பக்கிங்காமில் பரிசல்!
அரசு பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கிறான் தமிழன். வகுப்பு முடிந்து உற்சாகத்துடன் வீடு திரும்பினான்.''என்னடா... இன்னைக்கு இவ்ளோ மகிழ்ச்சி....'' என்றார் அப்பா.''பள்ளியில், ஒரு போட்டி அறிவிச்சாங்க. அதுவும், எனக்குப் பிடிச்ச போட்டிப்பா... அதுதான், ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்...'' ''என்ன போட்டி...'' ''முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பேர்ல, இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் போட்டிப்பா... மாநகரை, எப்படி எல்லாம் சிறப்பாக மாற்றலாம்ன்னு கேட்டிருக்காங்க...'' என்றான் தமிழன்.நகரை சிறப்பாக மாற்றியமைப்பதில் அவனுக்கு அளவு கடந்த விருப்பம்! நகர மக்களின் நலனை பாதுகாக்க, ஏதாவது செய்ய நினைத்தவனுக்கு, இந்த வாய்ப்பு, வரப்பிரசாதமாக இருந்தது.கடுமையாக முயன்று போட்டியில் வெற்றி பெற துடித்தான் தமிழன்.வழக்கமாக, பக்கிங்காம் கால்வாய் ஓரமாக உள்ள வழியில் பள்ளிக்குச் செல்வான். போகும் போதெல்லாம், அவன் மனம் ரொம்ப வலிக்கும். பல ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த கால்வாய் மிகவும் துாய்மையாக காணப்பட்டது. அதில், தேசியகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் படகு பயணம் செய்ததாக புத்தகத்தில் படித்திருந்தான். பக்கிங்காம் கால்வாயை சுத்தமாக்கி பழைய நிலைக்கு மாற்ற எண்ணி வந்தான்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1806ல் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. பல கட்டடங்களில், பல ஆறு, ஏரி வழியாக, ஆந்திர மாநிலம், விஜயவாடாவையும், விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், 240 கி.மீ., நீளத்தில் உருவாகியிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னை துறைமுகத்திற்குச் சரக்கு எடுத்து செல்ல, இது பெரிதும் உபயோகப்பட்டது.தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது, வடிகாலாக இருந்து, பல ஆயிரம் பேரை காப்பாற்றியதை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விமானத்தில் பறக்கும் போது, பருந்து பார்வையில் இந்த கால்வாயைப் பார்க்கலாம். இதுவும், மற்றொரு சிறப்பு. இப்போது கவனிப்பார் இன்றி, அழிய துவங்கி விட்டது. சென்னை நகருக்குள் கடுமையாக பாதிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து லண்டன் நகரில், பக்கிங்காம் மாதிரி, செழிப்பாக இருந்த கால்வாய், இப்போது சாக்கடையாக மாறியுள்ளது. 'எப்படியாவது, நவீனமாக மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, தீவிரம் காட்ட ஆரம்பித்தான் தமிழன். நண்பர்களை சேர்த்து, ஒரு பெரிய திட்டம் தீட்டினான்.பெருநகர மாநகராட்சி ஊழியர், பொதுமக்கள் உதவியால், கால்வாயில் கலக்கிற சாக்கடை, கழிவு நீரை எல்லாம், பாதாளச் சாக்கடையில் விட ஏற்பாடு செய்வது திட்டத்தின் ஒரு பகுதி. மீன்வளத்துறை உதவியோடு, ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளை கால்வாயில் வளர்ப்பது, திட்டத்தின் மறுபகுதி. பல வகைப் புழுக்களையும், மாசுகளையும் ஓரளவிற்கு, அந்த மீன்கள் தின்று துாய்மைப்படுத்தும் என நம்பினான்.இது, கொஞ்சம் கஷ்டமான வேலைதான். இருந்தாலும், அரையாண்டு பள்ளி விடுமுறையில் திட்டத்தை தயாரித்தான். அதற்கு, முன்னோட்டமாக, ஒரு பரிசல் வாங்கினான் தமிழன்.விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியது; நண்பர்களுடன், கால்வாய் வழியாக, பரிசலில், பள்ளிக்குச் செல்ல துவங்கினர்; ஒரு வாரம் இப்படியே பயணித்தனர்.எப்பவுமே, தாமதமாக வரும் மாணவர்கள், ஒரு வாரமாக சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது கண்டு ஆச்சரியப்பட்டார், தலைமை ஆசிரியர்.முதல் பாடவேளை துவங்கியது. பாடமெடுக்க வந்த தலைமை ஆசிரியர், ''அரையாண்டு விடுமுறையை நன்றாக கொண்டாடினீரா...'' என்று கேட்டார்.'ஆமாம் சார்... மிக சிறப்பாக கொண்டாடினோம்...'மாணவர்கள் கலகலத்தனர்.''தமிழா... இங்கே வா...''''சொல்லுங்க சார்...''தலைமையாசிரியர் அருகில் வந்தான்.''முன்பெல்லாம் தாமதமாக தானே பள்ளிக்கு வருவீங்க; இப்ப எப்படி, எல்லாருக்கும் முன்னாடியே வந்து நிக்குறீங்க... முன்பொருநாள் கண்டித்தது வேலை செய்யுதா...''''இல்ல சார்... இப்போதெல்லாம், பேருந்தில் வர்றதில்லை; கால்வாயில் பரிசல் மூலமாக வர்றோம்...''தலைமை ஆசிரியர், திகைத்துப் போனார்.''என்ன... துர்நாற்றம் வீசும் கூவத்துலயா வர்றீங்க...''''அது கூவம் இல்ல சார்... பக்கிங்காம் கால்வாய்...'' என்று திருத்தினான். அதை துாய்மை செய்ய தயாரித்துள்ள திட்டத்தை எடுத்துரைத்தான். திட்ட வரைவை போட்டிக்கு அனுப்ப உள்ளதாக கூறினான்.மிகவும் பாராட்டினார் தலைமையாசிரியர். வகுப்பு நண்பர்களும், பலத்த கரவொளியால், பாராட்டைத் தெரிவித்தனர்.திட்டத்தை போட்டிக்கு சமர்ப்பித்தான்.எதிர்பார்த்தபடி, 'இளம் விஞ்ஞானி' பட்டம் தமிழனுக்கு வழங்கப்பட்டது.செல்லங்களே... எதையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, புதுமை புகுத்த முயற்சிக்க வேண்டும்.- உமையவன்