உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

தமிழால் தனித்துவம்!

தனித்தன்மையை விரும்பாதவர் உலகில் இல்லை. அதற்கு ஆர்வமும், விடாமுயற்சியும், பயிற்சியும் அவசியம். அன்றாட செயல்களை ஒழுங்கு படுத்தினாலே தனி முத்திரை பதிக்கலாம் என்பதை நிரூபித்து வாழ்கிறார், சி.பரசுராமன். வட மாநிலத்தவர் போல் மிடுக்கான உடை அணிவார். தமிழை பிழையின்றி பேசுவதை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கீழாமூர் கிராமத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர், 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தந்தை மறைவால் கல்வியை தொடர இயலவில்லை. சிறு வயதிலே கிடைத்த பணிகள் செய்து குடும்பத்துக்கு உதவியதுடன், நாளிதழ் மற்றும் நுால் வாசிக்கும் பழக்கத்தை பற்றிக்கொண்டார். இது தனித்துவமான வாழ்க்கை அமைக்க உதவியது. தமிழ் மொழியால் உயர்ந்தது பற்றி பரசுராமன் கூறியது:இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் செங்கல்வராய சாஸ்திரி, கன்னையன் துாண்டுதலால் மொழி மீது ஆர்வம் ஏற்பட்டது. என் உச்சரிப்பை பாராட்டும் விதமாக, தமிழாசிரியர் அம்பலவாணன் எனக்கும் சேர்த்து மதிய உணவு எடுத்து வருவார். அது, மொழியை பிழையின்றி பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தை மேலும் வளர்த்தது. குடும்ப வறுமையால் கல்வியை தொடர முடியவில்லை. பின், நாளிதழ் மற்றும் நுால்கள் படிப்பதை பழக்கமாக்கி கொண்டேன். அவற்றில் காணும் சொற்களை இனிமை பொங்க பேசி பழகினேன். புரியாத சொற்களுக்கு அகராதியில் பொருள் தேடுவேன். அறிவியல் சார்ந்த புதிய சொற்களை திரும்பத் திரும்ப எழுதி மனதில் பதித்துக் கொள்வேன். தேவைப்படும் போது, பேச்சு வழக்கில் அவற்றை பயன்படுத்துகிறேன். இந்த வழக்கத்தை எப்போதும் தவறாமல் கடைபிடிக்கிறேன்.நெல்லை, குமரி, மதுரை, கொங்கு, தர்மபுரி என, வட்டார ரீதியாக தமிழ் உச்சரிப்பில் புதிய அழகு தென்படும். புதிய சொற்கள் உலா வரும். அந்தந்த வட்டார மக்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பேன். பிடித்த, நெகிழ்ச்சி தரும் சொற்களை பிடித்துக் கொள்வேன். தாய்மொழியை பிழை, பிசிறு இன்றி பேசி பழகுகிறேன். இதை தனித்துவமான செயலாக எண்ணி பலரும் புகழ்கின்றனர். பெருமைப்படுத்தும் விதமாக என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். தினமும் இது போன்று பல அனுபவங்களை பெறுகிறேன். இவ்வாறு நெகிழும் பரசுராமன், பேச்சில் மட்டுமல்ல, விருந்தோம்பலிலும் தனித்துவம் மிக்கவர். அன்பு ஒழுகும் இவரது உபசரிப்பையும், மொழி உச்சரிப்பையும் அறிந்தவர்கள், தங்கள் குடும்ப விருந்து நிகழ்ச்சிகளில், 'உபசரிப்பாளர்' பணிக்கு அழைத்து செல்வதும் வழக்கமாக உள்ளது. குழந்தைகளே... தனித்துவத்துடன் வெல்வோம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !