உள்ளூர் செய்திகள்

பதில் சொல்லுங்க கடவுளே!

ஓர் அழகான குளம். அக்குளத்தில் தாமரையும், ஆம்பலும் பூத்து இருந்தன. அதன் கரையோரத்தில் கொக்கு மீனுக்காகக் காத்து நின்றது.குளத்திற்குப் பக்கத்தில் பெரிய வேப்பமரம் வளர்ந்திருந்தது. அதன் வழியே நடந்து செல்பவர்கள் இளைப்பாற குளத்தில் நீரைக் குடித்துவிட்டு, அருகில் வளர்ந்துள்ள வேப்பமரத்தடியில் உறங்கிவிட்டுச் செல்வர்.பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தது. வேப்பமரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கிளையில் உட்கார்ந்தது.குளக்கரையில் மீனுக் காகக் காத்திருந்த கொக்கு, மீன் கிடைக்காததால், பறந்து சென்று வேப்ப மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டது.நீர்க்கோழி குளத்தை வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. குளத்தின் நடுவே உயரத்தில் தன் இறக்கையை விரித்துப் பறந்தபடி இருந்தது. சிறிது நேரத்தில் குளத்தில் மூழ்கியது. அதன் வாயில் ஒரு சிறு மீனைக் கொண்டு மேலே வந்தது. தன் சிறகடித்துப் பறந்து வேப்ப மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.புல்தரை மீது மைனா அசைந்தாடி அசைந்தாடி நடந்தது. சிறிது நேரம் சென்றதும் மணலைத் தன் மூக்கினால் கிளறி ஒரு மண் புழுவைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்று வேப்பமரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டது.நீர்க்கோழி பறவை கொக்கைப் பார்த்து, ''கொக்கே கொக்கே, என்னைப்போல் நீயும் குளத்தில் மூழ்கி மீன்களைப் பிடித்துத் தின்னக் கூடாதா?'' என்று கேட்டது.''நீர்க்கோழி நீ உருவத்தில் சிறிய பறவை, உன்னால் விரைவாகத் தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியும். ஆனால், நான் உன்னைப்போல் இல்லையே! என்னுடைய நீண்ட காலும், பெரிய இறக்கையும் தண்ணீரில் அழுந்தினால் சீக்கிரம் தண்ணீரை விட்டுவர முடியாது. நான் எப்படி உன்னைப்போல் செய்ய முடியும்?'' என்று கொக்கு கேட்டது.''பாவம்! பெரிய உருவமாக இருந்தாலும், நீ என்னைப் போல பாடுபட முடியவில்லை யல்லவா? என்ன செய்வது! நீ கவலைப் படாதே...'' என்று நீர்க்கோழி கூறியது.''நான் எதற்குக் கவலைப் படவேண்டும். உன்னைப்போல் சின்னஞ்சிறு மீன்களைப் பிடித்து நான் சாப்பிட மாட்டேன். என் உணவுக்கு ஏற்ற மீன் வந்தால்தான் அதைப் பிடித்துத் தின்பேன். அதனால்தான் மனிதர்கள் என்னைப் பற்றி 'ஓடு மீன் ஓட உறுமின் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு' என்று கூறுவர்,'' என்றது.''என்னைப் பற்றியும் தான் மனிதர்கள் சொல்கின்றனர்'' என்றது நீர்க்கோழி.''என்னவென்று உன்னைப் பற்றிச் சொல்கின்றனர்?'' என்று கேட்டது கொக்கு.''நீர்க்கோழி மாதிரி கொத்திக்கிட்டுப் போகிறான் பார்,'' என்று கூறுகின்றனர் என்றது நீர்க்கோழி பறவை.''உன்னைவிட உருவத்தில், நான் தான் பெரியவன்; செயலில் சிறந்தவன். அதனால் நான் உயர்ந்தவன்,'' என்றது கொக்கு.''இல்லை, இல்லை. உன்னை விட நான்தான் அழகிலும், அமைப்பிலும், சுறுசுறுப்பிலும் சிறந்தவன். அதனால் உன்னைவிட நான் உயர்ந்தவன்,'' என்றது நீர்க்கோழிப் பறவை.இவைகள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மைனா தன் வாயிலுள்ள புழுவை வேகமாக விழுங்கியது. கிளையை விட்டுப் பறந்து வந்து அவைகளின் அருகில் உட்கார்ந்தது.நீர்க்கோழியும், கொக்கும் மைனாவை பார்த்தன.''உங்கள் இருவரை விட நான்தான் சிறந்தவன்,'' என்றது மைனா.''என்னைப்போல் உன்னால் பறக்க முடியுமா அல்லது என்னை விட உருவத்தில் பெருக்க முடியுமா?'' என்று கேட்டது கொக்கு.''என் உடம்பிலுள்ள வண்ணங்கள் உன் உடம்பில் உள்ளதா? என் அழகான உடலைப் போல் உனக்கு உடல் உள்ளதா? என் மூக்கைப் போல் நீ தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்க முடியுமா? நீ எப்படி என்னைவிட சிறக்க முடியும்? அல்லது உயர்வடைய முடியும்?'' என்று கேட்டது நீர்க்கோழி.''உங்களால் மனிதர்களுக்கு என்ன பயன்? என்னைப் பற்றி மனிதர்கள் எவ்வளவு புகழ்ச்சி யாகப் பேசுகின்றனர். புலவர்கள் என்னைப் பற்றி வாயாரப் பாடுகின்றனர் தெரியுமா?'' என்று கூறியது மைனா.''கா....கா...கா...'' என கத்திக் கொண்டு காகம் வேப்பமரத்தில் வந்து அமர்ந்தது. அதைக் கண்டதும் கொக்கு, நீர்க் கோழிப் பறவை, மைனா மூன்றும் விலகிச் சென்று உட்கார்ந்து கொண்டது.காகம் அவற்றின் செயலை ஓரக்கண்ணால் பார்த்தது. மீண்டும் தன் வாயைத் திறந்தது, ''கா...கா...'' என்று கத்தியது.''எதற்கு நீ இப்படிக் கத்துகிறாய்? கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கக்கூடாதா? உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா அல்லது தரையில் உட்கார்ந்து கத்தக்கூடாதா?'' என்று கேட்டது கொக்கு.''அந்தக் கரிய காக்கையிடம் எதற்குப் பேசு கிறாய்? அதன் உருவமும், குணமும் தெரியாதா என்ன?'' என்று கூறியது நீர்க்கோழி.''நம்மைப்போல் நல்லவைகளைச் சாப்பிடாது. வீதியிலுள்ள அசிங்கங்களை உண்டு வாழும் இந்தக் காகத்திடம் வீணாக ஏன் பேசுகிறீர்கள்,'' என்று சொன்னது மைனா.காகம் கொக்கை ஏற இறங்கப் பார்த்தது.''என்னைப் பார்த்தா வேறு இடத்திற்குப் போகச் சொல்கிறாய்? நீ அமர்ந்திருக்கும் இடம் என்னுடையதுதான்,'' என்றது காகம்.''உன்னுடையதா? உனக்குப் பைத்தியமா பிடித்துவிட்டது,'' என்று கேட்டது நீர்க்கோழி.''வேப்பமரத்தில் நமக்குச் சமமாக வந்து உட்கார்ந்து கொண்டதல்லவா? அதனால்தான் காகம் இப்படிப் பேசுகிறது,'' என்று சொன்னது மைனா.''என்னைப் பற்றியா இப்படிக் கூறுகிறீர்? எனக்குள்ள பண்புகளில் ஒன்றாவது உங்களுக்கு உண்டா? நான் 'கா...