டைனோ என் தோழன்! (27)
முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடந்த டைனோசர் உடலில் இருந்து, டைனோ குட்டியை உருவாக்கி சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அது, தொந்தரவு செய்வதாக பறிமுதல் செய்தனர் அதிகாரிகள். அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. இனி -சிறுவன் சந்திரஜெயன் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்டார் நீதிபதி.தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர், ''கொடிய மிருகம், வீட்டு வளர்ப்பு மிருகம் என, இரு பிரிவு, மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளன; விதி விலக்காய், சில கொடிய மிருகம், மனிதருடன் நெருக்கமாய் பழகுவதை சுட்டி காட்டி, அதை பொதுமைப்படுத்தல் கூடாது...''டைனோ புது உயிரினமல்ல; என்ன தான், அதை வெட்டி, ஒட்டி உருவாக்கி இருந்தாலும், அதன் அடிப்படை குணம் மாறாது. சந்திரஜெயன், டைனோவுக்கு ஊறு விளைவிக்க வாய்ப்பு அதிகம்...''உணர்ச்சியை நாடகமாக போடுகிறார் எதிர்தரப்பு வழக்கறிஞர். டைனோவை நிரந்தரமாக வன இலாகா பாதுகாப்பில் பராமரிக்க உத்தரவிடுமாறு வேண்டுகிறேன்...'' என்றார்.வாதத்தை கேட்டபின் தீர்ப்பை வாசித்தார் நீதிபதி...''டைனோ கொடிய மிருகமல்ல; மக்கள் வளர்க்க கூடிய வளர்ப்பு மிருகம் தான். டைனோ, வன விலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் வராது; டைனோவால், யாரும் காயப்பட்டது போல், காட்சிகள் எதுவும் இல்லை...''டைனோவுக்கும், சந்திரஜெயனுக்கும் இடையேயான, பாச பிணைப்பை சட்டத்தால் பிரிக்கக் கூடாது; குற்றச்சாட்டுகளிலிருந்து சந்திரஜெயனை விடுவிக்கிறேன்; டைனோவை, சந்திரஜெயனிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறேன்...'' என்றார்.வன இலாகாவினர், அடைத்து வைத்திருந்த டைனோவை விடுவித்தனர்.அது, 'ழீயேய்...' என சத்தம் எழுப்பியபடி, ஓடி வந்தது.சந்திரஜெயன், அதை துாக்கி, கொஞ்சினான். 'மக்களுக்கு, இந்த வழக்கு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் சந்திரஜெயன்...' என, ஊடகங்கள் சுற்றி சூழ்ந்தன. ''மாமிச உணவுக்காக, மிருகங்களை கொல்லாதீர்; அவை மீது அன்பை செலுத்துங்கள்; மிருகம் மற்றும் மனிதரின் பரிபூரண அன்பு, இந்த பூமியை உன்னத நிலைக்கு உயர்த்தும். எனக்கு ஆதரவாக கருத்து கூறிய, கருணை உள்ளங்களுக்கு நன்றி...'' என்றான் சந்திரஜெயன்.பின் டைனோவை துாக்கியபடி, யோகிபாபு, தோழி தீவிதா மற்றும் பெற்றோருடன் வீட்டுக்கு புறப்பட்டான்.வீட்டருகே ஏராளமானோர் கூடியிருந்தனர். சந்திரஜெயனின் விடா முயற்சியை பாராட்டினர்.அப்போது, ''நீதிமன்ற தீர்ப்பு, சாதகமாக வந்தது மகிழ்ச்சியை தருகிறது; ஆனால், ஒரு விஷயம் என்னை உறுத்துகிறது. டைனோவை, கூண்டில் அடைத்து தான், அன்பை காட்ட வேண்டுமா... காட்டில் சுதந்திரமாக விட்டால் என்ன...'' என்றாள் தீவிதா.''டைனோ அளவில் சிறியது; காட்டில் பாதுகாப்பாக இருக்குமா...''சந்தேகம் தெரிவித்தான், சந்திரஜெயன்.''டைனோவை விட, சிறிய மிருகங்கள் காட்டில் சிறப்பாக வாழ்கின்றனவே...'' என்றாள் தீவிதா.''எந்த காட்டில் விடுவது...'' ''கண்காணிப்பும், பராமரிப்பும் உள்ள காட்டில், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் விடலாம்...'' ''நல்ல யோசனை...'' என்றான் சந்திரஜெயன்.''யோகிபாபு சாருக்கு ஒரு வேண்டுகோள்; டைனோவை மட்டும், காட்டில் விட்டால், தனிமையில் வாடும். மரபியல் வரைபடம் மூலம், போன்சாய் உத்தியில், ஒரு ஆண் டைனோவை உருவாக்கி தாருங்கள்; இரண்டையும் ஜோடியாய் காசிரங்கா சரணாலயத்தில் விடுவோம்...'' என்றாள் தீவிதா.''என்ன சொல்கிறாய்...'' என்றார் யோகிபாபு.''தோழி சொல்வது சரி தான்; அப்படியே செய்வோம் மாமா...'' என்றான் சந்திரஜெயன்.அதன்படி, ஆண் டைனோ குட்டி ஒன்று உருவாக்கப்பட்டது.அரசு அனுமதியுடன் காசிரங்கா தேசிய பூங்காவில், டைனோ குட்டிகளை விட்டனர். வன அதிகாரிகள் கை தட்டி வரவேற்றனர். காட்டுக்குள் மறைவதற்கு முன், டைனோ திரும்பி, 'போய் வருகிறேன்...' என்ற பொருள்பட, 'ழீயேய்...' என குரல் எழுப்பியது; கண்ணீர் மல்க கையசைத்தான் சந்திரஜெயன்.ஒரு ஆண்டுக்கு பின் -டைனோ ஜோடியைப் பார்க்க, விஞ்ஞானி யோகிபாபுவுடன், சந்திரஜெயன், அவனது பெற்றோர், தோழி தீவிதாவும் சென்றனர். பூங்கா முழுக்க தேடியும் அவற்றை காணவில்லை.வெறுமையுடன் வெளியேற முயன்றவர்கள் முன், டைனோ ஜோடி, இரு குட்டிகளுடன் நின்றதைக் கண்டு மகிழ்ந்தனர்.ஓடி சென்று, டைனோவுக்கு முத்தமழை பொழிந்தான் சந்திரஜெயன்; அதன் மீது காட்டு வாசனை அடித்தது. அழிந்து போன ஓர் உயிரினம் மீண்டும் உலகில் தழைக்க துவங்கியது.''ஐ லவ் யூ டைனோ...''சந்திரஜெயனின் நெகிழ்ச்சி, காடு முழுதும் பரவி எதிரொலித்தபடி இருந்தது.- முற்றும்.- வஹித்தா நாசர்