உள்ளூர் செய்திகள்

தாத்தாவின் நேர்மை!

வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2003ல், 8ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் பழனி. தேர்வு எழுதும் விடைதாள்களை, பெற்றோரிடம் காட்டி, கையெழுத்து வாங்கி வர சொல்வார். படிப்பில் நான் சுமார் ரகம். காலாண்டு விடைத்தாளை அப்பாவிடம் காட்டினேன்; சரியாக பார்க்காமல் கையெழுத்து போட்டு விட்டார். அதை வாங்கிப் பார்த்த என் தாத்தா, தவறாக எழுதிய விடையை சுட்டிக்காட்டி, 'இதை ஏன் ஆசிரியரிடம் கூறவில்லை...' என்று கேட்டார். மிகுந்த அலட்சியத்துடன், 'ஏதோ மதிப்பெண் வந்ததா, விடு தாத்தா...' என்றேன். உடன்படாதவர் மறுநாளே, வகுப்புக்கு வந்தார். ஆசிரியரை சந்தித்து விபரத்தைக் கூறி, 'மதிப்பெண்ணை குறையுங்கள்; அப்போதுதான் தவறை உணர்வான்...' என்று கேட்டுக்கொண்டார். பின், என் படிப்பு, நடத்தையை அறிய, பள்ளிக்கு வருவதை வழக்கமாக்கினார்.அவரது அணுகு முறையால் நெகிழ்ந்த ஆசிரியர், 'உன் தாத்தாவின் நேர்மை, நிச்சயம் உன்னை உயர்த்தும்...' என்று வாழ்த்தினார். என் வயது, 31; எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளேன். நேர்மையுடன் வாழ அறிவுரைத்த தாத்தாவை, கண்ணீருடன் மனதில் கொண்டுள்ளேன்.- தே.சிலம்பரசு, வேலுார்.தொடர்புக்கு: 63802 99585


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !