அணுகுமுறை!
கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம், நாடார் உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... ஒருநாள் தமிழாசிரியர் மாரியப்பன் கட்டுரை ஒன்றை தயார் செய்து, மாணவ, மாணவியரை எழுத வைத்திருந்தார். அன்று நான் வகுப்புக்கு செல்லவில்லை.மறுநாள் வகுப்புத் தோழியிடம் நோட்டை வாங்கி வந்தேன். பார்த்து எழுதிய பின், நோட்டுகளை மேஜையில் வைத்திருந்தேன்.தோழியின் நோட்டுபுத்தகத்தை, என் அக்காவின் குழந்தை கிழித்து விட்டாள். பயந்தபடியே வகுப்புக்கு எடுத்து சென்றேன். கோபமாக திட்டியவளை சமாதானப்படுத்தி, 'என் நோட்டில், உன் பெயரை எழுதி, ஆசிரியரிடம் கொடுத்து விடு...' என்று கூறினேன்.அதுபோல சமர்ப்பித்தாள். எழுத்துக்களை கவனித்து, 'இது உன் நோட்டா...' என, மிரட்டினார் ஆசிரியர். நடந்ததை மறைக்காமல் கூறிவிட்டாள் தோழி. இருவரையும் தனியாக அழைத்து, 'இனி இதுபோல் செய்யக்கூடாது...' என மென்மையாக அறிவுரைத்தார். அது மனதில் பதிந்தது. இப்போது என் வயது, 72; அந்த ஆசிரியரின் நற்குணத்தையும், அணுகு முறையையும் மறக்க முடியவில்லை. - எ.வேலுசாமி, கோவை.தொடர்புக்கு: 88708 51368