முட்டை வியாபாரி
திருப்பத்துார், ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 6ம் வகுப்பு படித்தபோது கணித ஆசிரியராக இருந்தார் ரங்கநாதன். எனக்கு, கணிதம் வராது; அவரது பாடவேளையில் மட்டும் கடைசி பெஞ்சுக்கு போய் விடுவேன்.தேர்வில் முட்டை மதிப்பெண் தான் கிடைக்கும். நண்பர்களிடம், ஆசிரியரை, 'முட்டை வியாபாரி' என வர்ணித்து ஆதங்கத்தை தீர்த்து கொள்வேன். இதை அறிந்ததும், தனியாக அழைத்து, 'தன் குற்றம், குறைகளை ஆராயாமல், மற்றவரை பழிப்பது நல்லதல்ல. நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால், நான் ஏன் உன் கண்ணுக்கு, முட்டை வியாபாரியாக தெரிய போகிறேன்...' என்று அறிவுரைத்தார் ஆசிரியர்.அன்று முதல் கவனம் எடுத்து கற்றேன். தொடர் முயற்சியால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வெற்றி பெற்றேன்.தற்போது, என் வயது, 68; கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். தவறு செய்தவர்களை கண்டிக்க முற்படும் முன், என்னிடம் உள்ள குறைகளை ஆராய்வேன். தண்டிக்கும் தகுதி எனக்கு இருக்கிறதா என்பதை சிந்தித்த பின், முடிவு எடுப்பதை வழக்கமாக்கியுள்ளேன். அந்த ஆசிரியர் விதைத்த சிந்தனையை பொன் எழுத்துக்களாக மனதில் செதுக்கியுள்ளேன்.- டி.கே.சுகுமார், கோவை.