உள்ளூர் செய்திகள்

சுத்தம் செய்யும் தக்காளி!

தக்காளியில் தயாரிக்கப்படும் சாஸ், சமையலில் அதிகம் பயன்படுகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை விரும்புகின்றனர். இது, உணவின் சுவையை அதிகரிக்கும். அதே நேரம் பொருட்களை சுத்தம் செய்யவும் உதவும். தக்காளி சாஸ் பயன்படுத்தி, பழைய பொருட்களை புதிது போல் ஜொலிக்க வைக்க முடியும். அது பற்றி பார்ப்போம்...வீடுகளில் பயன்படுத்தும் காப்பர் பொருட்களை சுத்தம் செய்வது கடினம். அதை தக்காளி சாஸ் உதவியால், எளிதில் சுத்தம் செய்யலாம். அழுக்கு அதிகமாக இருக்கும் காப்பர் பொருளில், தக்காளி சாஸ் தடவி, ஊற வைக்கவும். அதை, எலுமிச்சை சாறு ஊற்றிய வெதுவெதுப்பான நீரால் தேய்த்து கழுவவும். பின், டிஷ்வாஷ் லிக்விட் பயன்படுத்தி கழுவினால், புத்தம் புதிது போல் பளிச்சென்று ஜொலிக்கும்.வீட்டு குழாய்களில் துருவை நீக்க, தக்காளி சாஸ் உதவும். துருப்பிடித்த குழாய் மீது தக்காளி சாஸ் தடவி, 1 மணி நேரம் ஊறவிடவும். பின், நீரில் எலுமிச்சை சாறு, வினிகர், பேக்கிங் சோடா கலந்து தேய்த்து கழுவவும். குழாய் புதிது போல் காட்சி தரும்.சமையலுக்கு பயன்படுத்தும் இரும்பு பாத்திரத்தின் அடியில் துருப்பிடித்த புள்ளிகள் உருவாகும். இதை போக்க, பாத்திரத்தை லேசாக சூடாக்கி, தக்காளி சாஸ் தடவி, ஊற வைக்கவும். பின் எலுமிச்சை சாறு, உப்பு கலந்த நீரில் தேய்த்து கழுவவும்.பொலிவிழந்த வெள்ளி நகைகள் ஜொலிக்க தக்காளி சாஸ் உதவும். வெள்ளி நகையில் தக்காளி சாஸ் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, தேய்த்துக் கழுவ வேண்டும்.அழுக்கு நிறைந்த பித்தளை பொருட்களில் தக்காளி சாஸ் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, ஸ்க்ரப்பரை உப்பில் நனைத்து தேய்க்கவும். பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். சாப்பாட்டில் மட்டுமில்ல, பொருட்களை சுத்தம் செய்யவும் தக்காளி சாஸ் உதவுகிறது.- பாலாஜி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !