முன்னாள் திருடன் இந்நாள்...!
சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக, சிறுவயதிலே திருட்டுத் தொழிலில் ஈடுபடும் சிறுவர்கள், வாலிபர்களான பின்பும் தொடர்ந்து திருட்டுத் தொழிலை மேற்கொண்டு, காலப்போக்கில் மனம் திருந்துவதோடு, அதற்குப் பதிலாக மக்களுக்குப் பல நன்மைகளையும் செய்வர்.1707ம் ஆண்டில் பிறந்த கிளாட்கிரே பில்லன் என்பவர் பிரஞ்சு நாட்டை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேற்பட்ட வறுமையின் காரணத்தால், பல இடங்களில் திருடத் தொடங்கினார். திருட்டுத் தொழிலை மேற்கொண்ட இவர், சிறை தண்டனைக்கும் ஆளானார். பின்பு மக்களின் ஒழுக்கத்தைக் கெடுக்கக்கூடிய ஆபாசமான புத்தகங்களை எழுதினார். அதன் பேரிலும் சிறை தண்டனை பெற்றார்.அத்தோடு நிற்காமல், நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் சில செயல்களிலும் ஈடுபடவே, ஐந்து ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்பட்டபோதுதான், தான் செய்த தவறுகளையெல்லாம் உணர்ந்தார்.திருட்டுத் தொழில், வழிப்பறி, பிட்பாக்கெட், ஆபாசமான புத்தகங்கள் விற்றது, நாட்டிற்குத் தீங்கு விளைவித்தது அனைத்தையும் எண்ணி வருந்தினார். 'இனிமேல் இதுபோன்ற தவறான தொழில்களைச் செய்யக்கூடாது. நேர்மையான தொழில் செய்ய வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும்' என்று உறுதி கொண்டார். சிறுவயதில் விட்ட கல்வியைத் தொடர்ந்தார். பட்டங்கள் பல பெற்றார்.வேலை நிமித்தமாக, பல்வேறு பதவிகளுக்கு நேர்முகத் தேர்விற்குச் சென்றார். அதில் சென்சார் போர்டின் நீதிபதியாக செலக்ஷன் ஆனார். பிரெஞ்சு நாடே போற்றும் அளவிற்குப் புகழ் பெற்றார் பில்லன்.திருடனாகவும், ஆபாசப் புத்தகங்களை எழுதுபவராகவும் இருந்த பில்லன், பேரும் புகழும் பெற்றதற்கு, திருந்திய மனமும், விடாமுயற்சியும், கடுமையான உழைப்புமே காரணம்.'தவறு செய்தவன் திருந்தியாகணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்!''நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி!' என்ற கருத்தை உணர்த்தும் பாடலை நினைவூட்டி, தன்னைப் போல எல்லாரும் திருந்தி வாழ்வில் உயர வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திருந்தி வாழ்ந்த பில்லன், 1777ம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.***