போர்க்கள நிருபர்!
உலகை புரட்டி போடும் சம்பவங்களில், துணிச்சலாக தகவலை பதிவு செய்வது பத்திரிகை நிருபரின் பணி. கணினி யுகத்தில், நொடியில் தகவல் பரிமாறும் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இந்த வசதிகள் இல்லாத காலத்திலும் மிகவும் சிரமத்துடன் பகிர்ந்த செய்திகள், இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன. உலகின் முதல் போர்க்கள நிருபராக, சஞ்சயனை கொள்ளலாம். இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரம். மகாபாரத யுத்தம் அறிவிக்கப்பட்டதும், கவுரவர்களின் தந்தையான பார்வையற்ற திருதராஸ்டிரனுக்கு, போர் நிலவரத்தை அன்றாடம் கூறும் பணியை செய்து வந்தார்.போர் துவங்கும் முன், இரண்டு பிரிவுகளிலும் படைத் தளபதிகளை சந்தித்து, போரில் கலந்து கொள்பவர் விபரம், எந்த மாதிரி தாக்குதல், உபயோகிக்கும் ஆயுதங்கள் போன்ற விபரங்களை சேகரிப்பார். மாலையில், போர் முடிந்தவுடன் சேத மதிப்பு, இரு தரப்பிலும் உயிரிழப்பு, காயம்பட்டோர் எண்ணிக்கை, வெற்றி, தோல்வி மதிப்பீடு விபரங்களை சேகரித்து, திருதராஸ்டிரனுக்கு தவறாது கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார், சஞ்சயன். இப்போதும், போர் செய்திகளை உலகுக்கு தெரிவிக்கும் நிருபர்கள், போர்க்களத்தில் பணி புரிகின்றனர். பெரும் ஆபத்தின் நடுவிலும் தயங்காமல் தகவல் சேகரிக்கின்றனர்.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 1807 முதல், 1809 வரை நடந்த பெனின்சுலார் போரை, நிருபர் ஹென்றி கிராப் ராபின்சன் பதிவு செய்துள்ளார். இவர், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்தவர். ஐரோப்பிய நாடான ஆஸ்திரிய இளவரசர், பிரான்சிஸ் பெர்டினாண்ட், மனைவியுடன் காரில் சென்ற போது, பிரின்சிப் என்பவர், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதனால் ஏற்பட்ட கலவரம் முதல் உலகப் போர் மூள காரணமாக அமைந்தது.இது குறித்து, இங்கிலாந்து, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இங்கிலாந்தை சேர்ந்த, சர் பிலிப் கிப்ஸ், பெர்சிவல் பிலிப்ஸ், வில்லியம் பீச் தாமஸ், ஹென்றி பெர்ரி ராபின்சன் உள்ளிட்ட நிருபர் குழு, போர்க்களத்தில் சேகரித்து அனுப்பிய தகவல்கள் தான், உலகப் போரின் குரூரங்களை வெளிப்படுத்தியது.முதல் உலகப் போரில் தான், இயந்திர துப்பாக்கி, வான்வெளி தாக்குதல், கடல் வழி தாக்குதல், நீர் மூழ்கி கப்பல் தாக்குதல், பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் என பல வழிமுறைகளில் போர் நடந்தது. நவீன முறைகள், கையாளப்பட்ட விபரங்களை, போர்க்கள நிருபர்கள் துல்லியமாக தெரிவித்துள்ளனர். துணிச்சலுடன் போர்க்களத்தில் இறங்கி பணியாற்றும் நிருபர்கள் தரும் தகவல்கள், அமைதியை நோக்கி, உலகை பயணம் செய்ய வைக்கின்றன.- எஸ்.பிரபு ராஜா