கொழுத்த கழுதை!
முல்லைபுரம் என்ற நாட்டைச் நரசிம்மர் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார்.மன்னர் ஒருநாள் மந்திரியோடு நகர்வலம் சென்று கொண்டிருந்தார். அப்போது, தெருவில் கழுதைகள் எல்லாம் கூட்டமாக சென்று கொண்டிருந்தன. அந்தக் கழுதைகள் எல்லாம் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டன. அந்தக் கழுதைகளைக் கூர்ந்து கவனித்த மன்னரோ மந்திரியை நோக்கினார்.''மந்திரியாரே! இங்கே சென்று கொண்டிருக்கிற கழுதைகள் எல்லாம் வறுமையில் வாடுவதைப் போன்று தெரிகிறது. நாம் உடனடியாக இக்கழுதைகளின் வறுமையைப் போக்க வேண்டும். அதற்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்,'' என்றார்.அதனைக் கேட்ட மந்திரி, ''அரசே! தாங்கள் இவ்வாறு கூறுவது நகைச்சுவையாக இருக் கிறது. நாம் இப்போது கழுதைகளைப் பார்க்க வரவில்லை. மக்களை நேரடியாகப் பார்த்து அவர்களின் குறைகளைத் தீர்க்க வந்துள்ளோம். இப்போது நம் நாட்டில் தீர்க்க வேண்டியது கழுதைகளின் குறையையல்ல... மக்களின் குறையைதான். எனவே, நீங்கள் மக்களின் குறையைப் போக்க முயற்சி செய்யுங்கள்,'' என்று கூறினார்.மந்திரி அவ்வாறு கூறியது மன்னருக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் வரவழைத்தது.''மந்திரியாரே! இந்தக் கழுதைகளை எப்படிக் காப்பாற்றலாம் என்றுதான் நான் உங்களிடம் யோசனை கேட்டேன். அதற்கு உமக்கு ஏதாவது யோசனை தெரிந்தால் சொல்லும். இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு இரும்,'' என்றார் மன்னர்.மன்னர் தன்னிடம் இவ்வாறு கோபமாகக் கூறுவார் என்று மந்திரியார் எதிர் பார்க்கவில்லை. உடனே அவர் இனிமேல் மன்னரிடம் ஏதாவது பேசி வெறுப்பினை சம்பாதித்துக் கொள்ள வேண்டாமென முடிவு செய்தார்.மன்னரோ தெருவில் நின்று கொண்டிருந்த காவலர்களை அழைத்தார்.''காவலர்களே, நீங்கள் உடனடியாக இந்தக் கழுதைகளையும், இந்தக் கழுதைகளுக்குச் சொந்தக்காரர்களையும் அரண்மனைக்குக் கூட்டிச் செல்லுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.மன்னரின் கட்டளையை ஏற்றுக் கொண்ட காவலர்களும் உடனடியாக அந்தக் கழுதைகளையும், அவற்றின் சொந்தக்காரர்களையும் அரண்மனைக்குக் கூட்டிச் சென்றனர்.அதன்பின்னர், மன்னரும் மந்திரியும் அரண்மனையை வந்தடைந்தனர்.மன்னர் அரண்மனைக்கு வந்த கழுதைகளை ஒன்று விடாமல் பார்வையிட்டார். பின்னர் கழுதைகளுக்கு சொந்தக்காரர்களை அழைத்தார்.''இதோ பாருங்கள், நீங்கள் உங்களுடைய கழுதைகளுக்குச் சரியானபடி உணவு கொடுக்கவில்லை. அதனால் அவைகள் எல்லாம் எலும்பும், தோலுமாகக் காட்சியளிக்கின்றன. உங்களுடைய கழுதைகள் எல்லாம் அரண்மனையில் நிற்கட்டும். ஒரு மாதம் அவைகள் இங்கு கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுக் கொழுகொழுவென்று வளரட்டும். அதன் பின்னர் அவைகளை உங்களுடைய இருப்பிடத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லலாம். நீங்களும் அரண்மனையில் தங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் இங்கே அரண்மனையில் கிடைக்கும்,'' என்றார் மன்னர்.மன்னர் இவ்வாறு கூறியதும் கழுதையின் சொந்தக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அரண்மனையில் தங்கிக் கொண்டு சுக போகங்களை அனுபவிக்க நமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நாம் இந்த சந்தர்ப்பத்தைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்று மனதில் எண்ணினர்.''அரசே! ஒரு மாதம் என்ன? இன்னும் ஓரிரு மாதங்கள் ஆனாலும் பரவாயில்லை. எங்கள் கழுதைகள் நன்றாகக் கொழுத்து சதைப்பற்றுடன் காணப்படட்டும். அதன் பின்னர் நாங்கள் தங்களிடமிருந்து விடைபெற்று, எங்கள் கழுதைகளையும் அழைத்துச் செல்கிறோம்,'' என்றனர்.மன்னரும் அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அவர்களது விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். மன்னரின் ஏற்பாட்டில் கழுதைகளுக்கு எல்லாம் நல்ல உணவுகள் கிடைத்தன.ஒரு மாதத்தில் கழுதைகள் எல்லாம் நன்கு கொழுத்து பெருத்த சதைப்பற்றோடு காணப்பட்டன.அந்தக் கழுதைகளைப் பார்க்க மன்னருக்கு ஆர்வமாகயிருந்தது. 'தன்னோடு மந்திரியையும் அழைத்துச் சென்று அவருக்கும் கழுதைகளைக் காட்ட வேண்டும்' என்று விரும்பினார் மன்னர்.உடனே தன்னோடு மந்திரியையும் அழைத்துக் கொண்டு கழுதைகள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தார். மந்திரி சற்று தள்ளி நின்று கொண்டார். மன்னரோ ஆசையோடு ஒரு கழுதையின் அருகே சென்றார்.அந்தக் கழுதையின் முதுகில் தன் கையை வைத்து அன்பாகத் தடவிக் கொடுத்தார்.அந்தக் கழுதை சற்று நெளிந்தது. தன் தலையைத் தூக்கி ஆட்டியது.மன்னர் மகிழ்ச்சியோடு அந்தக் கழுதையின் முதுகை இன்னும் அதிகமாகத் தடவிக் கொடுக்கவே அதற்கு ஆத்திரம் ஏற்பட்டது. தனது பின்னங்கால்களை நன்றாகவே மேலே தூக்கித் துள்ளியவாறு தன் பலங்கொண்ட மட்டும் மன்னரை எட்டி உதைத்தது.கழுதையின் உதையைத் தாங்கிக் கொள்ளாத மன்னரோ அலறியடித்தபடி பொத்தென்று தரையில் விழுந்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. பற்களும் ஆங்காங்கே தெறித்து ஓடின. காவலர்களும், மந்திரியும் ஓடோடி வந்து மன்னரைத் தூக்கி நிறுத்தினர்.மன்னரால் எழுந்து நிற்க முடியவில்லை. அப்படியே மந்திரியின் தோளில் சாய்ந்து கொண்டார். மந்திரியோ பரிதாபத்தோடு மன்னரைப் பார்த்தார்.''அரசே! தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டால் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். நலிவுற்ற நாட்டு மக்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். அவர்களுக்குச் சிறப்பு செய்வதை விட்டு விட்டு, இந்தக் கழுதைகளுக்கு சிறப்பு செய்தீர்களே. அதனால்தான் இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டீர்கள்,'' என்றார். மந்திரி சொன்னது சரிதான் என மன்னர் உணர்ந்தார். அன்றிலிருந்து அவர் மந்திரியின் ஆலோசனையையும் கேட்டு அதன்படி செயல்பட்டார்.***