அதிமேதாவி அங்குராசு!
சுவையா... ஆரோக்கியமா!சமோசா, பப்ஸ், கேக், பரோட்டா...இவை தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் மைதா மாவு. கோதுமையில் நார்ச்சத்தை அகற்றியே தயாரிக்கப்படுகிறது மைதா. இதை வெண்மை மற்றும் மிருதுவாக்க பல ரசாயனப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் மைதாவுக்கு தடை விதித்துள்ளன. உணவில் எந்த அளவு குளுக்கோஸ் உள்ளது; உண்டபின் அதில் எவ்வளவு சக்தியாக மாறும் என்பதை, 'க்ளைசெமிக் இன்டெக்ஸ்' என்ற அளவுகோல்படி கணிக்கின்றனர். இது, மைதாவில் அளவுக்கு மிக அதிகமாக உள்ளதாக அறிந்துள்ளனர். மைதாவில் தயாரிக்கப்படும் உணவில், அதிக அளவில் குளுக்கோஸ் உற்பத்தியாகிறது. அதை சமன்படுத்தும் அளவு, உடலில் இன்சுலின் சுரப்பதில்லை. மைதாவில் தயாரித்த உணவை உண்ணும் போது, இன்சுலினை அதிக அளவு உற்பத்தி செய்ய கணையம் போராடும்; நாளடைவில் கணையம் சோர்ந்து, பழுதாகிவிடும். மைதா உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்பட ஏதுவாகும். மைதாவில், 'அலொக்ஸான்' என்ற ரசாயனம் சேர்க்கின்றனர். இதுதான், மாவை மிகவும் மிருதுவாக்குகிறது; புதிய சுவையையும் தருகிறது. இந்த ரசாயன சேர்க்கையால் செரிமானக்கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படும். மைதாவை வெண்மை நிறமாக்க, 'பென்சாயில் பெராக்ஸைடு' என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது, துணிகளை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்துவதாகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால், மைதா உணவுகளை தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் குறைந்த அளவில் சாப்பிடலாம். நல்ல காற்று! இயற்கையை மாசுப்படுத்துவதில் பாரப்பட்சமே பார்ப்பதில்லை மனிதன். உயிர் வாழ தேவையான காற்றையும் விட்டு வைக்கவில்லை.உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, உலக மக்கள் தொகையில், 92 சதவீதம் பேர் மாசு நிறைந்த காற்றையே சுவாசிக்கின்றனர். பெருநகரங்களில் வசிப்பவர்கள் தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றனர். காற்றில் கலந்திருக்கும் நச்சு, சுவாச அமைப்புக்குள் ஆழமாக பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.காற்று மாசு காரணமாக, ஆண்டு தோறும், 60 லட்சம் பேர் மரணமடைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சில ஆன்டி பயாடிக் மருந்துகள் காற்று மாசு பிரச்னைக்கு தற்காலிக தீர்வை தரும். நுரையீரலை பாதுகாக்க சில மூலிகைகளையும் பயன்படுத்தலாம். அவை குறித்து பார்ப்போம்...அதிமதுரம்: சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும். சளி, கபத்தை போக்க துணை புரியும். தொண்டைப்புண், இருமல் மற்றும் சுவாச பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும். இதை பயன்படுத்தி தேனீர் தயாரித்து பருகலாம்.திப்பிலி: இது சுவாச பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படக்கூடியது. சளி தொந்தரவை கட்டுப்படுத்தக்கூடியது. அரை டம்ளர் சூடான பாலுடன் சிறிதளவு திப்பிலி சேர்த்து பருகி வந்தால் ஜலதோஷம், இருமல், மூச்சுக்குழாய் அழற்சியிலிருந்து நிவாரணம் பெறலாம்.இஞ்சி: சுவாச அமைப்பை பாதுகாக்கக்கூடிய சிறந்த இயற்கை நிவாரணி. நாள்பட்ட வலியைக் குறைக்கவும் உதவும். கொழுப்பைக் கரைக்கும் தன்மையையும் கொண்டது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.