டைனோ என் தோழன்! (25)
முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடந்த டைனோசர் உடலில் இருந்து டைனோ குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார், விஞ்ஞானி யோகிபாபு. டைனோ தொந்தரவாக இருப்பதாக கிடைத்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்த வந்தார் போலீஸ் அதிகாரி. இனி -சந்திரஜெயனிடம், 20க்கும் மேற்பட்ட புகைப்படங்களை காட்டினார் போலீஸ் கமிஷனர்.அவன் முதுகுப்பையில் டைனோ எட்டி பார்ப்பது போன்ற படங்களும் அதில் இருந்தன.''திருடன், கொள்ளைக்காரனை எல்லாம் தப்பிக்க விடுங்க... ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுங்க; ஐந்தறிவு உயிரினங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுங்க...'' கிண்டலாக கூறினான் சந்திரஜெயன்.''அதிக பிரசங்கிதனம் கூடாது தம்பி...''கண்டிப்புடன் கூறினார் கமிஷனர்.''டைனோ, யாரையாவது கடித்தது போல் புகைப்படம் இருக்கிறதா...'' ''கடிக்கும் வரை காத்திருக்க சொல்றீங்களா... அப்படி நடக்காமல் தடுப்பது தானே நல்லது...'' ''பொமேரியன் நாய் கூட, சீண்டினால் கடிக்கும்; டைனோவின் கழுத்தை நெரித்தால் கூட கடிக்காது. அது, சாது மட்டுமல்ல; மனிதன் மீது பேரன்பு வைத்துள்ளது...'' ''ஒரு கொடிய ஆட்கொல்லி மிருகத்துக்கு இதுபோல் சான்றிதழ் தராதீங்க தம்பி...''''உங்க வாதம் தவறு கமிஷனர்... அது ஆட்கொல்லி அல்ல...''''பட்டிமன்றம் நடத்தி, டைனோ, ஆட்கொல்லியா... இல்லையா... என்று தீர்பளிக்க முடியாது. சட்டத்தின் காவலராக இருக்கிறேன்; எதையும் சட்டத்தின் வழியேதான் பார்ப்போம்; உணர்வுப் பூர்வமாக சிந்திக்க முடியாது..''''மனிதருக்கு தானே சட்டம்... இயந்திரங்களுக்கு இல்லையே...'' ''எதிர்த்து வாதம் செய்யாதீங்க...'' ''எதற்காக வந்திருக்கிறீங்க என்பதை வெளிப்படையாக கூறுங்க ஐயா...'' ''சில சட்டப் பிரிவுகள்படி, நடவடிக்கை எடுக்க வந்திருக்கிறோம்...'' ''என்னென்ன பிரிவில் வழக்குப் பதிவு செய்வீர்கள்...''''நாங்கள் மட்டுமல்ல... வன விலங்கு குற்றத் தடுப்பு அமைப்பு, கஸ்டம்ஸ் அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளும் வந்திருக்கின்றனர்...'' என்றார் கமிஷனர்.''அவங்க எல்லாம் என்ன செய்யப்போறாங்க...'' ''வவ்வால், புலி, சிங்கம், முதலை, பென்குயின், பறக்கும் அணில், பெங்கால் பூனை, ஓநாய், முடை வளிமா, முள் எலி, தேவாங்கு, நரி, மரநாய், காட்டு பல்லி போன்றவற்றை வீட்டில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிய வன விலங்கான, டைனோசரை வளர்ப்பதும் தண்டனைக்குரிய குற்றம்...''பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், கொடிய வன விலங்கை வளர்த்தல், வளர்க்கும் வன விலங்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் என்பவை நீங்க செய்த குற்றங்கள்...''வன விலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் படியும், மிருக வதை தடுப்பு சட்டம், 1960ன் படியும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்...'' ''ஏன்... இன்னும் ஏதாவது சட்டப் பிரிவு விடுப்பட்டு இருக்கிறதா கமிஷனர்; அதையும் சொல்லுங்கள்...'' ''மேலே கூறிய குற்றங்களுக்கு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள், கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். நீங்க வளர்க்கும் மிருகங்களை பறிமுதல் செய்து, வன அதிகாரியிடம் ஒப்படைப்போம்...'' ''என் மாமா யோகிபாபு மற்றும் என் வழக்கறிஞரை கலந்து ஆலோசிக்க விரும்புகிறேன். அதற்கு உரிய அவகாசம் கொடுங்கள்...'' ''உங்களை கைது செய்து, சொந்த ஜாமினில் விடுவிக்கிறேன்; ஆனால், உங்க வளர்ப்பு மிருகத்தை பறிமுதல் செய்யப் போகிறேன்...'' ''என் பிணத்தை தாண்டி தான், டைனோவை நீங்க எடுத்து செல்ல முடியும்...'' ''தேவையற்ற வார்த்தை பேசாதீங்க; நீதிமன்றத்தில் திறமையாக வாதாடி, சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு வழிதேடுங்கள்...'' ''எவ்வளவு பணம் கொடுத்தால், இந்த நடவடிக்கையை விலக்கி கொள்வீர்கள்...'' ''எங்களுக்கே லஞ்சமா... மேலும், மேலும் குற்றங்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம் தம்பி...''கோபத்தில் சீறினார் கமிஷனர்.அப்போது குறுக்கே வந்து, ''ஐயா... என் மகன் பிறந்தநாளுக்கு, போன்சாய் டைனோசரை, விஞ்ஞானி யோகிபாபு பரிசாக தந்தார். அவன் ஒன்றும், டைனோவை காட்டிலிருந்து பிடித்து வரவில்லை; அதை துன்புறுத்தவும் இல்லை; பொதுமக்கள் அதன் அன்பில் நெகிழ்ந்து கொஞ்சினர்; டைனோ, யாரையும் துளியும் அச்சுறுத்தவில்லை...'' என்றார், சந்திரஜெயனின் அப்பா.''ஐயா... உங்க தரப்பு நியாயத்தை கேட்க நான் தயாரில்லை...'' என்றார் கமிஷனர்.இந்த உரையாடலின் ஊடே, வன அதிகாரிகள், தோட்டத்துக்குள் புகுந்தனர்.- தொடரும்...- வஹித்தா நாசர்