கூடா நட்பு!
பச்சை மலைக்காட்டில் வாழ்ந்த பறவைகள், விலங்குகள், பூச்சிகளுக்குள், அடிக்கடி சண்டை, சச்சரவு வரும். வயதில் மூத்த விலங்கு தீர்த்து வைக்கும்.அந்த காட்டில் விலங்குகளுக்கு, ஒரு வினோதப் பழக்கம் இருந்தது. பவுர்ணமி தோறும், நிலவொளியில் கூட்டம் நடத்தின. மான், சிங்கம், சிறுத்தை, காட்டெருமை, முயல் என, அனைத்தும் கலந்து கொள்ளும்.கூட்டத்தில், தாவரத்தை உணவாக கொள்ளும் சைவ விலங்குகளும், மாமிசத்தை உண்ணும் அசைவ விலங்குகளும், இரு அணிகளாக பிரிந்து, விதிமீறல்களை விவாதிக்கும்.அன்றை கூட்டத்தில், 'எங்க எல்லைக்குள் வந்து, மாமிச உண்ணிகள் வேட்டையாடக் கூடாது. வேண்டுமென்றால், நீர் அருந்தும் இடம், நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் வேட்டையாடிக் கொள்ளலாம்' என, தீர்மானம் கொண்டுவந்தன தாவர உண்ணிகள். இதை, மாமிச உண்ணிகள் ஏற்றன. அன்று முதல், விதித்திருந்த எல்லைக்குள் வாழ்ந்தன தாவர உண்ணிகள். மழைக்காலம் என்பதால், நீர் அருந்த தடாகத்துக்கு செல்லும் அவசியமும் ஏற்படவில்லை. தப்பி தவறி, வழி மாறியவற்றை மட்டுமே, அடித்து சாப்பிட்டன மாமிச உண்ணிகள்.எந்த தவார உண்ணியும், வெளியே வரவில்லை. கவலையடைந்த மாமிச உண்ணிகள் தனியாக கூட்டம் போட்டன. அதில், 'இந்த நிலை நீடித்தால், பட்டினியால் மடிய வேண்டியது தான்...' என, கோபமாக கூறியது சிறுத்தை. 'என் நிலையை பாருங்க. ஊர்ந்து தான் செல்ல முடியும். எலிகள் தான், என் உணவு. அவையும் கூட, எல்லை தாண்டி வருவதில்லை. காத்திருப்பது ரொம்ப கடுப்பாயிருக்கு...' என்றது பாம்பு.'பொறுமையைா இருங்க... இன்னும் ஒரு மாதத்தில், கோடை வந்துவிடும். அப்போ, தாவர உண்ணிகள் எல்லாம் நீர் பருக, நம் பகுதிக்கு தான் வந்தாகணும்...' என்றது நரி.'அதுவரை பசிக்கு என்ன செய்வது; வேறு உணவும், சாப்பிட்டுப் பழக்கமில்லையே...' என்று கவலைப்பட்டது சிங்கம்.குதித்து வந்த நரி, 'ஒன்று செய்கிறேன்; சைவ விலங்குகளை நயமாகப் பேசி, அழைத்து வருகிறேன். நீங்க அடித்து உண்ணுங்க; அதில், கால்பகுதியை எனக்கும், என் கூட்டத்தாருக்கும் பங்காக தரணும்...' என்றது. அனைத்து விலங்குகளும், இதற்கு ஆதரவு தெரிவித்தன.மறுநாள் -கம்பளியைப் போர்த்தியபடி, தாவர உண்ணிகள் நடமாடும் எல்லையில் படுத்து கிடந்தது நரி. அதை எட்டிப் பார்த்த குரங்கு, மற்ற விலங்குகளிடம் கூறியது. தாவர விலங்குகள் திரண்டு, நரியை நலம் விசாரித்தன. அப்போது, காட்டெருமை மிகவும் ரகசியமாக, 'இவன் பொய்யன், நன்றாகப் பாருங்கள்... உடலில் சத்து இல்லாதது போல நடிக்கிறான்; நம்பாதீர்; பத்திரமாக எல்லைக்குள் திரும்பி போயிடுங்க...' என கூறி எச்சரித்தது.வெகுளி முயல் குட்டி ஒன்று, 'ஏய்... காட்டெருமையே, திட்டும் சொற்களில் தான், உன் பெயரை மனுஷங்களே பயன்படுத்துவர். உன் ஆலோசனை எல்லாம் அறிவிலியாகத் தான் இருக்கும். வேண்டுமானால் நீ திரும்பி போ... நாங்கள் நரிக்கு உதவுகிறோம்...' என திட்டியது. மனம் நொந்த காட்டெருமை அங்கிருந்து அகன்றது.வஞ்சக எண்ணத்துடன் கண் விழித்த நரி, 'நண்பர்களே... வன தேவதைக்காக விரதம் இருக்கிறேன். அசைவ உணவுகளை தொடுவதில்லை என, முடிவு செய்துள்ளேன். எனவே, எங்கள் பகுதியில் எந்தெந்த இலை, காய்களை சாப்பிடலாம் என, கற்றுத் தாருங்கள்...' என, தந்திரமாக கூறியது. வெள்ளை உள்ளத்துடன், 'அண்ணா... நான் அடையாள காட்ட வருகிறேன்...' என்றது முயல் குட்டி.கூடியிருந்த மிருகங்களை எல்லாம் அழைத்து போக முயன்றது நரி.அவை மறுத்து, 'முயலுடன் சென்று பாடம் கற்றுக்கொள்... நாங்கள் விளையாடி காத்திருக்கிறோம்...' என்றன.நரியுடன் புறப்பட்டது முயல்.'ஒரே ஒரு முயல் தானே சிக்கியுள்ளது. இதை யாருக்குப் பங்கு வைப்பது' என யோசித்தபடி நடந்தது நரி. எதிரில் வந்த புலி, சடார் என பாய்ந்து, முயலை அடித்து தின்றது. உடனே நரி, 'புலி மாமா... என் பங்கு எங்கே...' என்றது.'இன்று இல்லை... நாளை பார்க்கலாம்...' என கூறியபடியே, ஏப்பம் விட்டு சென்றது.மீண்டும் தாவர உண்ணிகளை தேடி சென்றது நரி. அப்போது, 'நரி அண்ணா...முயல் தம்பி எங்கே...' என்றது தேவாங்கு.'அவன், எப்போதோ வீட்டுக்கு சென்றுவிட்டானே...' என்று பசப்பிய நரி, தினமும், ஆமை, பன்றி, ஆடு, என, மிருகங்களைக் கடத்தி சென்று பலியாக்கியது. இதை கவனித்த தாவர உண்ணிகள், சிறு மிருகங்களை எச்சரித்தன.அன்று - துள்ளிக்குதித்த மான்குட்டி, 'அந்த குள்ளநரிக்கு தகுந்தப் பாடம் கற்பிக்கிறேன்...' என கூறியபடி ஓடியது.நரியை மண்டியிட்டு வணங்கி, 'அண்ணா... என் நண்பர்களை எல்லாம் புது உலகத்துக்கு அழைத்து சென்றீர்களே... அந்த இடத்தை நானும் பார்க்க விரும்புகிறேன்...' என்றது.மனதில் சிரித்தபடி, மான்குட்டியுடன் நடந்தது நரி. வழியில், 'அண்ணா... தினமும் நீங்க இவ்ளோ துாரம் நடப்பது வேதனை தருகிறது. கால்கள் வலிக்குமே... அதை, தவிர்க்க, ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன். இலை, தழை, நார், மரப்பட்டைகளால் செருப்பு தயாரித்துள்ளேன்; அதை அணிந்தால் சுகமாக நடக்கலாம்...' என்றது மான்குட்டி.இதை நம்பி, 'சரி... காலில் அந்த செருப்பை மாட்டி விடு; உன் ஆசையைக் கெடுப்பானேன்...' என, அமர்ந்தது நரி.கொடிகளால் நரியின் உடலை இறுக கட்டியபடி, 'அண்ணா... இப்போ எழுந்திருங்க...' என்றது மான்குட்டி.எழ முயன்றது நரி; முடியவில்லை. அலறி துடித்தபடி, 'நயவஞ்சக மானே... என்ன செய்தாய்...' என கதறியது. அசையக்கூட முடியாமல் அங்கேயே துடித்து மாண்டது நரி. குழந்தைகளே... உலகில், நன்மையும் தீமையும் உண்டு. பெரியோரின் அறிவுரைகளைக் கேட்டு, தீயவற்றை விலக்கி, நல்ல விஷயங்களை கற்று வாழ பழக வேண்டும்.வாண்டுமாமி