சரியான போட்டி!
சொர்ணபுரி நாட்டு அரசருக்கு, நீண்ட காலமாக குழந்தை இல்லை. பல பூஜைகளும், யாகங்களும் செய்தார். அதன் பலனாக, அழகான பெண் குழந்தை பிறந்தது. அளவில்லா மகிழ்ச்சிஅடைந்து, நாட்டு மக்கள், 'போதும்... போதும்...' என்று சொல்லும் அளவுக்கு, பொண்ணும், பொருளும் வாரி வழங்கினார். அரசரையும், இளவரசியையும் மனம் குளிர வாழ்த்தினர் மக்கள்.சொர்ண சுந்தரி என்னும் பெயர் சூட்டி, சீரும், சிறப்புமாக வளர்த்தார். நாட்டில் கற்றறிந்த அறிஞர்களை அழைத்து, கல்வி போதித்தார். முறையாக கற்று, தேர்ச்சி பெற்றாள் சொர்ண சுந்தரி.இளம் பெண்ணானவுடன் திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.''தந்தையே... என் திருமண விஷயத்தில், நான் விரும்பும் மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமையை எனக்கு தாருங்கள்; என்னை யார் மணக்க விரும்புகின்றனரோ, அவர்களுக்கு ஒரு பரீட்சை வைக்க விரும்புகிறேன்,'' என்றாள்.''சரி... உன் இஷ்டம்... அப்படி என்ன பரீட்சை வைக்க விரும்புகிறாய்...'' என்றார்.''தந்தையே... அரண்மனை மண்டபத்தில், மவுனமாக அமர்ந்து கொள்வேன்; யார் என்னை பேச வைக்கிறாரோ அவரை தான் மணப்பேன்...''மகள் கூறிய நிபந்தனையை கேட்ட அரசர், மந்திரியை அழைத்து, ''என் மகள் திருமண விஷயத்தில், அவளுக்கேற்ற மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமையை, அவளிடமே விட்டு விட்டேன். அண்டை நாடுகளில் உள்ள அரச குமாரர்களை என் மகள் நடத்தும் போட்டியில், பங்கேற்க சொல்லுங்கள். குறிப்பாக, போட்டியில் பங்கேற்பவர்கள், அரச குமாரர்களாக இருக்க வேண்டும் என்பதை ஓலைச்சுவடியில் குறிப்பிடுங்கள்...'' என்றார்.அரசரின் ஆணைப்படியே அண்டை நாட்டு இளவரசர்களுக்கு ஓலை அனுப்பினார் மந்திரி.சொர்ணாவின் அழகும், அறிவும் பற்றிக் கேள்விப்பட்ட இளவரசர்கள், போட்டியில் பங்கேற்க, வந்த வண்ணம் இருந்தனர். அவளது மவுனத்தை கலைத்து, பேச வைக்க முடியாமல், இளவரசர்கள், தோற்றுப்போய் கவலையுடன் செல்வதை பார்த்த அரசர், வேதனை அடைந்தார்.ஒரு நாள் -வயது முதிர்ந்த அரசர் ஒருவர், வணங்கி நின்றார்.''வந்த காரணம் என்ன...'' என்று கேட்டார் அரசர்.''மதிப்பிற்குரிய அரசர் அவர்களே... தங்கள் மகள் அறிவித்துள்ள போட்டியில் கலந்து, வென்று, உங்கள் மகளை மணக்க வந்துள்ளேன்...'' என்றார்.''உங்களை பார்த்தால் வயதனாவர் போல் தெரிகிறதே... நீங்கள் எப்படி போட்டியில் கலந்து கொள்ள முடியும்...'' என்றார்.''அரச குமாரர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்று கூறிய நீங்கள், வயதான அரச குமாரர்கள் பங்கேற்க கூடாது என்று கூறவில்லையே... அண்டை நாடான, சிவபுரியின் அரசகுமாரன். என் தந்தை, வயதான நிலையிலும், ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவதால், தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறேன். எனக்கு போட்டியில் பங்கேற்க தகுதி உண்டு...'' என்று கூறினார்.'சரி!' என்று அனுமதித்தார்.வயது முதிர்ந்த இளவரசர், சொர்ண சுந்தரியின் அருகில் சென்று, அவளையே உற்று பார்த்தார்.தன்னை ஒரு வயதானவன் உற்று பார்ப்பதை கவனித்த சொர்ண சுந்தரி, முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.சொர்ண சுந்தரியின் கையை இறுக்கமாக பிடித்து, ''அன்பே... என்னை மறக்க, உன்னால் எப்படி முடிந்தது... நீயும், நானும் உண்மையாக பழகி வந்தது, உன் தந்தைக்கு தெரியாதா... உன்னை நினைத்து உருகி உருகி, என் இளமையான தோற்றம், முதுமையாக மாறி விட்டது. ''என்னுடன் பழகி ஏமாற்றி விட்டு, சுயம் வரம் நடத்த உனக்கு எப்படி மனம் வந்தது... வயதானவராக இருந்தாலும், உங்களை நேசிக்கிறேன் என்றாயே... மறந்து விட்டாயா... தயவு செய்து மறுக்காமல், என்னை ஏற்று, என் சொந்த நாடான சிவபுரிக்கு வந்துவிடு...'' என்று, அன்பும், பாசமும் நிறைந்த குரலில் கூறினார்.வயதான இளவரசர் கூறிய வார்த்தைகளை கேட்ட சொர்ண சுந்தரிக்கு, அளவுக்கதிமான கோபம் வந்து, போட்டியை மறந்து, ''நீ யாரென்று எனக்கு தெரியாத போது, உன்னுடன் எப்படி பழகி இருக்க முடியும்... நீ கூறியது எல்லாம் பொய்; நீ ஒரு ஏமாற்றுக்காரன்...'' என்று உரக்க கூச்சலிட்டபடியே, தன் கையை உதறி விட்டு எழுந்தாள்.''போட்டி விதிகளின்படி உங்களை பேச வைத்து விட்டேன்; அரசே எனக்கு சொர்ணாவை திருமணம் செய்து வையுங்கள்...'' என்றார் வயதானவர்.இதை சற்றும் எதிர்பாரத இளவரசி, 'ஓ...' என்று அழுதபடி, தன் அறையை நோக்கி ஓடினாள்.அரசருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த முதியவரோ, ''இப்பவே சொர்ணாவுடன் எனக்கு திருமணம் ஆக வேண்டும்...'' என்று ஒற்றைக்காலில் நின்றார்.அழுது அழுது நொந்து போன சொர்ணா, வேறு வழியின்றி, மனதை தேற்றி, திருமணத்திற்கு சம்மதித்தாள்.திருமண ஏற்பாடுகள் விரைவில் நடந்தது. யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. 'அழகு சுந்தரியான தங்கள் இளவரசிக்கு, இப்படி ஒரு முதியவர் மாப்பிள்ளையா... நம் நாட்டின் கதி தான் என்ன...' சொர்ண சுந்தரியை நினைத்து வேதனைபட்டனர் மக்கள்.மங்கள வாத்தியங்கள் முழங்கின; மணமேடையில் தள்ளாடியபடி எழுந்து நின்ற மாப்பிள்ளையை பார்த்து, மக்கள் வெகுண்டனர். 'இந்த கிழவனுக்கு, எதுக்கு இந்த ஆசை!' என்று, கண்ணீர் விட்டார் அரசர்.அப்போது, தள்ளாடியபடி எழுந்து நின்ற முதியவர், தன் நரை முடி டோப்பாவை கழட்டி, மாறுவேஷத்தை களைத்தார்.தன் எதிரே அழகு நிறைந்த அரச குமாரனை பார்த்த சொர்ண சுந்தரி, இன்ப அதிர்ச்சியில், நாணத்தால் தலை தாழ்த்தினாள். வயது முதிர்ந்தவராக வந்து, இளவரசனாக மாறியவன், சொர்ணசுந்திரியின் அருகில் சென்று, ''இளவரசி... இப்போது உங்களுக்கு என்னை மணக்க சம்மதமா...'' என்றான். நடந்த நிகழ்ச்சிகளை கண்ட அரசரும், மக்களும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயினர்.அப்புறம் என்ன... 'இளவரசர், இளவரசி வாழ்க!' என்ற கோஷம் சொர்ணபுரி எங்கும் ஒலித்தது. திருமணம் இனிதே நடந்தது. மருமகனை தன் நாட்டிலேயே தங்கி, நல்லமுறையில் ஆட்சி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.இளவரசரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ந்தனர்.இளவரசர் எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்பட்டு போட்டியில் வென்றுவிட்டார் பார்த்தீர்காளா... நீங்களும் புத்திசாலிகளா இருங்க!