கேள்வியால் வேள்வி!
தேனி மாவட்டம், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, சவரியப்ப உடையார் நினைவு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 8ம் வகுப்பு படித்தேன்.தமிழ் பாட வேளையில் வகுப்பில் கேள்வி பதிலுக்கு பிரத்யேகமாக நேரம் ஒதுக்குவார் தமிழாசிரியர் புலவர் கு.சின்னசாமி. அதற்காக, மாணவ, மாணவியரை இரண்டாக பிரித்திருந்தார். மாணவர் பகுதியில் இருந்து மாணவியரையும், மாணவியர் பகுதியில் இருந்து\ மாணவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். பதில் சொல்லாவிட்டால் தலையில் குட்டு கிடைக்கும்.எத்தனை பேர் பதில் கூறவில்லையோ, அத்தனை புள்ளிகளும் கேட்டவரை சேரும். யாரும் பதில் சொல்லா விட்டால், கேட்டவரே பதில் உரைக்க வேண்டும். அவருக்கும் தெரியா விட்டால், எல்லா புள்ளிகளும் எதிரணிக்கு சென்று விடும். பாடங்களின் இறுதியில், தரப்பட்டிருக்கும் கேள்விகளை நான் கேட்பதில்லை. பாடம் முழுதையும் கவனித்து சொந்தமாக தயார் செய்து கேட்பேன். யாராலும் பதில் சொல்ல முடியாது. நானே பதில் கூறி, தண்டனையாக எல்லார் தலையிலும் கொட்டுவேன்; வலி பொறுக்க முடியாமல் துடிப்பர்.இன்றும் பள்ளியில் உடன் படித்தவர்களை சந்திக்க நேர்ந்தால், தலையை தடவிக்காட்டி, பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்வர். தற்போது, என் வயது, 67; வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்; என் திறமையை வளர்க்க உதவிய அந்த ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- ரா.ரெங்கசாமி, தேனி.தொடர்புக்கு: 90925 75184