நிதானமும் கனிவும்!
திருப்பூர், நஞ்சப்ப உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 9ம் வகுப்பு படித்தேன். ஒருநாள் மாலை பள்ளி மைதானத்தில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. விளையாடி முடித்து வகுப்புக்கு வந்தோம். வகுப்பறை கதவை திறக்க முடியவில்லை. மிகவும் சிரமத்துடன் முயற்சி செய்தோம்.உடனிருந்த நண்பன் அதிவேகமாக செயல்பட்டதால் கையில் கண்ணாடி கீறி, பெரிய அளவில் ஏற்பட்ட காயத்தில் ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு விரைந்து வந்தார், தலைமை ஆசிரியர் ஆர்.ஜி.சுப்ரமணியம். விபரம் அறிந்ததும் கைகுட்டையால், காயம் பட்டிருந்த பகுதியில் கட்டுப்போட்டு தேற்றினார். நிதானமாக செயல்பட்டு முதல் உதவி வழங்கினார். உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எப்போதும் கண்டிப்புடன் செயல்பட்டு வந்தவரிடம், அன்று கனிவை கண்டோம். எனக்கு, 68 வயதாகிறது. சுயதொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன். ஆபத்து நேரத்தில் நிதானமாக செயல்பட்டு, கனிவை காட்ட வேண்டும் என்ற பழக்கத்தை அந்த தலைமை ஆசிரியரின் நடத்தையில் இருந்து கற்றுக் கொண்டேன்.- பி.ராமசாமி, திருப்பூர்.தொடர்புக்கு: 99948 13620