கா' என்று கத்துவது எனக்குக் கிடைத்த உணவை நான் மட்டும் உண்ணாமல், என் இனத்தை அழைத்து உண்பதற்காகக் கத்துகிறேன். அதனால் என்னை மனிதர்கள் ஒற்றுமைக்கு உதாரணமாகக் கூறுகின்றனர்,'' என்றது காகம்.கொக்கு, நீர்க்கோழி, மைனா மூன்றும் சேர்ந்து காகத்தை விரட்டத் தீர்மானித்தது.''எங்களை விட அழகிலோ, பறப்பதிலோ ஆற்றலில்லா நீ எங்களோடு சரிசமமாக அமர்ந்து பேச <உரிமை கிடையாது,'' என்று கூறி காகத்தை விரட்டின.காகம் பறந்த சென்று குளக்கரையின் ஓரத்தில் அமர்ந்திருந்தது. மைனா, கொக்கு, நீர்க்கோழி மூன்றும் அதன் எதிரே வந்து அமர்ந்தன.காகம் தனக்கு யாராவது வந்து நீதி வழங்க மாட்டார்களா என்று ஆவலோடு எதிர் பார்த்தது. அப்போது கடவுள் அவைகளின் முன்னே வந்து தோன்றினார்.காகம் அவசரமாகப் பறந்து கடவுளின் அருகில் சென்றது. கொக்கும், நீர்க்கோழியும், மைனாவும் பறந்து சென்று கடவுளின் அருகில் வந்தன.''ஐயா, நிறத்தில் என்னைப்போல் நீரில் சுறுசுறுப்புடன் வேலை செய்ய முடியாத காகம் எப்படி எனக்கு ஈடாக முடியும்?'' என்று கேட்டது நீர்க்கோழி.''ஆகாயத் தோட்டி என்று அழைக்கப்படும் காகம் எங்களோடு சரிசமமாக அந்த வேப்ப மரத்தில் அமர தகுதி உண்டா? நீங்களே சொல்லுங்கள்,'' என்று கேட்டது மைனா.கடவுள் அம்மூன்றையும் பார்த்தார். சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.''ஏ! பறவைகளே! நீங்கள் மூவரும் உ<ங்கள் சுயநலத்திற்காக வாழ்கிறீர்கள். உங்களால் உங்கள் இனத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. ஏன் உங்களுக்குள் ஒற்றுமையும் இருப்பதில்லை,'' என்று கூறினார்.மூன்றும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தன.''உருவத்தால் கருமை பெற்ற காகம் <உலகத்தார்க்கும் சேவை செய்யும் ஆகாயத் தோட்டியாகவும், தன் இனத்தைச் சேர்த்து உண்ணும் பண்பு கொண்டதாகவும் இருக்கிறது. அது மட்டுமல்ல, நீங்கள் அமர்ந் திருக்கும் அந்த வேப்பமரம் இந்தக் காக்கையின் எச்சத் தால் உண்டானது தான்,'' என்று கூறினார்.''நிழல் தரும் மரங் களை முளைக்கச் செய்கிறது. நிலத்தி லுள்ள அசுத்தங்களை அகற்றுகிறது. பகிர்ந்துண்ணும் பண்பை வளர்க்கிறது. அதனால் காகம் <உ<ங்களை விட பண்பால் உயர்ந்தது; கடமையில் சிறந்தது,'' என்று கடவுள் தீர்ப்பு வழங்கினார்.பருந்து கடவுளின் தீர்ப்பைக் கேட்டதும் அம்மூன்றையும் ஏளனமாகப் பார்த்தது.''தன்னைப் பற்றிப் பெருமை கொள்பவனும், வீண் ஆரவாரம் செய்பவனும், அடக்கம் இல்லாதவனும் அவமானப்படுவர்...'' என்று கூறி வேப்பமரத்தில் இருந்து பறந்து சென்றது.கடவுளின் தீர்ப்பைக் கேட்ட மூன்றும் வெட்கித் தலை குனிந்து பறந்து ஓடின.காகம், ''கா...கா....கா...'' என்று சிறகடித்துப் பறந்து சென்று வேப்பமரக் கிளையில் அமர்ந்தது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !