மரணத்தையும் வெல்லலாம்!
தொண்டை நாட்டிலே உலுத்தன் என்ற ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. எனினும் அவன் எந்தவித இன்பங்களையும் நுகராமல் எப்போதும் துன்பத்திலேயே உழன்று வந்தான்.ஒருநாள் காலையில் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவருடைய புகழும் பெருமையும் நாடெங்கும் பரவியிருந்தது. ஒருநாள் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, விருந்து படைத்து தனக்குள்ள துயரத்தை எல்லாம் அவரிடம் கூறி, ஏதாவது நன்மை பெற உலுத்தன் முடிவு செய்தான். அவன் பிறந்திலிருந்து இன்றுவரை எந்தத் தர்மமும் செய்ததில்லை; இதுதான் முதல் தர்மம்.பெரும் புகழ்பெற்ற அத்துறவியை தன் இல்லத்திற்கு அழைத்து வருவதைப் பற்றி உலுத்தன் தன் மனைவியிடம் சொன்னான். அவளும் அதற்குத் தடை எதுவும் சொல்லவில்லை. எனவே, மிகவும் பணிந்து அத்துறவியை பலவாறு வேண்டி தன் வீட்டிற்கு அழைத்த வந்தான்.உலுத்தனின் இந்தச் செய்கையைக் கண்டு ஊரில் உள்ள எல்லாரும் வியப்படைந்தனர். இதனைக் காரணமாகக்கொண்டு அவனை நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் அந்தத் துறவியும் விருந்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டார்.உலுத்தனுடைய வீட்டில் பெரிய விருந்து ஒன்று நடைபெற்றது. விருந்திற்குப் பின் வந்திருந்த கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து துறவி தனியாக இருக்கும் சமயத்தில் உலுத்தன் அவரை அணுகி, ''சுவாமி! தாங்கள் எனக்கு ஆசி கூறி திருவருள் புரியவேண்டும்,'' என்று கேட்டுக்கொண்டான்.''உனக்கு ஏதாவது குறைகள் உண்டா?'' என்று துறவி கேட்டார்.''சுவாமி! தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசி மற்றும் ஆதரவினால் எனக்கு நிலபுலன்களில் ஒன்றும் குறையவில்லை. ஆனால், அவை ஒவ்வொரு சின்னச் சின்னச் கிராமங்களில் தனித்தனியாக சிதறிக்கிடப்பதால், அவற்றில் பயிர் செய்ய தகுந்த நம்பிக்கை உள்ள வேலை ஆட்களைப் போட்டும், அதனைச் சரி வர நிர்வகிக்க முடியாமல் தவிக்கிறேன். வேலை செய்பவர்கள் தாம் வாங்கும் கூலிக்குத் தக்கபடி வேலை செய்வதில்லை. 'உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும்!' என்று சொல்வார்களே தவிர, உழவு மற்றும் நடவை செய்ய ஆட்களை விட்டால் அவர்கள் எப்படியோ நேரத்தைப் போக்கி, வேலை செய்வதில் அக்கறை காட்டாமல் கூலியை வாங்குவதில்தான் குறியாக இருக்கின்றனர். மேலும், அவர்களுக்குக் கூலி கொடுக்கவும் எனக்கு மனம் இடம் தருவதில்லை. இந்நிலையில் இருக்கும் எனக்கு தாங்கள் ஒரு நல்வழி காட்டும்படி வேண்டிக் கொள்கிறேன்,'' என்றான் உலுத்தன்.அவனுடைய கருமித்தனத்தைப் பார்த்து, துறவி ஆச்சரியப்பட்டு போனார். இவனுக்கு ஏதாவது ஒருவழியில் நன்மை செய்யவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு, ''அப்பா! நான் ஒருவழி சொல்லுகிறேன். கேள். எனக்கு ஒரு மாந்திரீக முறை தெரியும். நான் அதை உனக்குக் கற்பிக்கிறேன். நீ அதை மூன்று மாதங்களுக்கு நான் சொன்னபடி பூஜை செய்து செயலில் காட்டுவாயானால் மூன்றாம் மாத இறுதியில், உன் முன்னே ஒரு பிரம்மராட்சதன் தோன்றுவான். நீ காலால் இடுகிற வேலையை, அவன் தலையால் செய்து முடிப்பான். ஒரு காசுகூட உன்னிடம் அவன் கூலி கேட்கமாட்டான். அவனைப் பயன்படுத்திக்கொண்டால் உன் பிரச்னைகள் தீர்ந்து நீ சுகம் பெறலாம்'' என்று சொன்னார்.துறவி கூறியதைக் கேட்டு உலுத்தன் களிப் படைந்தான். அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ''இக்கணமே எனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்யுங்கள் சுவாமி!'' என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். துறவியும் உடனே அவனைக் கிழக்கு முகமாக அமரச்செய்து அந்த மந்திரத்தைச் சரிவர போதித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.உலுத்தன் தனக்குக் கிடைத்த அப்பேரதிர்ஷ்டத்தை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தான். எந்தவிதக் குறையுமின்றி, அந்த மந்திரத்தைப் பூஜித்து மூன்று மாதங்கள் முறைப்படி ஓதிவந்தான். உருவேற்றி முடிந்தவுடன், ஒரேயடியாக மண்ணுக்கும் விண்ணுக்குமாக ஒரு பிரம்மராட்சதன் தோன்றினான்.அந்த பெரிய ராட்சதன், ''எஜமானரே! என்னால் உமக்கு ஆக வேண்டியது என்ன? என்னைக் குறித்து ஏன் தாங்கள் தவம் இருந்நீர்கள்?'' என்று இடிமுழக்கம்போல உரத்த சப்தத்தில் கேட்டான்.அவன் உருவத்தையும் தொனியையும் கேட்ட உலுத்தன், முதலில் நடு நடுங்கிப் போனான்.பின்னர், மந்திரத்தால் வந்த அடிமைதானே இவன் என்று தன் அச்சத்தைப் போக்கிக் கொண்டான். ''இச்சமயம் முதல் நீ எனக்கு அடிமையாக இருந்து நான் ஏவும் வேலைகளை என் கட்டளைப்படிச் செய்து முடிக்கவேண்டும். இதற்காகவே நான் உன்னைக் குறித்துத் தவம் இருந்தேன்,'' என்றான் உலுத்தன்.பிரம்மராட்சதனை பார்த்த உலுத்தன், ''முதலில் நீ உன் உருவத்தை சிறிதாக்கிக் கொள்,'' என்றான்.உலுத்தனின் கட்டளைக்கு இணங்கி, பிரம்மராட்சதன் உருவத்தை சிறியதாக அடக்கி ஒடுக்கி தன் குரலையும் மட்டுப்படுத்திக் கொண்டான். காரணம், மந்திரத்தின் வீரிய சக்தி அத்தகையது. இவ்வாறு உச்சாடம் செய்யப் பெற்ற மந்திரத்திற்கு உட்பட்டுவிட்டால் தன்னைக் குறித்து தவம் செய்த எஜமானர்களுக்கு அடங்கி நடப்பதுதான் பிரம்மராட்சதரின் கடமை.சிறிய குறுநிலையில் குள்ளன்போல நின்ற பிரம்மராட்சதன், உலுத்தனை வணங்கி, ''எஜமானரே! தாங்கள் இட்ட வேலை எதுவாயினும் எத்தகையாதாக இருந்தாலும், அடியேன் இதோ செய்யச் சித்தமாகிவிட்டேன்; ஆனால், ஒரு நிபந்தனை; நீங்கள் எனக்கு ஓய்வு ஒழிச்சலின்றி சதாகாலமும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் நான் தங்கள் தலையை என் கையால் ஓங்கி அறைந்து கொன்றுவிடுவேன். ஜாக்கிரதை! எஜமானரே!'' என்றான்.உலுத்தன் புன்முறுவல் பூத்தான். 'நமக்கோ லட்சக்கணக்கான காலி நிலங்கள் இருக்கின்றன. இந்தக் காணிகளோ ஒரே இடத்தில் ஒரே ஊரில் இல்லை. மூலைக்கு ஒன்றாக எங்கெங்கோ சிதறிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் கவனிக்க எத்தனை ஆயிரம் கூலி ஆட்களை வைத்தாலும் நமது விருப்பப்படி ஒரு கால அளவில் நடைபெறாது! இவ்வளவு தொழில்கள் நம்மிடம் இருக்கும்போது, பிரம்மராட்சதனுக்கு வேலை கொடுப்பதா பெரிய காரியம்! இவனுடைய பேதமையே பேதமை! ' என்று நினைத்தான்.