உள்ளூர் செய்திகள்

மரணம்!

ஓர் ஊரில் மூன்று பேர் இருந்தனர். எங்கே செல்வதானாலும் அவர்கள் சேர்ந்தே சென்றனர். அவர்கள் ஊரில் இருப்பது சில நாட்கள் மட்டுமே. ஊர் சுற்றிக்கொண்டே இருப்பதுதான் அவர்களது வேலை. அதனால், அந்த ஊரில் உள்ள மக்கள் அவர்களுக்கு, 'ஊர் சுற்றி உதவாக் கரைகள்' என்று பெயரிட்டு அழைத்தனர். ஆனால், அவர்களோ தங்களைப் 'பயணிகள்' என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு பெருமை பேசிக் கொண்டிருந்தனர்.அந்த மூன்று பயணிகளில்...!முதலாமவன் பெயர் 'கடவுள்!' இரண்டா மவன் பெயர் 'குளிர்!' மூன்றாமவன் பெயர் 'மரணம்.'ஒருநாள்!பயணிகள் மூவரும் நீண்ட பயணத்தை மேற்கொண்டிருந்தனர். காலையில் புறப்பட்ட அவர்கள் பகல் நேரம் முழுவதும் நடந்து கொண்டே இருந்தனர்.அந்தி நேரம் வந்தது. இரவும் வந்துவிட்டது. எங்கே தங்குவது என்ற பிரச்னை வந்து விட்டது.எங்கேயாவது தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று தேடினர். அப்போது ஒரு நாட்டுப்புற மனிதன் தன் குடிசையில் உட்கார்ந் திருப்பதைப் பயணியான கடவுள் கண்டான்.உடனே தனது சக பயணிகளை நோக்கி, ''சற்று தூரத்தில் ஒரு மனிதனும், குடிசையும் உள்ளது. நான் போய் அவனிடம் பேசி, இன்று இரவு அவன் குடிசையில் தங்கிச் செல்ல, அவனிடம் அனுமதி பெற்று வருகிறேன். நீங்கள் இங்கே இருங்கள். நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்,'' என்று குளிர் மற்றும் மரணம் ஆகிய இருவரிடமும் கூறிவிட்டு, குடிசையை நோக்கிப் போனான் கடவுள்.கடவுள் அந்த நாட்டுப்புற மனிதனிடம் சென்றதும், அவனைப் பார்த்த நாட்டுப்புற மனிதன், ''நீ யார்? இந்த இரவு நேரத்தில் எதற்காக இங்கே வந்தாய்?'' என்று கேட்டான்.''என் பெயர் கடவுள். நானும், எனது நண்பர்கள் இரண்டு பேரும் நீண்ட பயணம் மேற்கொண்டு புறப்பட்டு வந்து கொண்டிருக் கிறோம். இரவு நேரம் ஆகிவிட்டது. இன்றிரவு மூவரும் உங்கள் வீட்டில் தங்குவதற்குத் தாங்கள் அனுமதி தருமாறு வேண்டுகிறேன்,'' என்று விவரமாகக் கூறினான் கடவுள்.''ஏனப்பா! உன் பெயரைக் கேட்டாலே எவனும் உனக்கு இருக்க இடமும், குடிக்க நீரும் தரமாட்டானே... இந்த லட்சணத்தில் நண்பர்களை வேறு கூட்டி வந்திருக்கிறாய்! உன்னைப் பற்றி மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதாவது உனக்குத் தெரியுமா?'' என்று கடவுளைப் பார்த்துக் கேட்டான் அந்த நாட்டுப்புற மனிதன்.''ஏன், அப்படிப்பட்ட வெறுப்பு என் மீது? நீயும் கூட வெறுக்கிறாயா?'' என்று கேட்டான் கடவுள்.''வெறுக்காமல் வேறு என்ன செய்வது? உன் செயலை நீயே எண்ணிப் பார்! நீ சிலருக்குக் கோடி கோடி யாகக் கொட்டிக் கொடுக்கிறாய்! சிலரையோ நிரந்தரமாகப் பிச்சை எடுக்கும்படி தெருவில் அலையவிடுகிறாய்! உன்னையே நினைத்துப் பட்டினி கிடந்தவனுக்கு ஒரு கவலம் சோறு கிடைக்க ஒரு நாளாவது ஏற்பாடு செய்தாயா, நீ? இப்படிப்பட்ட பாகுபாடும், பாரபட்சமும் கொண்டவனுக்கு என் குடிசையில் தங்க இடம் கொடுப்பதை எக்காலத்திலும் என் மனது ஏற்காது. எனவே, என் முன் நிற்காதே போய் விடு,'' என்று கூறி நாட்டுப்புற மனிதன் கடவுளை விரட்டிவிட்டான்.நாட்டுப்புற மனிதனுக்கும், தனக்கும் நடந்த உரையாடலைத் தனது நண்பர்களிடம் கூறித் தன் பெயரைத் கெடுத்துக் கொள்ள விரும்பாத கடவுள், எதுவும் பேசாமல் தன் சக பயணிகளை அழைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.சிறிது தூரம் சென்றதும் ஒரு வீடு தென் பட்டது. அதன் முன் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான். குளிர் அம்மனிதனைப் பார்த்துவிட்டது.உடனே, தனது சக பயணிகளிடம், ''நான் போய் அவனிடம் பேசி, தங்குவதற்கு அனுமதி வாங்கி வருகிறேன்! சற்று நேரம் இங்கேயே இருங்கள்!'' என்று சொல்லிவிட்டு அந்த மனிதனை நோக்கிச் சென்றான் குளிர்.அவனிடம் சென்ற குளிர், தனது நீண்ட பயணம் பற்றிக் கூறி, இன்று இரவு தங்கிச் செல்ல அனுமதி கேட்டது.''அது சரி... நீ யார்?'' என்று கேட்டான் அந்த வீட்டு மனிதன்.''என் பெயர் குளிர். என்னோடு இரண்டு பேர் வந்திருக்கின்றனர். மூவரும் தங்கிச் செல்ல அனுமதி தந்தால் நல்லது. உங்களிடம் மிகவும் நன்றியோடு இருப்பேன்,'' என்று நயமாகக் கேட்டது குளிர்.''உன்னுடைய நயமான பேச்சைக் கண்டு ஏமாறுவதற்குச் சிலர் இருக்கலாம். ஆனால், என்னிடம் உன் தந்திரம் பலிக்காது,'' என்று கூறினான் வீட்டு மனிதன்.''ஏன், இப்படிப் பேசுகிறீர்? நான் இதுவரை யாரையும் ஏமாற்றியது கிடையாது. அனைவரையும் ஒரு மனிதனாகவே மதிக் கிறேன். பாகுபாடு என்பது என்னிடம் கிடையாது...!'' என்று குளிர் சமாளிக்கப் பார்த்தது.''பாகுபாட்டைப் பற்றி நீ பேசுகிறாயா? கேவலம், இதை யார்தான் பேசுவது, யார் பேசக்கூடாது என்ற அளவுக்கு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. இதோ சொல்கிறேன் கேள்! உலகில் சில பகுதிகளில் இதமாகவும், ரசிக்கும்படியும் நடந்து கொள்கிறாய். இன்னும் சில பகுதிகளில் இரக்கமற்று, மிக மிகக் கொடுமையாக நடந்துகொண்டு மனிதர்களைக் கொல்கிறாய்! இன்னும் சில பகுதிகளில் சூரியனின் வெப்பத்தால் சுட்டெரிக்கப்பட்டு மனிதர்கள் செத்து மடிகின்றனர். ஆனால், அந்தப் பக்கம் நீ தலைகாட்டுவதே இல்லை. இப்படிப்பட்ட நீ, பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்வதாகச் சொல்கிறாயே... இது அப்பட்டமான ஏமாற்று வித்தை இல்லாமல், வேறென்ன? எனவே, உனக்கு இடமில்லை. உனது கூட்டாளிகளுக்கும் இடம் இல்லை,'' என்று கூறி, வீட்டு மனிதன் குளிரை விரட்டி அடித்தான்.கடவுளை போலவே குளிரும், தனக்கும் வீட்டு மனிதனுக்கும் இடையே நடைபெற்ற வாதங்களைச் சக பயணிகளிடம் கூறவில்லை. தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கூறி விட்டான் என்று மட்டும் குளிர் சொன்னது.வேறு வழியில்லாமல், அவர்கள் மூவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். நகர்ப்புறம் தாண்டியதும் ஓர் ஆறு தென்பட்டது.அங்கே...! விளக்கு வெளிச்சம் தென் பட்டது. அதை நோக்கிச் சென்றனர் பயணிகள் மூவரும்.அங்கே சென்று பார்த்தபோது, கயிற்றுக் கட்டிலில் ஒரு பெரியவர் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.உடனே மரணம், ''நீங்கள் இருவரும் சற்றுத் தள்ளிப் போய் மறைவாக இருங்கள். நான் பெரியவரை எழுப்பி, அவரிடம் பேசி, இன்று இரவு தங்குவதற்கு அவரிடம் அனுமதி பெற்று வருகிறேன்,'' என்று கூறியது.கடவுளும், குளிரும் அப்பால் சென்று விட்டனர்.மரணம், கட்டிலில் படுத்திருந்த பெரியவரின் அருகில் சென்றான்.பெரியவரின் உடம்பை லேசாகத் தட்டிய படி, ''பெரியவரே! கொஞ்சம் எழுந்திருங்கள்,'' என்றான் மரணம்.குரல் கேட்டு எழுந்து பார்த்தார் பெரியவர். அவர் முன் மரணம் நின்றுகொண்டிருந்தான்.''என்னப்பா? யார் நீ? அதுவும் இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை?'' என்று கேட்டார் பெரியவர்.''ஐயா! என் பெயர் மரணம்! நானும், என் சக பயணிகள் இருவரும் நீண்ட பயணம் மேற்கொண்டு வந்துள்ளோம். இரவுநேரமாகி விட்டது. ஆகவே, இன்று இரவு உங்கள் வீட்டில் தங்குவதற்கு தாங்கள் அனுமதி கொடுத்தால், என்றென்றும் விசுவாசமாக நான் தங்களிடம் நடந்துக் கொள்வேன்,'' என்று விஷயத்தைப் போட்டு உடைத்தான் மரணம்.''தம்பி மரணம்! உனக்கு இடம் தருவதற்கு நான் தயார். ஆனால், இந்த உலகத்தில் உள்ள எந்தவொரு ஜீவராசிக்கும் தெரியாத ரகசியம் உன்னிடம் மட்டுமே உள்ளது. அதை மட்டும் நீ எனக்குச் சொல்லிவிட்டால், ஓர் இரவு என்ன? ஓராயிரம், ஈராயிரம், ஏன் எத்தனை ஆயிரம் இரவு வேண்டுமானாலும் நீ தங்கிக் கொள்ளலாம்,'' என்று கூறினார் பெரியவர்.''அப்படியென்ன ரகசியம்?'' என்று கேட்டான் மரணம்.''தம்பி! சொல்கிறேன் கேள்...! எனக்குத் தள்ளாத இந்த வயதில் மரணம் வந்தால் தேவலை என்று நான் தினசரி மரணத்தை வா! வா! என்று வேண்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், எனக்கு மரணம் வரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், பக்கத்துக் கிராமத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை, 'என்னுடன் வா!' என்று அழைத்துக்கொண்டு போய்விட்டது மரணம். அழைப்பவனிடம் போகாமல், உன்னைப் பற்றிச் சிந்திக்காதவனிடம் போகிறாயே! ஏன் இப்படிச் செய்கிறாய்? இதில் ஏதோ ரகசியம் இருப்பதாக எனக்குப் படுகிறது. அதனால்தான் நான் கேட்கிறேன்,'' என்றார் பெரியவர்.''நீங்கள் கேட்பது சரிதான்! விவரமாய்ச் சொல்லுகிறேன். மரணமாகிய எனக்கு ஒரு எஜமானன் இருக்கிறான். அவனை பாமரர்கள், 'விதி' என்று பெயர் சொல்லி அழைப்பர். விவரம் தெரிந்தோர்,'காலன்' என்பர்; இன்னும் சிலர் 'மரண தூதுவன்' என்பர். ஆனால், இத்தனை பெயர்கள் இருந்த போதிலும் எனது எஜமானுக்கு 'எமன்' என்ற பெயரே நிலைத்து விட்டது. அவருடைய நல்ல அம்சம் என்ன வென்றால், எந்த ஒரு ஜீவராசியிடமும் பாகுபாடு காட்டாமல் குறித்த நேரத்தில் குறித்த நபரை அழைத்து வரும்படி என்னிடம் கூறுவார். அவர் சொன்னதை அப்படியே நிறைவேற்றுவதே எனது கடமை,'' என்று கூறினான் மரணம்!''நீ சொல்வது சரிதான்! குறித்த நேரத்தில் என்று கூறினாயே... அந்த நேரத்தை முன் கூட்டியே சொல்லிவிட்டால் என்ன? உனக்குத் தெரியுமல்லவா?'' என்று கேட்டார் பெரியவர்.''பெரியவரே! நீங்கள் கேட்பது சரிதான்! ஆனால், அந்தக் குறிப்பிட்ட தேதி இந்த உலகில் என் எஜமானன் ஒருவருக்கு மட்டுமே தெரியும்! அதை என்னிடம் கூறும்படி நயமாக நான் கேட்டேன். அவர் என்ன கூறினார் தெரியுமா?'ரகசியம் என்பது ஒருவரிடமும் மட்டும் இருப்பது. அது அடுத்த நபருக்குப் போய்விட்டால், அது ரகசியம் அல்ல' என்று கூறினார்.அதுமட்டுமின்றி, ஒவ்வொருவரும் மரணம் அடையும் தேதியை முன் கூட்டியே தெரிந்துகொண்டால், ஒரே நிமிடத்தில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு உலகத்தையே அழித்து விடுவர். அதனால், இந்த உலகத்தைக் காக்கும் பொருட்டு அந்த ரகசியத்தை என்னிடமே நான் வைத்திருக்கிறேன். ஆனால், எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் ஒவ்வொரு வரையும் தேவைப்பட்ட போது அழைத்துக் கொள்கிறேன் என்று கூறினார். எனவே, எஜமான் இட்ட வேலையை, மறுசொல் கூறாமல் பாகுபாடு இன்றிச் செய்து வருகிறேன்! அவ்வளவுதான்!'' என்று விளக்கமாகக் கூறியது மரணம்.அடுத்த நிமிடமே, பயணிகள் மூவரும் அந்தப் பெரியவரின் வீட்டில் அன்றிரவு தங்கினர்.கடவுளும், குளிரும் ''உனக்கு எப்படி அனுமதி கிடைத்தது?'' என்று மரணத்தைப் பார்த்துக் கேட்டனர்.அதற்கு மரணம் சொன்ன பதில், ''ரகசியத்தை வெளியிட்டால் எனக்கு மரணம் ஏற்பட்டு விடும்!'' என்றது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !