கண்டுபிடிச்சேன்!
குன்றத்துார் கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகராஜன், நல்லமுத்து; இருவரும் வியாபாரிகள்; நெருங்கிய நண்பர்களும் கூட; இணைந்தே, வியாபாரத்துக்கு செல்வர்.ஒரு நாள் -வியாபார பொருட்களுடன், பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றனர்; நல்ல லாபம் கிடைத்தது.ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ''நம் கையில், ஏராளமான பணம் உள்ளது; இரவு நேரத்தில் பயணம் செய்வது ஆபத்தானது,'' என்றான், நல்லமுத்து.''சரி தான்... என்ன செய்யலாம்...'' என்றான் நாகராஜன்.''அதோ தெரிகிறதே... அந்த ஆலமரத்தடியில், குழி தோண்டி, பணத்தை புதைத்து விடுவோம்; நாளை காலை வந்து எடுத்துக் கொள்ளலாம்,'' என்றான். ஒப்புக் கொண்டான் நாகராஜன். பணத்தை, ஒரு பையில் போட்டு, ஆலமரத்தடியில் புதைத்தனர்.மறுநாள் - இருவரும் அங்கே வந்தனர்.புதைத்த இடத்தில் பணத்தை காணவில்லை.புலம்பிய நாகராஜன், ''நாம் பேசியதை, திருடன் கேட்டு, கொள்ளையடித்து சென்று விட்டான்...'' என்றான்.''நண்பனே... அடுத்த முறை சந்தைக்கு சென்று வரும் போது, பணத்தை இதே இடத்தில் புதைத்து வைப்போம்; கண்காணித்து திருடுபவனை பிடித்து விடலாம்...'' என்றான், நல்லமுத்து.அதற்கு மறுத்தான் நாகராஜன்.''வேண்டாம்... ஏற்கெனவே பணத்தை இழந்து விட்டோம்; மீண்டும் ஒருமுறை தெரிந்தே இழக்க வேண்டுமா...'' என்று கேட்டான்.மறுமுறை சந்தையில் இருந்து திரும்பிய போது, ''நாகராஜா... உன் பணத்தையும் கொடு; முன்பு போலவே புதைத்து வைப்போம்...'' என்றான் நல்லமுத்து; தயங்கினான் நாகராஜன்.''இந்த முறை நாம் திருடனை கண்டுபிடித்து விடலாம்; தயங்காதே...'' என்று பணத்தை வாங்கி, ஒரு பையில் போட்டு, குழி தோண்டி புதைத்து வைத்தான்.மறுநாள் --புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தனர்; பணத்தை காணவில்லை.புலம்பிய நாகராஜன், ''நான் தான் சொன்னேனே... ஏற்கெனவே பணத்தை இழந்து விட்டோம்; மீண்டும் இழக்க வேண்டாமென்று; நீ தான் கேட்கவில்லை...'' என்றான்.''நாகராஜா... யார் திருடன் என்பதை, இப்போ கண்டுபிடித்து விடலாம்...''''எப்படி...''''பணம் வைத்திருந்த பையில், சிறிய ஓட்டை போட்டிருந்தேன்; ஒரு வித மாவை, அந்த பையில் நிரப்பியிருந்தேன். பையின் ஓட்டை வழியே மாவு சிந்தி, திருடன் வீடு வரை கோடு போட்டிருக்கும். அதை, பின் தொடர்ந்து சென்றால், திருடன் வீட்டைக் கண்டுபிடித்து விடலாம்...'' மாவுக் கோட்டை பின் தொடர்ந்தனர்; ஒரு வீட்டின் முன், முடிந்தது; அந்த வீட்டில் இருந்த திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து, பணத்தை திரும்ப பெற்றனர். நல்லமுத்துவின் சாதுர்யத்தை பாராட்டினான் நாகராஜன்.குட்டீஸ்... பிரச்னை வந்தவுடன், 'இப்படி செஞ்சிட்டோமே...' என புலம்பி அழுது உடைஞ்சி போகக்கூடாது. அதிலிருந்து வெளியே வருவதற்கான வழியை யோசிச்சா, நல்லமுத்துவை போல நீங்களும் வெற்றி பெறலாம்.