உள்ளூர் செய்திகள்

ஆப்பிரிக்க வீடுகள்!

நீங்கள் ஆப்பிரிக்காவை சுற்றி பயணிக்கையில் விதவிதமான கட்டடங்களை, விதவிதமான பொருட்களால் ஆன கட்டடங்களை காணலாம். கட்டடங்களின் அமைப்பு அந்த வீட்டில் குடியேறுபவர்களின் வாழ்க்கை தரத்தை பொறுத்தும் இருக்கும். உதாரணத்திற்கு, காலஹரி பாலைவனத்தில் வாழ்பவர்களை பற்றி பார்க்கலாம். அவர்கள் தங்கள் எல்லைக்குள் வேட்டையாடுவார்கள், பழங்கள் சேகரிப்பர்; அவர்கள் தங்களுடன் பல பொருட்களை எடுத்துச்செல்வர். ஆனால், எந்த வாகனத்தையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் தேவையான இடத்தில் குச்சிகள், கிளைகள், இலைகள் மற்றும் புற்களை கொண்டு தங்குமிடம் அமைப்பர்.மற்றைய மக்கள், உதாரணத்திற்கு மேற்கு ஆப்பிரிக்காவின் 'சாட்' மற்றும் நைஜீரியாவின் 'நியூப்' ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தமது வயலின் அருகில் நிரந்தர குடியிருப்புகளை கட்டி கொண்டு வாழ்கின்றனர். அவர்கள் தமது வீட்டை வட்ட வடிவமாகவே கட்டுவர். மரம், மண் (சுவர்கள்), புற்கள் (கூரை) போன்ற பொருட்களை பயன்படுத்துவர். இங்கே வீடுகள் அருகருகே இருக்கும். இவ்வீடுகளை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்கும்.

நகரு, நகரு!

சோமாலியா போன்ற ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளில் நிரந்தர நதிகள் கிடையாது. குறைவான மழைபொழிவுதான். வாழும் ஒரே வழி விலங்கு களை வளர்ப்பதுதான். ஏனெனில், தண்ணீரையும், மேய்ச்சல் நிலத்தையும் தேடியபடி இவர்கள் நகர்ந்து கொண்டே இருப்பர். அவர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்வதால் அவர்களுக்கு தற்காலிக வீடுதான் தேவைப்படும். ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும் ஒரு வீடு உண்டு. கட்டைகள், குச்சிகள், மட்டை களால் ஆன அந்த வீடு அமைப்பதற்கும், அள்ளி சுருட்டவும் எளிதானது. ஒரு இடம் விட்டு வேறு இடம் நகரும்போது அப்பெண் தன் வீட்டை சுருட்டி மூட்டை கட்டி ஒட்டகத்தில் ஏற்றி விடுவாள்.

வழிபாட்டிற்குரிய இடம்!

ஆப்பிரிக்க சவன்னா பகுதிகளில் முஸ்லிம்களின் மசூதிகள் பெரிய சைஸில் கட்டப் பட்டிருக்கும். ஈரக்குழைவான மண்ணிலிருந்து செங்கற்கள் செய்யப்படும். அவை சூரியஒளியில் காய வைக்கப்படும். பின் அதன் மூலம் மசூதி கட்டப்பட்டு, மண் பூச்சு பூசப்படும். சூடான, வறண்ட காலங்களில் இந்த ஈரக்குழைவான மண் அற்புதமான வீடு கட்டும் பொருளாகும். பெரிய மழையையும் தாங்கும். ஆனால், மழைக்குப்பின் உடனடியாக வெய்யில் காய்ந்து விட வேண்டும்.

வீடு அலங்கரிப்பு!

தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வாழும் பெண்கள், தங்கள் வீட்டின் வெளிச் சுவரை பல வண்ணங்கள் மற்றும் பெரிய டிசைன்களை பயன்படுத்தி அலங்கரிப்பர். முதலில் பார்க்கும் போது ஏதோ ஜியாமெட்ரி வடிவங்களை போல அந்த டிசைன்கள் தோற்றமளிக்கும். ஆனால், அவை கட்டடக்கலை யின் பிரதிபலிப்பு. நேரான மற்றும் பக்கவாட்டு கோடுகள் வீட்டை தாங்கும் அமைப்புக்களான பீம்களை குறிக்கும். பெண்கள் டிசைன்களை தமது கைகள், விரல்கள், பிரஷ்கள் மற்றும் நெய்யப்பட்ட துணிகளை கொண்டு செய்வர்.

தண்ணீரிலே வாழ்க்கை!

தண்ணீரில் கம்புகள் நட்டு தண்ணீர் மட்டத்தை விட உயரமாய் எழுப்பி கட்டப்படும் வீடுகள் பல அனுகூலமான சிறப்புகளை கொண்டவை. இதுபோன்ற வீடுகள் மலைச்சரிவில் அல்லது தண்ணீரின் மீதும் அமைக்க கூடியவை. காற்று எளிதாய் உலாவும். இந்த கம்பு அமைப்பு ஆபத்தான தண்ணீர் வாழ் விலங்குகள் மற்றும் பாம்புகளிடமிருந்து பாதுகாக்கிறது. நிலத்தில் கட்டப்படும் இது போன்ற வீடுகளின் அடியில் இருக்கும் இடம், பொருட்களை சேமிக்கும் கிடங்காக பயன்படுத்தப்படும். இல்லையென்றால் ஆடு, மாடுகளை கட்ட பயன்படும். மீன்பிடி கிராமங்கள் அனைத்திலும் இது போன்ற படகுதான் போக்குவரத்து வாகனம்!

விளிம்புகளில் வாழ்க்கை!

உயரபகுதியில் வாழ்பவர்கள் டோகான் இன மக்கள். அவர்கள் தங்கள் கிராமங்களை மாலிப்பகுதியிலும், கூழாங்கற்களால் வீடுகளையும் அமைப்பர். இவை துருத்தி கொண்டிருப்பது போல இருக்கும்.கிராமம்-மாவட்டங்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்தையும் சுற்றி கல் சுவர் இருக்கும். கிராமத்திற்கு செல்ல ஒரே வழி குறுகலான கதவின் ஊடே போவதுதான். சுற்று சுவருக்கு வெளியே இருக்கும் கட்டடத்தில் ஆண்கள் மட்டுமே இருப்பர். இதெல்லாம் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளாகும்.

பழ்சு, புத்சு!

மொராக்கோவின் பெரும்பான்மையான டவுன்கள் இஸ்லாமிய அல்லது ஐரோப்பிய பிரதிபலிப்பை கொண்டவை என்பது அவை அமைக்கப்பட்ட விதத்திலிருந்து அறியவரும். இந்த பாரம்பரிய இஸ்லாமிய டவுனிற்கு வரவேற்பு கேட் உண்டு. இங்கே மார்க்கெட்டுகள், தொன்மையான மசூதிகள், முற்றத்துடன் கட்டப்பட்டு பார்வைக்கு மறைவாய் இருக்கும் வீடுகள் உள்ளன. பின்னர் வந்த ஐரோப்பியர்கள் தங்கள் டவுன்களை அகலமாய், மரங்கள் உள்ள தெருக்களுடன் அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !