காகம் செய்த உதவி!
மதிய நேரம் தவறாமல் நரேன் வீட்டை நோக்கி வந்துவிடும் அந்தக் காகம்.நரேன் தன் வீட்டிலிருந்து ஒரு கவளம் சோற்றினை எடுத்து, தவறாமல் காகத்திற்கு வைத்துவிடுவார்.காகமும் மற்ற காகங்களை எல்லாம் அழைத்து அவற்றுடன் சேர்ந்து அந்த சோற்றினை சாப்பிட்டு விட்டு செல்லும்.நரேனின் பக்கத்து வீட்டில், பாபு என்பவன் குடியிருந்தான். அவன் மிகவும் கருமித்தனமானவன். யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டான். தான் சாப்பிடுகின்ற உணவுப் பொருள் தரையில் கொட்டிவிட்டால், எறும்பு எடுத்துச் சென்று விடுமே, என்று சிறிது கூட தரையில் கொட்டாத வகையில் சாப்பிடுவான்.ஒருநாள் நரேன் வழக்கமாக காகத்திற்கு சோறு வைப்பதை பாபு பார்த்தான்.''மதியழகா! உனக்கு வேறுவேலையில்லையா? நீ எதற்காக காகத்திற்கு சோறு வைக்கிறாய்? அதனால் உனக்கு என்ன லாபம்?'' என்று கேட்டான்.கஞ்சத்தனம் படைத்த பாபுவிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லையென்பதை <உணர்ந்து கொண்ட நரேன், அதற்கு பதில் கூறாமல் புன்னகையுடன் சென்று விட்டான்.மறுநாள் காகத்திற்கு சோறு வைக்கின்ற நேரம், காகம் தன் அலகில் ஒரு வெள்ளிக் கிண்ணத்தை எங்கிருந்தோ எடுத்து வந்து, நரேனுக்கு பரிசாகக் கொடுத்தது.பளபளப்பாக மின்னும் அந்த வெள்ளிக் கிண்ணத்தை பார்த்த பாபு, உடனே ஓடோடி நரேனிடம் வந்தான். ''நண்பா! என்ன இது ஆச்சர்யமாக இருக்கிறது! இந்த காகம் உனக்கு வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து வந்துள்ளதே,'' என்று வியப்போடு கேட்டான்.அதனைக் கேட்ட நரேன் சிரித்தப்படியே, ''பாபு! நாம் ஒருவருக்கு உதவி செய்தால் நமக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைக்கும். இத்தனை நாட்களாக இந்தக் காகத்திற்கு நான் சோறு வைத்ததின் பயனாக, இந்தக் காகம் எனக்கு வெள்ளிக் கிண்ணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளது. நாம் ஒருவருக்கு உதவி செய்தால் நமக்குப் பிறரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். உன்னைப்போல் கருமித்தனத்தோடு எவரோடும் ஒட்டாமல் வாழ்ந்தால், யாரும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்,'' என்று கூறினான்.நரேன் கூறியதைக் கேட்ட பாபு, தன் தவறை எண்ணி மனம் திருந்தினான். ஒரு காகத்திற்கு இருக்கின்ற அறிவு கூட நமக்கு இல்லையே! என்று மனம் வருந்தினான். அன்று முதல் தனது கருமித்தனத்தை விட்டுவிட்டான் பாபு.***