டையப்பர்!
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டையப்பர் வாங்குவது எளிது; மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. பயன்படுத்திய பின் துாக்கி எறிந்து விடலாம். எங்கும், எப்போதும் எடுத்துச் செல்ல எளிதானது.இது போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு டையப்பர் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இதை பயன்படுத்தினால், குழந்தை உடலில் அலர்ஜி என்ற ஒவ்வாமை ஏற்படும். டையப்பர் ஓரத்தில் அழுத்தம் ஏற்படுத்தும், 'எலாஸ்டிக்' அமைப்பு உள்ளது. இது நைலான் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. அது குழந்தையின் உடலை தொடர்ந்து அழுத்தும். இதனால், தொடை இடுக்கு, பிறப்புறுப்பு பகுதியில் புண் ஏற்படலாம். இது கொடிய பாதிப்பை ஏற்படுத்தும். மலம் மற்றும் சிறுநீர் கழித்த பின், டையப்பரை கவனிக்காமல் விட்டால் உடலில் நோய்தொற்றை ஏற்படுத்தி விடும். பயன்படுத்திய டையப்பரை முறையாக அகற்றாவிட்டால், சுற்று சூழலுக்கு கேடு ஏற்படும்.
பொலிவு பெற...
வீட்டின் அறைகள் சுத்தமாகவும், புத்தம் புதிதாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். வீட்டை சுத்தமாக பராமரிப்பது குறித்து பார்ப்போம்...வீட்டின் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும். இதனால், காற்றும், சூரிய ஒளியும் புகுந்து அறையை புத்துணர்ச்சி பெற வைக்கும். பரபரப்பான நெடுஞ்சாலை அல்லது தொழிற்சாலை பகுதிகளில் வசிப்போரால் இதை கடைபிடிக்க முடியாது. காலை எழுந்தவுடன், வீட்டின் ஜன்னல்களைத் திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்; புதிய உற்சாகம் கிடைக்கும்.படுக்கையறையில் உள்ள போர்வையை, உரிய கால இடைவெளியில் துவைக்கவில்லை என்றால் விரும்பத்தகாத வாசனை வரும். ஆரோக்கிய பிரச்னை ஏற்படும். எனவே, ஒவ்வொரு வாரமும் போர்வையை துவைத்து பயன்படுத்தவும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைகளை மாற்றவும். இதனால், அறை புதுப் பொலிவுடன் இருக்கும்.
தாம்பூலம்!
வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது, உடல் சுறுசுறுப்படையும். நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும். துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது பாக்கு. இது பித்தத்தை தணிக்க வல்லது. சுண்ணாம்பில், காரச் சுவை உள்ளது. அது வாதத்தை போக்கவல்லது. வெற்றிலை, கபத்தை நீக்க வல்லது. இந்த கலவை உடலில் சேரும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.காலையில், சிற்றுண்டிக்கு பின் போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகம் இருக்க வேண்டும். மதியம் வெப்பம் அதிகரிக்கும் போது, உடலில் சூடு ஏறாமல் பாதுகாக்கும். மதிய உணவிற்கு பின் போடும் தாம்பூலத்தில் சுண்ணாம்பு அதிகம் சேர்க்க வேண்டும். அது, உணவில் உள்ள வாதம் அதாவது, மிஞ்சிய வாயுவைக் கட்டுப்படுத்தும். இரவில், வெற்றிலையை அதிகம் எடுத்துக் கொண்டால், நெஞ்சில் கபம் தங்காது. இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதை மீறினால் உடலில் சிக்கல்கள் வரும். - என்றென்றும் அன்புடன், அங்குராசு.