அப்பாவின் முதல் சம்பளம்!
''தாத்தா எங்க போயி இருக்காரு செல்லம்...''மகளிடம் கேட்டான் செல்வம். வழக்கமாக, இரவு 8:00 மணிக்கு தான் வீடு திரும்புவான். அன்று, சற்று தலைவலியால் அனுமதி பெற்று, அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து விட்டான்.அந்த கேள்விக்கு, ''தினமும் நீங்க அலுவலகத்துக்கு போனதும், உங்க அப்பா வெளியே போயிடுவாரு; நீங்க திரும்பும் முன், வீட்டுக்குள் இருப்பாரு... ஒரு மாத காலமா இப்படி தான் நடக்குது; எங்க போறீங்கன்னு கேட்கறதில்லை; அவரும் சொன்னதில்லை...'' என குற்றப் பத்திரிகை வாசித்தாள், மனைவி பாரதி.கோபம் பொங்க, ''வயசான காலத்தில் வீட்டுல இருக்குறதுக்கு என்ன... தெருவுல டிராபிக் நெரிசல் அதிகம். எங்காவது விழுந்து தொலைச்சா நமக்கு தானே சிரமம்; வரட்டும் பேசிக்குறேன்...'' என்றபடி, 'டிவி' செய்தியில் மூழ்கினான் செல்வம்.கடிகாரம் இரவு, 7:15 மணியை காட்டியது. வீட்டிற்குள் நுழையும் போதே, முன்வாசலில் மகன் காலணியை கண்டு திகைத்த பெரியவர், ''என்னப்பா சீக்கிரம் வந்துட்ட... உடம்பு சரியில்லையா...'' என, கரிசனமாய் விசாரித்தார்.செல்வத்தின் மனதில் அது கடும் கோபத்தை கிளறியது. ''அது இருக்கட்டும்... எங்க போயிட்டு வர்றீங்க... தெருவில் நடக்க முடியாதபடி, வாகனங்கள் பெருகி போச்சு... தப்பி தவறி இடிச்சா என்ன செய்வீங்க... எனக்கு தான் சிரமம். வீட்டுக்கும், மருத்துவமனைக்கும் அலைய வேண்டியிருக்கும்; கொஞ்சம் கூட சுய புத்தி இல்லையா...'' தந்தையிடம், பொரிந்து தள்ளினான் செல்வம்.பொறுமையுடன் கிணற்றடியில், முகம், கை, கால் அலம்பி திரும்பினார் பெரியவர். துண்டால் முகத்தை துடைத்தபடி, ''என் மீதுள்ள அக்கறையில தானே கோவிச்சிக்கிற; தனியார் நிறுவனத்தில் குறைஞ்ச சம்பளத்துக்கு நீண்ட நேரம் வேலை பார்க்குற... பிள்ளைகளை படிக்க வைக்க பணம் வேணும்... இதிலே நான் வேற உனக்கு சுமை...''வீட்டில் சும்மா இருக்கிறது பிடிக்கல; முடிஞ்ச அளவு, குடும்பத்துக்கு உதவி செய்ய நினைச்சேன்... துணிக்கடையில் கணக்கு எழுதும் வேலை ஒண்ணு கிடைச்சது; இன்று தான், முதல் சம்பளம்...''கையிலிருந்த சம்பள கவரை மகனிடம் தந்தார் பெரியவர். அவரது பொறுப்பு கண்டு செல்வமும், பாரதியும் நெகிழ்ந்து நின்றனர்.குழந்தைகளே...பெரியோரின் பொறுப்பு மிக்க செயல்களை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்வோம்!ரா.சாந்தகுமார்