உள்ளூர் செய்திகள்

குன்றாத மதிப்பு!

கடலுார் மாவட்டம், சுப்ரமணியபுரம், ஸ்ரீராமலிங்கர் உயர்நிலைப் பள்ளியில், 2007ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் மதிய வகுப்பில், பாடங்களை முடித்து திடீரென, 1,000 ரூபாய் நோட்டைக் காட்டி, 'யாருக்கெல்லாம் இது பிடிக்கும்...' என கேட்டார் அறிவியல் ஆசிரியை எழிலரசி.வகுப்பிலிருந்த, 52 மாணவர்களும், 'பிடிக்கும்...' என, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கையை துாக்கினோம். புன்னகை சிந்தியபடி, 'உங்களில் ஒருவருக்கு இதைத் தரப்போகிறேன்; ஆனால் அதற்கு முன்...' என நிறுத்தி, அந்த ரூபாய் நோட்டை கசக்கியபடி, 'இப்போது உங்களுக்கு பிடிக்கிறதா...' என்றார். மீண்டும், ஒட்டு மொத்தமாக விருப்பம் தெரிவித்தோம். அந்த நோட்டை அழுக்காக்கியபடி, 'இன்னும் இதை விரும்புகிறீர்களா...' என்றார். மறுபடியும் ஆவலுடன் கை துாக்கினோம். சிரித்தபடி, 'பலமுறை கசக்கியும், அழுக்காக்கியும் ரூபாய் நோட்டு மதிப்பை இழக்கவில்லை; ஆனால், மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்வியை சந்திக்கும் போதும், மனமுடைந்து போகிறோம்...'ரூபாய் நோட்டுக்கு சற்றும் குறைந்ததல்ல மனித மாண்பு; அது என்றும் குறைவதில்லை; உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உள்ளது... அது குன்றாமல் உயர்த்த வேண்டியது உங்கள் பொறுப்பு...' என நிறைவு செய்தார்.அந்த அறிவுரையை மனதில் கொண்டு வாழ்க்கையை அமைத்துள்ளேன். என் வயது, 24; பள்ளி வளாகத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் அந்த ஆசிரியையின் முகம் நினைவில் நிறைகிறது.- எஸ்.சுதனன், கடலுார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !