உள்ளூர் செய்திகள்

ஆச்சரியம் தரும் உயிரினம் ஓகாபி!

வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கியை இணைத்து உருவாக்கியது போல் தோன்றும் விலங்கு ஓகாபி. ஒட்டகச்சிவிங்கி குடும்பத்தில் மற்றொரு வகை விலங்கினம்! இது...* அடர் பழுப்பு நிற உடலையும், வெண் சாம்பல் நிற முகத்தையும் கொண்டது * கால் மற்றும் உடல் பின்புறம் வரிக்குதிரைக்கு இருப்பது போல் கோடுகள் தென்படும் * ஆண், 250 கிலோ; பெண், 356 கிலோ வரை எடை இருக்கும்* நீண்டு உயர்ந்த காதுகளும், கொம்புகளும் உண்டு* நீல நிறத்தில் சொரசொரப்பான நாக்கை கொண்டது* நாக்கால், காதுகளை தொட முடிந்த ஒரே பாலுாட்டி வகை விலங்கு * நீண்ட கழுத்தும், தலையும் ஒட்டகச்சிவிங்கியை போல் இருக்கும்* உடலில் முடி, வெல்வெட் போன்று மென்மை மற்றும் வழுவழுப்பாக இருக்கும் * உடலில் நீர் ஒட்டாது என்பதால் மழைக்காடுகளில் எளிதாக வாழும் * உடலில் அடர் பழுப்பு மற்றும் வெண் நிறக் கோடுகள், அடர்ந்த மர நிழலை ஒத்திருக்கும்; பார்வையில் எளிதாக படாது* கூச்ச சுபாவம் மிக்கது; எப்போதும் தனிமையை விரும்பும்.இதன் கால் குளம்புகளுக்கு இடையே, ஒருவகை சுரப்பி உள்ளது. நடக்கும் போது, இதில் இருந்து கருநிறத்தில் வழுவழுப்பான, 'பெரமோன்' என்ற திரவம் வடியும். அது, நறுமணத்துடன் இருக்கும். இந்த வாசனை தான், அதன் வசிப்பிட எல்லையை நிர்ணயிக்க உதவுகிறது. இது, தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது; பழம், இலை, மொட்டுக்களை உண்ணும். தாது சத்துகள் போதிய அளவில் கிடைக்காவிட்டால், ஆற்றோரம் திரண்டிருக்கும் சிவப்பு களிமண்ணை உண்டு நிவர்திக்கும். தினமும், ௪ கி.மீ., துாரம் வரை நடந்து, 27 கிலோ வரை இலை தழைகளை உண்ணும். இதன் உணவு பட்டியலில் உள்ள பல தாவரங்கள், மிகவும் விஷத்தன்மை உள்ளவை. அவற்றை மற்ற விலங்குகளால் உண்ண முடியாது. ஓகாபியின் கர்ப்ப காலம், 493 நாட்கள். பெரும்பாலும் ஒரே குட்டியே ஈனும். பிறந்து இரண்டு மாதங்கள் வரை குட்டியை மறைவிடத்தில் வளர்க்கும். பசுவை விட, ஓகாபி பாலில் அதிக அளவு புரதம் உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.குட்டியுடன் தொடர்பு கொள்ள மிகக்குறைந்த அதிர்வெண்ணில் ஒலி எழுப்பும். இதன் முக்கிய எதிரியான சிறுத்தை மற்றும் மனிதனுக்கு இவ்வொலி கேட்காது. அதிகபட்சமாக, 30 ஆண்டுகள் வரை வாழும். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த அறிஞர் ஹாரி ஹாமில்டன் ஜான்ஸ்டோன், 1901ல் ஆப்ரிக்க நாடான காங்கோ காடுகளில் ஆய்வு நடத்தினார்; அப்போது, பழங்குடியின மக்களிடம் ஓகாபி மண்டை ஓடுகளை கண்டார். இதை கண்டறிந்தவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக, இதன் விலங்கியல் பெயர், 'ஓகாபியா ஜான்ஸ்டோனி' என சூட்டப்பட்டுள்ளது.ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடகிழக்கு பகுதி மழைக்காட்டில், 15 ஆயிரம் ஓகாபிகள் மட்டுமே உள்ளதாக கணித்துள்ளனர். உணவு மற்றும் தோலுக்காக வேட்டையாடுவதால் அழிந்து வருகிறது. இதை, அருகி வரும் உயிரினங்களில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்.குழந்தைகளே... அரிய உயிரினங்களை பாதுகாப்போம்.- டாக்டர் வானதி பைசல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !