்தையுடன் பேச வேண்டும் போல் தோன்றியது; எண்களை அழுத்தினாள்.அழைப்பை எடுக்கவில்லை; கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.யாருக்காவது போன் செய்ய வேண்டும் போல இருந்தது; இது ஒரு நோய்; பக்கத்தில் யாராவது போன் பேசினால், நாமும் பேச வேண்டும் போல தோன்றுவது இயல்பு தானே... நினைவுக்கு வந்தான் விக்ரம்.'அவனுக்கு போன் செய்யலாமா' நினைத்த மாத்திரத்தில் முடிவை மாற்றினாள்.மாலையில் எதிர்பார்த்தபடியே போன் செய்தான் விக்ரம். பேசி கொண்டிருந்த போது, அலைபேசியில் இரண்டாவது அழைப்பு வரும் சத்தம் கேட்டது; போனை எடுத்து பார்த்தாள்; அம்மாவின் அழைப்பு வர, கூடவே பதற்றம் வந்தது. 'விக்ரம் அப்புறம் கூப்பிடுகிறேன்.... அம்மா லைன்ல வராங்க...' அவசரமாய் அம்மாவின் அழைப்பை ஏற்றாள். 'நல்லா இருக்கியாமா...' என்ற சுகந்தி, பதிலை எதிர்பார்க்காமல், 'யார் கிட்ட பேசிட்டு இருக்கிற...' என்றாள்.'இங்க தான்... வகுப்பு தோழி கூட...''வகுப்பு தோழி கூட... போன்ல பேசுவியா... யாரு, பையனா, பொண்ணா...'அம்மாவின் கேள்வியால் அதிர்ந்தாள்.'சரி... சரி... படிக்கிறதுக்காக போயிருக்கோம், அப்படிங்கிறத ஞாபகம் வச்சுக்க; நிறைய மதிப்பெண் வாங்கணும்... அந்த பூர்ணா எப்படி...' 'நல்ல பொண்ணு... நல்லா பழகுறா.... ஏன்மா...''பூர்ணா நம்பரை அனுப்பு; ஏதாவது அவசரம்னா பேசிக்குவேன்...'அம்மாவுடன் பேசிய பின், நெருடலுடன் இருந்தாள்; கொஞ்சம் யோசித்தவள், உடனே, பூர்ணாவுக்கு போன் செய்து, எங்கு இருக்கிறாள் என்று விசாரித்தாள்.இதற்கு பின் விளையாட பிடிக்கவில்லை; விடுதிக்கு மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.போனில், 'பையனா, பொண்ணா' என்று அம்மா கேட்டது, மனதை உறுத்தியது.கட்டிலில் படுத்த படி அலைபேசியை நோண்டியபடி இருந்தாள் பூர்ணா; கையசைத்து சிரித்தாள் ஸ்ருதி. 'உங்க அம்மா...போன் செய்தாங்க ஸ்ருதி...' என்றாள் பூர்ணா; அவள் சொன்ன விஷயம், ஸ்ருதியை அதிர வைத்தது. கிட்டத் தட்ட எதிர்பார்த்தது என்றாலும், இவ்வளவு சீக்கிரம், நடக்கும் என நினைக்கவில்லை. இந்த மனவோட்டத்துடன், 'அம்மா போன் செய்தார்களா...' என்றாள்.'ஆமா... உன் நம்பரில் போன் போகலயாம்... அதனால, என் நம்பருக்கு செய்தாங்க; நீ, என் நம்பரை கொடுத்தியா...' என்றாள் பூர்ணா. 'ஆமா... கொடுத்தேன்; சரி... என்ன கேட்டாங்க...' 'நீ பக்கத்துல இருக்கிறியான்னு கேட்டு, உன் கிட்ட போனை, கொடுக்க சொன்னாங்க...' 'ஓ...' 'நீ பேட்மிட்டன் கோர்ட்டில் இருக்கிறதா கூறினேன்; உன் கிட்ட சொல்லிட்டு போனாளானும் கேட்டாங்க... உன் மேல் அம்மாவுக்கு ரொம்ப அக்கறை...' 'நான் எங்க இருக்கிறேன்; யாரு கூட பேசினேன் என்பதை நோட்டம் விட்டுள்ளார்' என்பதை நினைத்து கடுப்பானாள். போனை மேஜையில் போட்டு, நாற்காலியில், 'தொப்' என அமர்ந்தாள் ஸ்ருதி.- தொடரும்...ரவி