உலுத்தன் தன்னுடைய நிலபுன்களை பிரம்மராட்சதனுக்குக் காட்ட எண்ணினான். அருகிலிருந்த இரண்டு ஏரிகளுக்கு அவனை அழைத்துச் சென்று, ''பார்த்தாயா இந்த ஏரிகளை, தூர்வாரிச் சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகின்றன. கரைகள் பல இடங்களில் உடைந்து இருக்கின்றன. அதற்கும் மண் வெட்டிப் போட வேண்டும். பயிர்களுக்குத் தண்ணீர்தான் முக்கியம். முதலில் ஏரிக்கரைகளை நன்கு சீர்செய்துவிட்டு, இரண்டு பனைமர உயரத்திற்கு ஆழமாக வெட்டி கரைகளை ஒழுங்குப்படுத்திவிட்டு என்னிடம் வா!'' என்று கூறிவிட்டு உலுத்தன் தன் வீட்டை அடைந்தான். இந்த வேலையைச் செய்து முடிக்க ராட்சதனுக்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பது அவன் எண்ணம். மேலும் 'ஒவ்வொரு ஏரியும் சுமார் பத்து மைல் நீளம் இருக்கிறதே' என்ற நினைப்பு.இரட்சதனுக்கு வேலை கொடுத்துவிட்டு, அவன் தன் வீட்டை அடைந்ததும், 'நிலபுலன்களில் வேலை செய்ய சரியான ஆள் கிடைத்துவிட்டதே' என்று உலுத்தினின் மனைவி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அதனால், சிறப்பாகவும் சமையல் செய்திருந்தாள். கணவனும் மனைவியும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு தம் வீட்டுகூடத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்தார். அதேசமயம் பிரம்மராட்சதன் அங்கு வந்தான். ''தாங்கள் இட்ட வேலைகளைச் செய்து முடித்துவிட்டேன். அதில் ஏதாவது குற்றம் குறையிருந்தாலும் அதனைச் சீர்செய்துவிடுகிறேன். அருள்கூர்ந்து ஏரிகளை வந்து பார்க்கவேண்டும்,'' என்று கூறினான்.உலுத்தனுக்கு உதறல் எடுத்தது. ''நாம் இவனிடம் இருந்து உயிர் தப்புவது கடினம்போல் தெரிகிறதே? இவனுக்கு வேலை கொடுக்காவிட்டால் நம் தலையில் அறைந்து கொன்றுவிடுவதாக ராட்சதன் சொன்னதை நினைத்தால் குலை நடுங்குகிறதே,'' என்று எண்ணி வெடவெடத்தான். உள்ளத்தில் பயம் பிடித்து ஆட்ட, ராட்சதனோடு சென்று ஏரிகளைப் பார்த்தான். அங்கு குற்றம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் நிபுணர்கள் மேற்பார்வையில் செய்து முடிக்கப்பட்ட வேலையைப் போல் அவ்வளவு நேர்த்தியாகவும், பலமாகவும் ஏரிகளின் மராமத்துப் பணிகள் இருந்தன. உலுந்தனுக்கு ஒன்றுமே புரியவில்லை.எதிரில் நின்ற பிரம்மராட்சதனைப் பார்த்து, ''நல்லது! நீ வீட்டுக்கு வா! வேலை தருகிறேன்,'' என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு தன் இல்லத்திற்கு விரைந்தான். பிறகு, அவனை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று தன் மனைவியைப் பார்த்தான். ''உன் தாலி பலம் இன்றுவரை தான் உறுதியாக இருக்கும்போல் தெரிகிறது. மந்திர பலத்தால்,ஒரு பேயைப்பிடித்து அடிமையாக்கினது எனது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிட்டதே? இலட்சம் ஆட்கள் சேர்ந்து இடைவிடாமல் இருபது ஆண்டுகள் அல்லது இருபந்தைந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை இந்தப் பேய் இரண்டே நாழிகைகளில் செய்து முடித்துவிட்டதே! ''நான் எப்படி இவனுக்கு ஓய்வு ஒழிச்சலின்றி வேலை கொடுக்க முடியும்? இப்படி இவன் வேலை செய்வான் என்று எனக்குத் தெரிந்திருந்தால், இவனை அடிமைப்படுத்தும் மந்திரத்தை அந்தத் துறவியிடம் கற்றுக்கொண்டிருக்கவே மாட்டேன். நான் என்ன செய்வேன்?'' என்று சோகம் மேலோங்கிய குரலில் புலம்பயபடியே கண்ணீர் வெள்ளத்தில் நனைந்தான் உலுத்தன்.(-1 தொடரும்)