உள்ளூர் செய்திகள்

பசியை நீக்கு!

மதுரை ரயில் நிலையம் -பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க, வேகமாக ஓடி வந்தனர் நந்தன் - உஷா தம்பதி; தோளில், இரண்டு வயது குழந்தை சிவா இருந்தான். 'அப்பாடா... இன்னும் சிக்னல் போடல...'பெருமூச்சு விட்டப்படி, ரயில் பெட்டியில் ஏறினர். ஒரு வழியாக இடம் தேடி அமர்ந்தனர்.ரயில் நிலையம் விசித்திரமான இடம்; உறவுகளை பிரிக்கவும், இணைக்கவும் செய்யும்; சில மனிதர்களை, சில மணி நேரம் நட்பாக்கும்.ஒருவாறு ஆசுவாசப்படுத்தினாள் உஷா. பின், குழந்தைக்கு இட்லி ஊட்டலாம் என, உணவு கூடையை தேடினாள்.அப்போது அலைபேசி ஒலித்தது. எடுத்ததும், ''சாப்பாட்டு கூடையை வீட்டிலேயே விட்டு போய் விட்டாயே...'' என புலம்பினாள் அம்மா.''பரவாயில்லை அம்மா... சமாளிச்சிக்கிறேன்...''தொடர்பை துண்டித்தாள்.எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த, 12 வயது சிறுவன், அம்மா உமா காதில் ஏதோ கிசுகிசுத்தான்.உடனே, ''சாப்பாடு எடுத்துட்டு வரலயா... பரவாயில்ல... பரோட்டா, இட்லி, பன்னீர் குருமா இருக்கு; சாப்பிடலாம் வாங்க...'' என அழைத்தாள் உமா.''வேண்டாம்மா... அடுத்த ஸ்டேஷன்ல ஏதாவது வாங்கிக்குறோம்...'' ''இதில் என்ன சிரமம் இருக்கு... பெரியவங்க பசி தாங்கலாம்; பிஞ்சு குழந்தை, எப்படி தாங்கும்...'' என்றவாறு உணவை தட்டில் பரிமாறி, ''குழந்தைக்கு ஊட்டு...'' என்றாள்.நன்றியுடன் பெற்று பகிர்ந்துண்ண துாண்டிய சிறுவனை பாராட்டினாள் உஷா.சிரித்தபடி, ''ஆன்டி... யோசிக்க ஒண்ணும் இல்ல; என் பாட்டி தான், இதை கற்று தந்தாங்க; நாங்க, விடுமுறையில் ஊருக்கு போவோம்... அங்கு நீச்சல் அடிக்க குளத்துக்கு போறப்போ புளியோதரை, எலுமிச்சை சாதம், மாங்கா சாதம் நிறைய எடுத்து வருவாங்க...''விளையாடி, களைப்போடு திரும்பும் போது, உணவை எங்களுக்கு தராமல், அங்கு வேலை செய்றவங்களுக்கு முதலில் கொடுப்பாங்க... நமக்கு போக, மீதம் இருந்தா கொடுக்க வேண்டியதுதானே... என்று கேட்பேன். ''அதற்கு, 'நாம் சாப்பிடும் முன், எவராவது பசியோடு இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு உணவு தந்த பின், நாம் பசியாறணும்; அதுதான் உயர்ந்த பண்பு...' என, கூறுவார்.''இதையே அவ்வையார், 'ஐயம் இட்டு உண்' என்றார். என் பாட்டி அதை வாழ்க்கையில் செய்து காட்டினார்...'' என்றான் சிறுவன்.''பாட்டி அழகாக கற்று தந்துள்ளார்...''பாராட்டினாள் உஷா. பொதிகை ரயில் கூவி மகிழ்ச்சியை அழகாக வெளிக்காட்டியது.குழந்தைகளே... பசியுடன் இருப்பவருக்கு உணவு கொடுத்து உபசரிக்க வேண்டும்!- பா.செண்பகவல்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !