கிரிக்கெட் பாடம்!
ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குடி, கண்ணாடிவாப்பா சர்வதேசப் பள்ளியில், 2019ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...தமிழாசிரியர் பாண்டித்துரையை, 'பாட்டு வாத்தியார்...' என செல்லமாக அழைப்போம். அந்த அளவு அருமையாக பாடி, உற்சாகத்துடன் பாடம் நடத்துவார். கடினமான இலக்கண பாடத்தை, திரையிசை மெட்டில் பாடி, ஆர்வமுடன் கவனிக்க வைப்பார்.அன்று வகுப்பில் கிரிக்கெட் வீரர் போல உடையணிந்திருந்த என்னை பந்து வீச வைத்து, பேட்டிங் செய்தபடியே, இலக்கண பாடங்களை பாட்டு வடிவில் கற்றுத் தந்தார்.கிரிக்கெட் விளையாட்டில் பயன்படும், அகலப்பந்து, தலைக்கவசம் போன்ற சொற்களை பயன்படுத்தி, வல்லினம் மிகும் இடங்களை சுட்டிக்காட்டினார். அதை பாடலாக கற்றுத்தந்து பரவசப்படுத்தினார்.அத்துடன், 'பாடங்களை மட்டும் படித்தால் போதாது, பாட்டு, பேச்சு, நடனம் என, கலைகளையும் கற்க வேண்டும்...' என அறிவுரை கூறினார். படிப்பை தாண்டி ஓவியத்தில் தனிக்கவனம் செலுத்திய நான், அவர் தந்த உற்சாகத்தால், இலக்கிய போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றேன்; பாராட்டு மழையில் நனைந்தேன்.என் வயது, 18; கல்லுாரியில் பொறியியல் பாட பிரிவில் சேர உள்ளேன். தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் போதெல்லாம், இலக்கணத்தை கற்பிக்க அந்த ஆசிரியர் இனிமையாக பாடியது மனதில் நிழலாடுகிறது. அவரை போற்றுகிறேன்!- முகமது துபைல், ராமநாதபுரம்.தொடர்புக்கு: 97508 96776